ஸ்கேன் இந்தியா
ஓட்டை
தில்லியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 35 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இவையனைத்துமே போலி மிரட்டல்கள்தான். பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ மனைகள்தான் இலக்குகளாகும். “திடீர்.. திடீர்” என்று பெற்றோர்களுக்கு அழைப்பு கள் செல்கின்றன. “குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்... பள்ளி யில் குண்டு வைத்திருக்கிறார் களாம்.” என்று காதில் விழுந்தவுடன் பதறிப் போய் ஓடி வருகிறார்கள். இப்போதெல்லாம் சில பெற்றோர்கள் “நன்றாகப் பார்த்துவிட்டு கூப்புடுங்களேன்” என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். இதுவரையில் இந்த 35 மிரட்டல்கள் பற்றி தில்லிக் காவல்துறை எந்தத் துப்பும் துலக்கவில்லை. தில்லிக் காவல்துறையின் செயல்பாட்டில் பெரும் ஓட்டைகள் விழுந்துள்ளன. “புலி வருது.. புலி வருது..” கதையாக மாறுவதற்கு முன்னால் இந்த ஓட்டைகளை அடையுங்கள் என்கிறார்கள் பெற்றோர்கள்.
உடைசல்
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலை இதற்கு மேல் தள்ளிப் போடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொன்னவுடன், ஆளும் கூட்டணி யில் விரிசல்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், தனியாக நிற்கப் போகிறதாம். விருப்பமிருந்தால் உள்ளூர் மட்டங்களில் கைகோர்த்துக் கொள்ளலாம் என்று கட்சித்தலைமை சொல்லிவிட்டது. ஆனால் மும்பையில் மட்டும் கூட்டு சேர்வோம் என்கிறார்கள். அங்கு இவர்கள் கட்சிக்கு எதுவும் இல்லை என்பதுதான் காரணம். ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே முறைத்துக் கொண்டுதான் நிற்கிறார். ஆனால், மும்பையில் வலுவான காங்கிரஸ்-சிவசேனா கூட்ட ணியை எதிர்கொள்ள ஷிண்டே அவசியம் என்பது பாஜகவுக்குத் தெரியும். ஷிண்டே இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொள்வார் என்பதுதான் இப்போதைய நிலவரம்.
ஈயம்
“ஆர்.எல்டி. வருது” என்று அந்தப் பாடகர் தொடங்கினார். மேடையில் இருந்த பாஜககாரர்கள் அவரை இறக்கி விட்டனர். உத்தரப் பிரதேசத்தில் நடந்த நவராத்திரி நிகழ்வொன்றில் பாஜகவின் கூட்டாளியான ராஷ்டிரிய லோக் தளக்கட்சியின் பாடகருக்குதான் இந்த நிலைமை. உடனே அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனுமான ஜெயந்த் சவுத்திரிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். லக்னோவில் இருந்து தில்லிக்கு விமானத்தைப் பிடிக்கவிருந்த அவர், அதை ரத்து செய்து விட்டு அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அதே பாடகரை மேடையில் ஏற்றி, பாடச் சொன்னார். ஜெயந்த் சவுத்திரியை “ஆஹா, ஓஹோ.. சொக்கத் தங்கம்” என்று பாஜகவினர் புகழ்ந்து தள்ளினர். அவர் சென்றபின்னர், “வெறும் ஈயத்தை தங்கம்னு சொல்லிச் சமாளிச்சிட்டோம்” என்று பாஜகவினர் அசடு வழிந்தனர்.
பித்தளை
வரலாறு தங்களுக்கு எதிராக இருக்கிறது என்று மணிப்பூர் பாஜகவினர் முணு முணுக்கிறார்கள். 1952ல் முதல் தேர்தல் நடந்ததில் இருந்து 135 முறை பல மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. அதை விலக்கிய பிறகு நடந்த தேர்தல்களில் 87 மாநிலங்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி தோற்றுப் போனது. இதைத்தான் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆறு முறை மணிப்பூரிலேயே இது நடந்திருக்கிறது. நமக்கும் இதுதான் கதியோ என்பவர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இருந்து அண்மையில் விலகியதற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள். பாஜகவின் ஆட்சியை விட குடியரசுத்தலைவர் எந்தவிதத்திலும் வேறுபடவில்லை என்பது மக்களின் கருத்து. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை கதைதான் என்கிறார்கள்.