articles

img

புஸ்வாணம் - சிந்துபூந்துறை சண்முகம்

புஸ்வாணம்

ஐப்பசி மாதம். தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ளன. கருமேகங்கள் திரண்டிருந்தன நல்ல இருட்டு. வாணவெடிகள் வானத்தில் அழகான வண்ணக் கோலங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தன. குழந்தைகள் வெடிகளை வெடித்தம் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்து, இன்னும் இரண்டொரு நாளில் வரப்போகும் தீபாவளியை வரவேற்குமுகமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

சிவகாசியினருகில் உள்ள சேத்தன்பட்டியோ எவ்வித  கொண்டாட்டமுமின்றி களையிழந்து காணப்பட்டது. பல வீடுகளில் சோகம்தான் குடி கொண்டிருந்தது. அந்த  சேத்தன் பட்டி கிராமத்தில் உள்ள மக்களில் பெரும் பாலோர் சிவகாசி நகரின் வெளிப்புறப் பகுதியிலுள்ள ஒரு  பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். அந்த பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்த்து கிடைக்கும் கூலியில் தான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடக்கும். சேந்தன்பட்டியின் மேலத் தெருவில் வசித்து வந்த  செல்லம்மாவின் மகன் எத்திராஜ்,அவனது அம்மாவிடம்”  தீபாவளிக்கு புது டிரெஸ்ஸும் பட்டாசும் வாங்கிக் கொடு  “என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான். செல்லம்மாளுக்கு தன் மகனிடம் என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. வீட்டின் உத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாள் எதிரே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன் கணவன் படத்தைப் பார்க்க  ஆரம்பித்தாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. தன்னுடைய அம்மா அழு வதைப் பார்த்து எத்திராஜ் அவளது மடியில் படுத்து அவ னும் அழ ஆரம்பித்தான். தன் மடியில் கிடந்த மகன் தலை யைத் தூக்கி அவனை உட்கார வைத்தாள். “எத்திராஜ், வெளியே போய் பாரு. நம்ம ஊர்ல யாரா வது வெடி போடுகிறார்களா? “ என்று அவன் கண்க ளைத் துடைத்தபடியே சொன்னாள் செல்லம்மாள். எத்திராஜூம் வாசலில் நின்று வெளியே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அந்த ஊரில் எந்த வீட்டிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கவில்லையே? ஏன் யாரும் வெடி போட  மாட்டேன்கிறார்கள்?’ என்று அவனுக்குப் புரிய வில்லை. அவன் வீட்டுக்குள் சென்று அவனது அம்மாவிடம், “ஆமாம் அம்மா. நீ சொன்ன மாதிரி யாரு வீட்டிலை யும் வெடி போடல. ஏன்மா?” என்று கேட்டான். அவனிடம் எப்படி சொல்லி விளங்க வைப்பதென்று செல்லம்மா தவித்துக் கொண்டிருந்தபோது எத்திராஜ் அவனது அம்மாவிடம், “சரிமா. யார் வீட்டிலேயும் யாரும்  வெடி போடலைனா என்ன. நம்ம வீட்ல நாம வெடி படுவோம். எனக்கு புது ட்ரவுசரும் புதுச் சட்டையும் வெடியும் வாங்கித்தாம்மா” என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். செல்லம்மாள் மீண்டும் வீரணன் படத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘வேட்டு ஆபீஸில் நடந்த வெடி விப த்தில் எத்தனை பேர் உயிரை காப்பாற்றினீர்கள். ஆனால் உங்க உயிரை  உங்களால் காப்பாற்ற முடியவில்லையே’ என்று நினைத்து ஏங்க ஆரம்பித்தாள். பின்பு எத்திராஜ் கையைப் பிடித்து அவனை அடுக்  களைக்குக் கூட்டிச் சென்று சாப்பிட உட்காரச் சொன்னாள். ஆனால் அவன் புது டிரஸ்சும் வெடியும் வாங்கிக் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து