ஸ்கேன் இந்தியா
காசு
ஆட்சியாளர்கள், அரசு அலுவலர் களின் ஊழல்களை விசாரிப்ப தற்காக 2013 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்கீழ் லோக்பால் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் தலை வராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் செயல்படுகிறார். தலைவரையும் சேர்த்து எட்டு பேர் இருக்க வேண்டிய அமைப்பில், ஏழு பேர்தான் உள்ளனர். இந்த ஏழு பேருக்கு பிஎம்டபிள்யூ சொகுசுக்கார்(எம்-ஸ்போர்ட்ஸ்) வாங்க எடுத்துள்ள முடிவுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை லோக்பால் கோரியிருக்கிறது. “கொடுங்கள்” என்று சொன்ன 30 நாட்களுக்குள் கார் தர வேண்டுமாம். “யாரோட காசு.. அரசு வேற சுதேசின்னு சொல்லுதே.. இவங்களுக்கு எதுக்கு வெளிநாட்டு சொகுசுக்கார்”னு எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இந்தக் கார்கள் ஒவ்வொன்றும் தலா 70 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் என்று சந்தை நிலவரம் சொல்கிறது.
பணம்
அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமாக இருந்த ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு புதிய ஓய்வூதியம் கொண்டு வரப்பட்டது. அது ஓய்வூதியமே கிடையாது என்று ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்தது. இதனால் அதற்கு மாற்றாக, ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. செப்டம்பர் 30, 2025க்குள் திட்டத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு தருவதாகவும் சொன்னார்கள். மொத்த முள்ள 23.93 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர் களில் வெறும் 1.11 லட்சம்(4.5%) ஊழியர்கள் தான் மாறினர். உத்தரவாதமான ஓய்வூதியமாக இருந்த பழைய ஓய்வூதியத்திட்டத்தைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்திருக்கிறது. நவம்பர் மாதத்தில் போராட்டக்களத்தில் இறங்கப் போகிறார்கள்.
துட்டு
“துட்டு இல்லாம ஓட்டு இல்ல”. கிட்டத் தட்ட அனைத்து முதலா ளித்துவக் கட்சிகளுமே இப்படித்தான் இயங்கு கின்றன. சில கட்சிகள் தங்கள் கட்சிக்காரர் களின் ஓட்டுகளை வாங்குவதற்குக்கூட செலவழிக்கின்றன. தேர்தல் நேரத்தில் அரசுப் பணத்தை எடுத்து வாரி வழங்கும் வேலையும் நடக்கிறது. மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், மகாராஷ்டிராவில் இருந்த பாஜக கூட்டணி அரசு, நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1500 தருவதாக அறிவித்தது. வாக்குகளைப் பெறுவதற்காகவே அறிவிக்கப் பட்டதால் யாரெல்லாம் விண்ணப்பித்தார்களோ அனைவருக்கும் தந்தனர். பெண்களுக்கான திட்டத்தில் ஆண்களுக்கும் தந்திருக்கிறார் கள். 12 ஆயிரத்து 481 ஆண்கள் இதை வாங்கியுள்ளனர். நலிவடைந்த குடும்பம் என்று சொன்னார்கள். ஆனால் 2.41 கோடிப் பேர் வாங்குகிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், பயனாளிகளை நீக்கும் பணி விரைவில் நடக்கும் என்கிறார் கள்.
மணி, மணி...
பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இன்னும் எட்டு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடக்கின்றன. எங்கு நோக்கினும் பணம், சாராயம் விநியோகம் தாராளமாக நடக்கிறது. ஆங்காங்கே சோதனைகளும் நடக்கின்றன. பெரும் அக்கறை காட்டாமல் நடத்தப்படும் சோதனைகளில்கூட இதுவரையில் சுமார் 72 கோடி ரூபாய் மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரிலும் சாராய விநியோகம் நடந்திருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்க, நெருங்க, நிலைமை மோசமாகும் என்று கூறப்படுகிறது. கள்ளச்சாராயப் பெருக்கால் பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. ஆளுங்கட்சியினரின் பண விநியோகம் கண்டு கொள்ளப்படுவதில்லை. சொந்தப்பணத்தைப் பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டு செல்பவர்கள்தான் பறிமுதலுக்கு ஆளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.
