பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் : நல்லிணக்கத்தின் வரலாற்று ஆவணம்
திருப்பரங்குன்றத்தின் சமயப் பன்முகத்தன்மை யையும், அங்கு நிலவும் நீண்டகாலச் சமூக நல்லிணக்கத்தையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது சுஜாதா திருஞானம் எழுதி, எலெக்ட்ரா மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இந்நூல். ‘கேரவன்’ இதழில் வெளிவந்த கட்டுரையின் நூல் வடிவம் இது. உண்மைகளை மறைக்கும் அரசியல் சமகாலச் சூழலில் உணர்வுகளைத் தூண்டி, வரலாற்று உண்மைகளை மறைப்பதன் மூலம் வெறுப்பை விதைக்கும் அரசியல் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக, திருப்பரங்குன்றத்தில் ‘தீபம் ஏற்றப்பட வில்லை’ என்ற பொய்யான பரப்புரையை முன்னெடுத்து, அங்கே ஒரு பிரிவினையை உருவாக்கச் சங் பரிவாரங்கள் முயல்வதை இந்நூல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது. தமிழக அரசின் காவல்துறை எவ்வாறு சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தது என்பதையும் இதில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். வரலாற்றுத் தடம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு சமணத் துறவிகளின் கற்படுகைகள் தொடங்கி, முருக வழிபாடு ‘சுப்ரமணிய’ வழிபாடாக மாறிய வரலாறு, இஸ்லாமியத் தர்காக்களின் தோற்றம் எனப் பரங்குன்றத்தின் பன்முக வரலாற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. தர்கா வழிபாட்டு மரபுகளையும், பழங்குடி, சமண, சைவ, வைணவ மற்றும் இஸ்லாமிய மரபுகள் இணைந்து வாழும் தனித்துவத்தையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளில் உள்ள முரண்களையும் சட்ட ரீதியாக அலசுகிறார். பிரிவினைக்கு எதிரான முழக்கம் திருப்பரங்குன்றத்தை ‘இன்னொரு அயோத்தி’ யாக மாற்றத் துடிக்கும் எச்.ராஜாவின் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளின் உள்நோக்கத்தை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தனை வன்மங்களுக்கு மத்தியிலும், 2025 கும்பாபிஷேகத்தின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் மசூதி வளாகத்தில் ஓய்வெடுத்து உணவைப் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு, திருப்பரங்குன்றம் பிரிவினைக்கான இடமல்ல என்பதை நிரூபித்துள்ளது. சந்தனக்கூடு திருவிழாவின் போது இந்து குடும்பத்தினருக்கு வழங்கப்படும் முன்னுரிமை போன்ற மரபுகள் இன்றும் தொடர்வதுதான் தமிழகத்தின் உண்மையான அடையாளம். மதவெறி அரசியலுக்கு எதிராகச் சமூக நல்லிணக்கத்தை ஆயுதமாக ஏந்த விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் ஆசிரியர்: சுஜாதா திருஞானம் (தமிழில்: எலெக்ட்ரா) வெளியீடு: பயணி வெளியீட்டகம் பக்கங்கள்: 112 | விலை: ₹140