சாப்பிட  வைத்து, பின்பு தானும் சாப்பிட்டு விட்டு முன்பட்ட சாலைக்கு வந்தாள். தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை தரையில் அகலமாக விரித்து அதில் படுத்துக் கொண்டு, மீண்டும் வீரணன் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எத்தனை பேர் உயிர்களை நீங்க காப்பாத்துனீங்க. ஆனா உங்க உயிர உங்களால காப்பாத்த முடிய லையே அய்யா! என் சாமியே” என்று மீண்டும் அதையே  சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருந்தாள் செல்லம்மாள். அந்தக் கொடிய நாள் காலையில் எத்திராஜ் பள்ளிக்  கூடம் சென்றதும், வீரணன் சாப்பிட உட்கார்ந்தான். அவனுக்குப் பிடித்தமான கேப்பை தோசையை சுட்டு தட்டில் போட்டு அவன் முன்பு வைத்து சிகப்பு மொளகு வத்தல் துவையலையும் வைத்தாள். அப்போது  அவளிடம் “செல்லம்மா! இன்னைக்கு சாயங்காலம் சிவகாசியில் ஒரு ஆர்ப்பாட்டம் இருக்கு. அத முடிச்சிட்டு  வர எட்டு மணிக்கு மேல ஆகும். அதனால என்னை எதிர்  பாக்காம நீயும் எதிராஜும் ராத்திரி சாப்பிட்டு முடிச்சி டுங்க” என்று சொல்லிவிட்டு தோசையைச் சாப்பிட ஆரம்பிப்பதற்குள், வெளியே தூரத்தில் ‘டமார்’ என்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து வெடிகள் வெடிக்கும் சப்தமும் கேட்க ஆரம்பித்தன. வானம் முழுவதும் ஒரே கரும்புகை மண்டலமாக மாறி யது. ஏதோ ஒரு வேட்டு ஆபீஸில் வெடி விபத்து ஏற்பட்டு  விட்டது என்று யூகித்துக் கொண்டனர். வீரணனும் உடனே  சாப்பிடாமல் எழுந்து வெடி விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடினார். செல்லம்மாவும் வீரணன் பின்னாலேயே ஓடினாள். அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி  அடைய செய்தது. ஊரில் இருந்த அனைவரும் அங்கே  ஓடி வந்தனர் ஊருக்கு வெளியே இருந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு வெடிகள் தாறுமாறாக வெடித்துக் கொண்டிருந்தன. அங்கு வேலை  செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடி  வர ஆரம்பித்தனர். அவர்களது உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உள்ளே சில தொழிலாளர்கள் வெளியே  வர முடியாமல் மாட்டிக் கொண்டனர். அதற்குள் சிவ காசியில் இருந்து தீயணைப்பு வந்து தங்களது பணி யைத் தொடங்கினர். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வீரணன்திடீரென விபத்தில் நடந்த தொழிற்சாலைக்குள் ஓடினார். உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தொழிலா ளர்களை தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்து  விட்டு விட்டு, மீண்டும் உள்ளே ஓடினார். இப்படியாக ஒரு ஐந்து ஆறு பேரை வெளியே கொண்டு வந்து விட்டுவிட்டு மீண்டும் அந்த தொழிற் சாலைகள் போகும்போது வெளியே இருந்த மக்கள் “வீரணா உள்ளே போகாதே. கட்டிடம் இடிந்து விழும்  நிலையில் உள்ளது” என்று கத்தினர். ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்காமல், தன்  மனைவி நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பி அவளிடம்  கையைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அப்போது கட்டிடத்தின் மேற்கூரை அவன் மீது விழுந்து அவனை  அமுக்கியது. நெருப்பு பற்றிக் கொண்டு சூடாக இருந்த அந்த மேற்கூரை அவர்கள் உடலைக் கருக்கியது. உடனே அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அந்த சூடாக இருந்த கட்டிட கூரையை உடனடியாக அகற்றி விட்டு கருகிப் போயிருந்த வீரணன் உடலை வெளியே எடுத்துக்  கொண்டு வந்தனர். தனது கணவன் வீரனின் கருகிய உடலைப் பார்த்து  செல்லம்மா கதறி அழுதாள். எத்தனையோ பேர் வந்து ஆறுதல் சொன்னார்கள். ஆனாலும் அதனால் என்ன ஆகப் போகிறது. போன  உயிர் போனது தானே. என்னையும் என் மகனையும் விட்டு விட்டு மற்ற எல்லோரையும் காப்பாற்றி விட்டு அவர் போய்ச் சேர்ந்து விட்டார். எங்களைக் காப்பாற்ற?’ என்று  நினைத்து அழுது கொண்டிருப்பாள் செல்லம்மா. அரசாங்கத்திடமிருந்து ரூ 5 லட்சம் நிவாரணத் தொகையாக வந்தது. வீரணனின் தோழர்கள் சிலர் திரட்டிய நிதியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக செல்லம்மாள் பெயரில் வங்கியில் மாதந்தோறும் வட்டி கிடைக்கிற மாதிரி நிரந்தர வைப்புத் தொகை கணக்கில் டெபாசிட் போட்டார்கள். அங்கன்வாடியில் வேலைக்கு விண்ணப்பிக்க ஒரு மனு எழுதி செல்லம்மாளிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கச் செய்தார்கள். ‘அங்கன்வாடியில் வேலை கிடைத்தால் நல்லது தான். இந்த பட்டாசுத் தொழிற்சாலை வேலை இல்லேன்னா  தீப்பெட்டி தொழிற்சாலை வேலை இதையெ ல்லாம் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம். தினசரி செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியதிருக்கும் என்று நினைத்துக் கொள்வாள். மறுநாள் காலை விடிந்ததும், எத்திராஜ் மறுபடியும் ஆரம்பித்து விட்டான் “யம்மா புது டிரெஸ்ஸும் வெடியும் வாங்கித் தா” என்று. இருவரும் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டு,பீரோவில் இருந்து  ரூபாய் 2000 எடுத்து வைத்துக்கொண்டு எத்திராஜைக் கூட்டிக் கொண்டு சிவகாசிக்குக் கிளம்பினாள். சிவகாசி பஜாரிலுள்ள ஜவுளிக்கடைகளில் ஏகப்பட்ட  கூட்டம். கடைகள் அனைத்தும் மின்விளக்கு சரங்க ளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த மின்விளக்கு வெளிச்சத்தில் தனது பங்கும் சிறிது  இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் செல்லம்மாள்.  பின்பு ஒரு ரெடிமேட் கடைக்குள் சென்று எத்திராஜுக்கு வேண்டிய பேண்ட் சட்டை வாங்கிக் கொண்டாள். அதன்பின் அடுத்த தெருவிலிருந்த பட்டாசு கடைக்குச் சென்று அவன் விரும்பிய பட்டாசுகளையும் மத்தாப்பு களையும் வாங்கினாள். அவற்றையெல்லாம் பார்க்கும்  போது மனசு கொஞ்சம் வலித்தது. லட்சுமி அவுட்டுக்களைப் பார்க்கும்போது அவற்றின்  மீது லட்சுமி படம் தெரியவில்லை. வீணனின் படமே செல்லம்மாளின் கண்களுக்குத் தெரிந்தது. எல்லாம் செலவழித்தது போக மீதமிருந்த பணத்தில் ஸ்வீட் கடைக்கு சென்று சில ஸ்வீட்டுகளும் காரச் சேவும் வாங்கி னாள். வீரணனுக்கு காரச்சேவு என்றால் மிகவும் பிடிக்கும்.  ‘கையில் இருக்கும் மீதப் பணமும் வீட்டில் இருக்கும் ரூபாயும் இந்த மாதக் கடைசி வரை போதும். இனி வங்கி  வட்டி மட்டும்தான். அதை வைத்துத் தான் இனி காலத்தை  ஓட்ட வேண்டியிருக்கும். மாவட்ட கலெக்டரிடம் அங்கன்  வாடி வேலைக்காக கொடுத்த மனு மீதான நடவடிக்கை  இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். அந்த வேலை எப்போது கிடைக்குமென்று இப்போதே  சொல்ல முடியாதாம். அடுத்து வரும் மாதங்களுக்கு செலவு செய்ய கையில் வேறு பணமில்லை. என்ன  செய்ய?’ என்று யோசித்துக் கொண்டே செல்லம்மாள் தன் மகன் எத்திராஜ் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள். செல்லம்மாளின் கால்கள் நடந்து கொண்டிருந்தன, சிவகாசியின் புறநகர் பகுதியிலிருந்த ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை நோக்கி.