அரசே பெண்களுக்கு குறைந்தவட்டியில் கடன் கொடுக்க வேண்டும்
புதுதில்லி, ஆக.26- நுண்நிதி நிறுவனங்களால் கொடுமைக்கு உள்ளான பெண்களுக்குத் தீர்வு காணும் விதத்தில் அரசே பெண்களுக்கு குறைந்தவட்டியில் கடன் கொடுக்க வேண்டும் என்றும் பொதுத்துறை வங்கி கள் நுண்நிதி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்காமல் நேரடியாக பெண்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் நடுவர்கள் தெரிவித்தார்கள். அதிகரித்து வரும் மகளிரின் கடன்சுமை மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் கொள்ளை குறித்த தேசிய பொது கலந்தாய்வு கூட்டம், புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில், ஆகஸ்ட் 23-24ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே தொடங்கி வைத்தார். தலைவர் ஸ்ரீமதி தலைமை வகித்தார். 9 மாநிலங்களைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மதன் பி லோகூர், பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், மூத்த பத்திரிகையாளர் பமீலா ஃபிலிப்போஸ், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் கீர்த்தி சிங், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேள னத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ ஆகியோர் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்த பொது விசாரணையில், நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று இன்னலுற்ற 9000 பெண்களிடம் அகில இந்திய அளவில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தொகுப்பை முனைவர் கீர்த்தியும் முனைவர் அர்ச்சனா பிரசாத்தும் முன்வைத்து விவரித்தனர். இந்த ஆய்வறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி, இந்த ஆய்வ றிக்கைக்கு வித்திட்ட கொள்கை மற்றும் ஒழுங்க மைப்பு சூழ்நிலை பற்றி கூறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, ‘நபார்டு’ வங்கி ஆகியவற்றின் கொள்கை ஆவணங்கள், பல்வேறு மாநில சட்டங்கள் ஆகியவை பற்றி ஆய்வு செய்தது. இரண்டாவது பகுதி ஆய்வறிக்கையின் முழு விவரங்களையும் அளித்தது. மூன்றாவது பகுதி மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை அரசின் முன்வைத்தது. 6000க்கும் மேற்பட்ட மகளிர் தங்கள் துயரங்கள் குறித்து வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.
சிலர் கலந்தாய்வின் போது மேடையேறி தங்கள் துயரங்களை நடுவர் முன் பகிர்ந்துகொண்டனர். எத்தனை சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெற்றார்கள், கடன் பெற்ற அசல் தொகை எவ்வளவு, இதுவரை எவ்வளவு வட்டித் தொகை கட்டப்பட்டுள்ளது, கட்ட வேண்டிய மீதித்தொகை எவ்வளவு, என்னவிதமான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள், நீதிமன்றத் திற்கு சென்றார்களா, என்ன தீர்ப்பு கிடைத்தது என்பது போன்ற விசாரணைகளை நடுவர்கள் நடத்தினர். திருவள்ளூர் லதா தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணியான ஜி.லதா, தான் பெற்ற துயரங்கள் குறித்து பகிர்ந்துகொண் டார். இவர் ஓர் விவசாயத் தொழிலாளி. வீடு கட்டு வதற்காக பொதுத் துறை வங்கிகளை முதலில் அணுகி கடன் கேட்டுள்ளார். ஆனால் பொதுத்துறை வங்கிகள் பல்வேறு விதமான ஆவணங்கள், உத்தரவாதங்கள் போன்றவற்றை கேட்டு கடன் தர மறுத்துள்ளன. நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இவரது சில உறவினர்கள் அவற்றை அணுகு மாறு பரிந்துரைத்துள்ளனர். ஃபிங்கர் (Finger), ஈக்விட்டா( Equita), யூனியன் சிட்டி (Union City), யூ ஷேப் (U shape), பெல் ஸ்டார் (Belstar) ஆகிய வங்கிகள் இவர்கள் பகுதிகளில் செயல்படுகின்றன. முதலில் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் கடன் பெற்ற லதா, அந்தக் கடனை அடைக்க பல்வேறு நிறுவனங்களிடம் கடன் பெறும் நிலை ஏற்பட்டு கடன் வலையில் மாட்டிக்கொண்டார். “ஏழை மக்கள் என்றால், பொதுத்துறை வங்கிகள் எப்படியாவது அவர்களுக்கு கடன் அளிக்காமல், பல்வேறு ஆவணங்களை கேட்டு தட்டிக்கழிக்கின் றன.
