நவீன உழைப்புச் சுரண்டலின் புதிய வடிவங்கள்
மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம்யெச்சூரி நினைவு கருத்தரங்கத்தில் (செப். 17) சென்னையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ‘நவீன சுரண்டல் முறைகளும் தொழிலாளி வர்க்கமும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சாராம்சம்:
உலக நாடுகள் முழுவதும் சுரண்டல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலைகளில் 100 சதவீதம் நிரந்தர தொழி லாளர்கள் இருந்தனர். உற்பத்தி பிரிவில் ஒரு ஒப்பந்த தொழிலாளி கூட இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி யுள்ளது. நிரந்தர தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்கள் பல மடங்கு அதிகரித்துள்ளனர். இந்தியாவில் 3 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே உற்பத்தித் துறையில் உள்ளனர். 97 சதவீத தொழி லாளர்கள் முறைசாரா, சட்டங்கள் பொருந்தாத தொழி லாளர்களாக உள்ளனர். இந்த 3 சதவீத தொழிலா ளர்கள்தான் நாட்டின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தொ ழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளனர். இவர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு இருந்தால் முதலாளிகளால் விரும்பியபடி உழைப்பை உறிஞ்ச முடியவில்லை. லாபம் அதிகரிக்க வேண்டுமானால், ஓய்வின்றி வேலை வாங்க வேண்டும், வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று முதலாளிகள் முடிவு செய்துள்ளனர்.
சட்ட மாற்றங்கள்
எனவேதான், ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் வேலை நேரத்தை 8லிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. சட்ட தொகுப்புகளை கொண்டு வந்து 4 ஆண்டுகளாகியும் அறிவிக்கை செய்ய முடியாத வகையில் ஒன்றிய அரசை தொழி லாளி வர்க்கம் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது. எனவே, இந்த தொகுப்புகளில் உள்ள தொழி லாளி வர்க்கத்திற்கு எதிரான, தீய பிரிவுகளை, தற்போ துள்ள சட்டங்களை திருத்துவதன் மூலம் செயல் படுத்த முயற்சிக்கின்றனர். உதாரணமாக, தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறு வனச் சட்டத்தை அரசு திருத்தியுள்ளது. சட்டத்திற்கு முரணாக முதலாளி செயல்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதை நீக்கி, அபரா தம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று மாற்றியுள்ள னர். இப்படி பல திருத்தங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஒப்பந்த முறையின் விளைவுகள்
நவீன முறையில் சுரண்டலைச் செய்ய, சுரண்டலை தீவிரப்படுத்த தொழிலாளிக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம், சட்ட பாதுகாப்பு, நீதிமன்றத்தை நாடும் உரிமை போன்ற எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்று முதலாளிகள் விரும்புகின்றனர். முதலாளி விரும்பினால் வேலைக்கு அமர்த்தலாம், விரும்பா விடில் துரத்திவிடலாம் என்ற நிலை இருக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம். இதற்கு தொழிலாளிகள், தொழிற்சங்கங்களி டமிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. எனவே, தொழி லாளிகளின் தன்மையையே மாற்றுகின்றனர். நிரந்தர தொழிலாளி என்ற நிலைக்கு மாற்றாக காண்ட்ராக்ட், ஒப்பந்தம், காஷூவல், பயிற்சியாளர் என நிரந்தரமற்ற தொழிலாளிகளை உருவாக்கி, அதிகரித்து வரு கின்றனர். இதன் விளைவாக, ஒரு தொழிற்சாலையில் 100 நிரந்தர தொழிலாளி இருந்தால் 1000 ஒப்பந்த தொழி லாளி உள்ள நிலை உள்ளது. அசோக் லேலண்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பை விட 3 மடங்கு உற்பத்தி அதி கரித்துள்ளது. லாபம் குவிகிறது. ஆனால், நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை 8,000லிருந்து 1,200ஆக குறைந்துவிட்டது. காண்ட்ராக்ட் தொழிலாளர் எண்ணிக்கை 9,000ஆக உள்ளது. இதுதான் இன்றைய தொழிற்சாலைகளின் நிலை. அரசு அலுவலகங்கள், நிறுவனங்களிலும் ஒப்பந்த முறைதான் அமல்படுத்தப்படுகிறது. வல்லூர் அரசு அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 2,000 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் இதே நிலைதான்.
