சபரிமலை ஐயப்பன் மாநாடு தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை, ஆக.26 - கேரளாவில் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சார்பில், செப்டம்பர் 20 ஆம் தேதி பம்பையில் ‘உலக ஐயப்ப சங்கமம்’ என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த கேரள மாநில தேவசம் வாரிய அமைச்சர் வி.என்.வாசவன், ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சார்பில், அதன் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, கேரள மாநிலம் பம்பையில் செப்.20 ஆம் தேதி நடைபெறவுள்ள ‘உலக ஐயப்பன் சங்கமம்’ நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.