ஆனால் இந்த நுண்நிதி நிறுவனங்களுக்கு வெறும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, பான் கார்டு, புகைப்படம் இருந்தால் போதுமானது. எனவே இவர்களிடம் எளிதில் கடன் கிடைக்கிறது என்று நம்பி நாங்கள் வாங்கினோம். வாங்கிய பின்தான் எவ்வளவு பெரிய வலையில் மாட்டிக்கொண்டோம் என்று தெரி கிறது” என்றார் லதா. இந்த ஆய்வில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான பெண்களின் வாக்கு மூலமும் இந்தக் கருத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது. முதலில் எளிதாகக் கடன் கொடுத்துவிட் டார்கள். சில மாதங்கள் தவணை கட்டிய பின்பு, நிலையான வருமானம் இல்லாத தால் சில தவணைகளை கட்ட இயல வில்லை. சில சமயம் எந்தப் பணியும் கிடைக்கவில்லை. எப்பொழுதெல்லாம் தவணை கட்ட முடியவில்லையோ அப்போது நுண்நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் வீடு தேடி வந்து கன்னாபின்னாவென்று கெட்ட வார்த்தைகள் சொல்லி கடன் பெற்றவர்களை திட்டுகிறார்கள். இவர்களது அநாகரிக சொற்களை காதுகொடுத்து கேட்கமுடியாமல் கடன் பெற்றோர் பலர், அவர்களைக் கண்டாலே ஏதேனும் புத ருக்குள்ளோ மரத்தின் மீதோ ஒளிந்துகொள்கின்ற னர். வெகு நேரம் அதிலேயே இருந்துவிட்டு நடுநிசியில்தான் வீடு திரும்புகின்றனர். ஒரு சில தவணைகள் கட்டவில்லை என்றாலே வட்டிக்கு மேல் வட்டி போட்டு அசலை அதீதமாக அதிகரித்துவிடுகிறார்கள். ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லை எனில் உங்கள் மேல் காவல் துறையில் புகார் அளிப்போம், அடியாள் வைத்து அடித்து துவைப்போம் என்றெல்லாம் மிரட்டு கிறார்கள்.
எங்கள் ஊரில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நானும் அப்படித்தான் நினைத்தேன், திருத்தணியில் நடந்த மாதர் சங்கத்தின் மாநாட்டிற்கு செல்லும்வரை. அதன் பின் நுண்நிதி நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளேன் என்றார் லதா. புதுச்சேரி உமா வினாயகம் புதுச்சேரியிலிருந்து வந்து வாக்குமூலம் அளித்த உமா வினாயகம், ஜனா வங்கியில் பெற்ற ரூ.4.5 லட்சம் கடனுக்கு ரூ.10இலட்சம் கேட்கப்பட்ட தாகவும் கடனை கட்ட முடியாததால் அவரது வீடு ஜப்தி செய்யப்பட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டார். ரூ.4.5 இலட்சம் கடனில் ரூ.1.5 இலட்சம் திருப்பி செலுத்திய பின்பும் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். வங்கியிலிருந்து வந்த கடிதங்கள் கடன் வாங்கும் போது காண்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் என்ன விதிகளுக்கு கையெழுத்து போட்டோம், என்ன ஆணை வந்திருக்கிறது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. இவரது வீடு ஜப்தி செய்யப்பட விருக்கிறது என்று புரிந்துகொள்ளவே அவர் பல்வேறு வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. வீட்டை ஜப்தி செய்ய வந்தவர்கள் அரை மணிநேரம் கால அவகாசம் கொடுத்து உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள், வீட்டை பூட்டப்போகிறோம் என்று கூறியுள்ளனர்.
வங்கி ஊழியர்களு டன் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். திடீரென வீட்டை எப்படி பூட்டுவது? 75 வயதை தாண்டிய மாமியார், வயது வந்த பெண் குழந்தைகள் எல்லோரும் எங்கு செல்வது? ஒரு வார அவகாச மாவது கொடுங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டேன். அவர்கள் மனம் இரங்கவே இல்லை. காலையில் சமைத்த உணவைக் கூட நாங்கள் சாப்பிட முடியவில்லை. எங்கள் வீட்டை விட்டு எங்களை விரட்டிவிட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக எப்படி வீடு பார்ப்பது, எந்த வேலைக்கு செல்வது, என்று ஒன்றுமே புரியாமல் நடைபாதையில் வசித்தோம். நீதிமன்றத்திற்கு சென்றால், வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு பெறுங்கள் என்று தீர்ப்பு வந்தது என்றார் உமா. மகாராஷ்டிரா ஆயிஷா மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயிஷா, எஸ்கே எஃப் நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். ஆயிஷாவின் கணவர் எந்த வேலையும் செய்த தில்லை. எனவே இவர் கடன் பெற்று சொந்த தொழில் தொடங்கியுள்ளார். ஆனால் தொழிலில் லாபம் ஈட்ட முடியாததால் கடனை அடைக்க முடியவில்லை. அப்போது அந்நிறுவன முகவர்கள், இன்றிரவு என்னுடன் உறவு வைத்துக்கொள், இந்த மாதம் வட்டி செலுத்தாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி யுள்ளார்.
