அச்சப்படுபவர் இருக்கும் வரை மிரட்டுகிறவன் மிரட்டுவான்
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் உலகின் பல நாடுகளை வரி விதிப்பைக் காட்டி மிரட்டி வருகிறார். குறிப்பாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்தியா மீது கடுமையான மிரட்டலை விடுப்பதோடு, முதலில் 25% வரி விதித்து பின்னர் மேலும் 25% சேர்த்து மொத்தம் 50% வரி விதித்துள்ளார். இந்த வரி ஆகஸ்ட் 27, 2025 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உலகில் இந்தியர்களின் பங்களிப்பு அச்சப்படுபவன் இருக்கும் வரை மிரட்டுகிறவன் மிரட்டிக் கொண்டுதான் இருப்பான் என்று கூறுவார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்களாக இருப்பவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவிலேயே கூகுள் சுந்தர் பிச்சை, நாசாவில் கல்பனா சாவ்லா, பின்னர் சுனிதா வில்லியம்ஸ் போன்ற பலர் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர்; உள்ளனர். ஆனால் அமெரிக்கர்கள் வாழாத பல நாடுகள் உலகில் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தின் வீரக்கதைகள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி அகிம்சையை போராட்டத்தின் முக்கியக் கருவியாக பயன்படுத்தினார். அந்த மகாத்மாவே “செய் அல்லது செத்துமடி” என்று கூறியிருக்கிறார். மகாத்மாவின் நாவி லிருந்து இவ்வளவு வேகமான வார்த்தைகளா என்று இந்தியாவே வியந்தது. ஒருபக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதம் ஏந்தித்தான் போராடி பிரிட்டிஷாரை விரட்ட வேண்டும் என்று கிழக்காசிய நாடுகளிலிருந்து படைதொடுத்தார். அவரது ராணுவத்திற்குப் பெயர் ஐஎன்ஏ. அதற்கு ஆயுதங்கள் வாங்க, தாங்கள் அணிந்திருந்த தாலி உள்பட வளையல், மூக்குத்தி, தோடு என்று அனைத்தையும் கொடுத்தவர்கள் தமிழகப் பெண்கள். இருபத்தைந்து வயது கூட எட்டவில்லை என்றாலும் தூக்கிலிடப்பட இருந்த நேரத்திலும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தவர் மாவீரன் பகத்சிங். வ.உ.சி மற்றும் சுப்பிர மணிய சிவா போன்றவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டு கடுங்கோபம் கொண்டு ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் தானும் சுட்டு மாண்டான். தமிழ்நாட்டில் மொழி காத்திட நூற்றுக்கணக்கில் மாணவர்கள் இராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தோள் கொடுத்தனர். இப்படிப்பட்ட வீரக்கதைகள் ஆயிரமாயிரம் கொண்ட இந்திய தேசத்தைத் தான் மிரட்டிப் பார்க்கிறார் டிரம்ப். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் வாங்கக் கூடாது என்று இந்தியாவை மிரட்ட அமெரிக்கா யார்? சீனா இந்தியாவை விட அதிகம் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்கி வருகிறதே, அதற்கு வரி விதிக்க அமெரிக்கா அஞ்சுவது ஏன்? சீனா அமெரிக்காவிடம் பல்லைக் காட்டுவதுமில்லை; பல்லை உடைத்துக் கொள்வதுமில்லை. விஷம் இருக்கும் பாம்பு அமெரிக்கா - அது எப்போதிருந்தா லும் விஷம் கக்கும் என்று எச்சரிக்கையுடன் உள்ளது சீனா. கடந்த காலத்தில் நடந்த யுத்தங்களிலெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நாடுதான் அமெரிக்கா. 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு வாஜ்பாய் வெடித்தபோதும் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது. தனித்து நின்று ஜொலிக்கும் நாடுகள் அமெரிக்க கைக்கூலி சர்வாதிகாரி பாடிஸ்டா அரசை எதிர்த்து பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா ஆட்சியை விரட்டி புரட்சிகர ஆட்சியை அமைத்த நாளிலிருந்து கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துத் தான் வருகிறது. கியூபா சோர்ந்து போய்விட்டதா? தனித்து நின்றாலும் ஜொலித்து நிற்கிறது. விளையாட்டுத் துறையில் சர்வதேச சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. கொரோனா காலத்தில் கியூப மருத்துவர்கள் பல நாடுகளுக்குச் சென்று இலவச சேவையால் மக்களைக் காப்பாற்றினர். இது போன்று அமெரிக்கா வல்லரசால் செய்ய முடிந்ததா? இராக்கில் பேரழிவு ஆயுதம் இருக்கிறது என்று பொய்யைச் சொல்லி சதாம் உசேனை அமெரிக்கா கைது செய்து கொன்றது. ஏதேனும் ஆயுதம் கிடைத்ததா என்றால் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது போதைப் பொருள் வருவதற்கு காரணம் என்று பொய்யான காரணத்தைக் கூறி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு டிரம்ப் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவரை அமெரிக்கா விடம் ஒப்படைப்பவருக்கு 5 கோடி டாலர் வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனாலும் அவர் உறுதியாக எதிர்கொள்கிறார். உறுதியான நிலைப்பாட்டில் உறுதியாக நில்லுங்கள் 50 சதவீத வரியால் பாதிக்கப்படுவது ஜவுளி, விவசாயம், மாணிக்கம் போன்ற கற்கள், மின்னணுப் பொருட்கள்தான் அதிகம். தமிழ்நாட்டிற்குத்தான் பாதிப்பு அதிகம். ஆனால் இந்தியா ஜிஎஸ்டி வரி முறையை இரு-நிலை அமைப்பாக மாற்றி பல பொருட்களின் மீதான வரியை பாதியாகக் குறைத்துள்ளது. சென்செக்ஸ் 0.1% உயர்வுடன் முடிந்துள்ளது - பீதியில்லை. பொருளாதாரத்தில் 11.2 விழுக்காடு உயர்த்தியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இதனால் ஏற்படும் இழப்பை எப்படி ஈடு செய்வது என்பதை ஆராய்கிறார்; செயல்படுத்துவார். “சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது” - இழப்புகள் இல்லாமல் வெற்றி காண முடியாது. டிரம்ப் என்ன செய்து விடுவார் பார்க்கலாம். உறுதியே இறுதிவரை இருக்கட்டும்.