புதிய சுரண்டல் முறைகள்
நவீன சுரண்டலின் முக்கிய கருவியாக ஒப்பந்த முறை உள்ளது. ஒப்பந்த தொழிலாளி என்றால் கூட சம வேலைக்கு சம ஊதியம் போன்ற சில பாதுகாப்புகள் உள்ளன. எனவே, பயிற்சியாளர் (அப்பரண்டீஸ்), உற் பத்தியில் பயிற்சி பெறக்கூடிய தொழிலாளி (நாப்ஸ்) போன்ற திட்டங்களை அமல்படுத்துகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசு தருகிறது. இப்படியாக தொழிற்சாலைகளில் பயிற்சி, காண்ட்ராக்ட், காஷூவல், நாப்ஸ் போன்ற பெயர்களில் தொழிலாளர்கள் மிகக் கடுமையாக சுரண்டப்படு கின்றனர். உழைப்பு திருட்டுக்கு உள்ளாகின்றனர். ஓலா, உபேர், ஸ்விக்கி போன்ற இணையம் சார்ந்த தொழில்களில் ‘ஜிக்’ தொழிலாளர்களாக (செயலி வழித் தொழிலாளர்) கோடிக்கணக்கானோர் உள்ளனர். முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சிறு சிறு சட்ட பாதுகாப்பு கூட இந்த தொழிலாளர்களுக்கு இல்லை. வண்டியும் உழைப்பும் தொழிலாளியு டையது. செயலியை மட்டும் வைத்துக்கொண்டு உழைப்பை வாங்குவதோடு, தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியையும் எடுத்துக் கொள்கின்றனர். அடிமைத்தனத்தை விட மிக மோச மான கொள்ளையாக இது உள்ளது. இதை அனைத்து தொழில்களிலும் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
போராட்ட எழுச்சி
இந்த நவீன சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடத் தொடங்கியுள்ளனர். அரசும் முதலாளிகளும் ஒப்பந்த முறையில் இருந்தால் தொழிலாளர்கள் சங்கம் சேர முடியாது, விருப்பம் போல் சுரண்டலாம் என்ற கனவு பொய்த்துவிட்டது. வல்லூர் அரசு அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அமைத்துவிட்டார்கள். பணி நிரந்தரம் கோரி 17 நாள் பிரம்மாண்ட வேலைநிறுத்தம் செய்தனர். அடக்குமுறை பலனளிக்கவில்லை; எனவே நிர்வாகம் ஊதிய உயர்வு தந்துள்ளது. ஆனால், பணி நிரந்தரம் என்ற கோரிக்கைக்காக மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர். காண்ட்ராக்ட் உள்ளிட்ட எந்த பெயரில் தொழிலாளி களை வைத்து நவீன சுரண்டல், உழைப்பு திருட்டுக்கு உட்படுத்தினாலும், அதனை எதிர்த்து முறியடிக்க ஒன்றுபடுத்திக் கொண்டு தொழிலாளிகள் போராடு வது, தவிர்க்க இயலாத இயக்கவியல். இதுதான் மார்க்சியம். பஞ்சாலைகளிலும் இத்தகைய நவீன சுரண்டல் நிகழ்கிறது. பாக்ஸ்கானில் பணியாற்றிய 15,000 இளம் பெண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 நாட்கள் பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்தனர். இதுதான் தன்னெழுச்சியான வர்க்கப் போராட்டம். கோரிக்கை என்ன? தலைமை யார்? போராட்டத்தை எப்போது முடிப்பது? என்ற எந்த தெளிவும் இல்லாத அந்த தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. இத்தகைய போராட்டங்கள் இலக்கை அடையாது. இத்தகைய போராட்டங்கள் நடைபெறும்போது தலையிட்டு முறைப்படுத்தி கொண்டு செல்ல முயற் சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் சுரண்டலை எதிர்த்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் வெடிக்கும் வெடிப்புச் சூழல் நிலவுகிறது. பல நாடுகளில் வெடித்து நெடும் போராட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. தன்னெழுச்சிப் போராட்டங்களை முறைப்படுத்தி கொண்டு செல்ல நாம் தவறும்பட்சத்தில் சீர்திருத்த வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அவர்கள், தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்க ளுக்கே அவநம்பிக்கையை உண்டாக்குகின்றனர். தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் சங்கம் வைக்க உரிமை உள்ளது என்று நீதிமன்றம் கூறி விட்டது. ஆனாலும் சங்கம் அமைக்க முடியவில்லை. தொழில் நிலைமை காரணமாக பெங்களூரில் ஐடி தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஏஐ, ரோபோ ட்டிக் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பது, தொழி லாளர் எண்ணிக்கையை குறைப்பது என்று முதலாளி கள் சிந்திக்கின்றனர். எனவே, நவீன சுரண்டலுக்கு எதிராக அனைத்து வகையான ஒப்பந்த, நிரந்தரமற்ற தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும். நவீன சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் தங்களை ஒன்றுப்படுத்திக் கொண்டு முதலாளிகளுக்கு எதிராக போராடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை பொருத்தமாக பயன்படுத்த வேண்டும். இதுதான் மார்க்சிய வழிமுறை.