இதற்கு அவரது கணவர், அவர்கள் சொன்னபடி செய், கடனை நம்மால் அடைக்க முடியாது என்று மனைவியையே கட்டாயப்படுத்தி யுள்ளார். மூன்று குழந்தைகளை பெற்ற ஆயிஷா கணவரிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறு நிறுவனத்தில் கடன் வாங்கி இந்தக் கடனை அடைத்துள்ளார். அங்கேயும் கடனை செலுத்த முடியாமல் இதே பிரச்சனை தொடர தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பின் மாதர் சங்கத் தோழர்களின் தொடர்பு கிடைத்து இவர்களை எதிர்த்து எவ்வாறு போராடுவது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறுகிறார் ஆயிஷா. நம்பிக்கையூட்டும் பகிர்வுகள் இந்த கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் சில பகிர்வுகளும் இந்தக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் முன்னாள் முதல்வர் தோழர் இ.கே. நாயனார் தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட குடும்பஸ்ரீ திட்டத்தினால் எவ்வாறு கேரள பெண்கள் செயலூக்கம் பெற்று தொழில் முனைவோர்களாக வளர்ந்துள்ளனர் என்று இந்த திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சீமா விளக்கம் அளித்தார். குடும்பஸ்ரீ திட்டத்தில் பயன்பெற்ற ஜீஜீ பிரசாத் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நாகர்கோவிலைச் சேர்ந்த மலர் நிறுவனத்தின் செயல்பாடுகளும் பாராட்டப்பட்டன. மரியம் தாவ்லே நுண்நிதி நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராக வலுவான போராட்டங்களை மாதர் சங்கம் தமிழ்நாட்டில் நடத்தி தமிழக அரசை சட்டம் இயற்ற வைத்துள்ளது என்று தமிழக மாதர் சங்கத்தின் செயல்பாட்டை மரியம் தாவ்லே பாராட்டி னார்.
தமிழ்நாட்டில் நுண்நிதி நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிரான மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்று, அம்மாநாட்டு தீர்மானத்தை அடிப்படையாக வைத்து, நுண்நிதி நிறுவனங்கள் முறையற்ற செயல்களில் ஈடுபடுவது தடுக்கப் பட்டுள்ளது. நடுவர் குழுவில் இடம்பெற்ற பேராசிரி யர் பிரபாத் பட்நாயக் நுண்நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் நிதி தீவிரவாதம் என்று கூறினார். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல்வேறு அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று வழக்கறிஞர் கீர்த்தி சிங் கூறினார். ஒவ்வொரு பொதுத் துறை வங்கியிலும் பெண் களுக்கென்று ஒரு பிரிவு ஒதுக்கப்பட வேண்டும், பொதுத் துறை வங்கிகள் கிராமப்புறங்களில் பரவலா க்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தாமஸ் ஃபிராங்கோ கூறினார். நடுவர் குழுவின் தீர்ப்பும் அதன் தொடர் செயல்பாடுகளும் இனிவரவிருக்கும் நாட்களில் தெரிவிக்கப்படவிருக்கின்றன. இந்தக் கலந்தாய்வின் ஆய்வில் 22 கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகளை குடியரசுத் தலைவரிடமும் பிரதமரிடமும் அளிக்க விருப்பதாக ஸ்ரீமதி தெரிவித்தார். நுண்நிதி நிறுவ னங்களின் கொள்ளை குறித்த பொது கலந்தாய்வில் விசாரணை நடத்திய நடுவர் குழுவினர் பின்வரும் ஆலோசனைகளை அளித்தனர்.
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அளித்த ஆலோசனைகள்
l பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும், l குறிப்பாக பெண்கள் மட்டுமே தலைமையேற்று நடத்தும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 4சதவீத வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்பட வேண்டும். l ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் போல் இரண்டு பங்கு அதிகமாக உள்ள நிலுவை கடன்களை அரசு உத்தரவாதங்கள் மூலம் தள்ளுபடி செய்யவேண்டும். l விகிதத்தின் வரம்பிற்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். l ரிசர்வ் வங்கியின் உபரியிலிருந்து 25 சதவீதத்தை நபார்டுக்கு பரிமாற்றம் செய்து சுய உதவி குழுக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையேயான திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். l எந்த அடமானமும் இல்லாமல் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையின் அடிப்படையில் பொதுத் துறை வங்கிகளும் பெண்களுக்கு கடன் அளிக்க வேண்டும். l நுண் நிதி நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதை பொதுத்துறை வங்கிகள் நிறுத்த வேண்டும். மற்ற நடுவர்கள் மாதர் சங்கத்தின் இந்த முயற்சியை பாராட்டினர். வழக்கறிஞர் கீர்த்தி சிங், நுண்நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்துள்ள, வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படை உரிமைகளை பறித்துள்ளன என்று கூறினார். தாமஸ் ஃபிராங்கோ, ரூ.5 இலட்சத்திற்கும் குறைவான கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக்கூடாது என்று கூறினார்.
நீதிபதி மதன் லோகுர் l
நீதிபதி மதன் லோகுர், மாதர் சங்கம் உள்ளூரில் நிறைய போராட்டங்கள் நடத்தி இந்திய ரிசர்வ் வங்கியும் அரசும் இந்த துறையை ஒழுங்குபடுத்து வதற்கான நடவடிக்கையை எடுக்க செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த நுண்நிதி நிறுவனங்களின் அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட மாவட்டம் தோறும் உள்ள இலவச சட்ட உதவி மையத்தையும் நாடலாம்.