வானம் கைக்குள் ஒடுங்கும்
சின்னமணல்மேடு த.இராமலிங்கம்
உழைப்பை நம்பு பாப்பா உயர்வை அதுவும் தருமே உழைக்கா தவரின் உறவால் ஓயாத் துன்பம் வருமே! உழைக்கும் வழியைக் காட்டு உலகம் உன்னைத் தொடரும் உழைப்பில் இருக்குப் பிழைப்பு. உணர்ந்தால் இல்லை இழப்பு! எறும்பாய் உழைக்கா தவரை எழுத்துப் பிழையாய் விலக்கு இரும்பாய் உறுதி காட்டு! என்றும் உழைத்தல் இலக்கு! உலகத் தாயின் கண்ணில் உழைப்போர் தாமே இமையாம் உலகச் சக்கரம் உருள உழைக்கும் இனமே அச்சாம். உழைப்போர்க் கில்லை தோல்வி உறுதி! வெற்றி உறுதி! உழைப்பால் உயர்ந்தோர் தாமே உலகை இயக்கு கின்றார். எனவே பாப்பா நீயும் இமைக்கும் பொழுதும் சோர்வை மனத்தில் கொள்ளா துழைத்தால் வானம் கைக்குள் ஒடுங்கும்.