articles

img

ஆட்சியாளர்கள் கட்டுக்கதைகளை பரப்புவது ஏன் ? - என்.குணசேகரன்

ஏராளமான கதைகளோடு நாடாளு மன்றத்தில் செங்கோல் நிறுவப் பட்டது. சோழர் காலச் செங்கோல், மவுண்ட் பேட்டனிடம் செங்கோலை அளித்து, திரும்ப பெற்றது போன்ற கட்டுக்கதைகளை பாஜக வினர் அனைத்தும் போலியானவை என அம்பலமாகியுள்ளது. ஆதாரப்பூர்வமாக அவை கட்டுக்கதை கள் என்று எடுத்துரைத்த போதும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தொடர்ந்து  அதனை பேசி வருகின்றனர். இது, இரண்டு வகையில் உதவும் என  அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒன்று,  மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளி லிருந்து கவனத்தை திசை திருப்ப இது  உதவும்; மற்றொன்று, இந்து பழமை வாதத்தை கிளறி விட்டு  இந்து அடையாள  உணர்வை மேலும் தூபமிட்டு வளர்க்கலாம்;  அதன் வழியாக இந்து வாக்கு வங்கியை மேலும் வளர்த்திடலாம் என கணக்கு போடுகின்றனர். இதுபோன்ற தருணங்களில் ஆளும் வர்க்க நலன் சார்ந்த நோக்கங்களையும் அறிந்திட வேண்டும்.

ஏன் பழமைவாதம்?

இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுத்து வத்தோடு அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்டு இந்தியாவை ஆட்சி செய்து  வருகிறது. செங்கோல் நிறுவுவது போன்ற அடையாளப்பூர்வமான நிகழ்வுகள் இந்த வர்க்கக் கூட்டின் வெளிப்பாடுகள். விடுதலைக்குப் பிறகு,ஆட்சியாளர்கள் இந்துமத பழமைவாதம் மட்டுமல்ல, மற்ற மதங்களின் பழமைவாத, பிற்போக்கு சக்திக ளோடு சமரசம் செய்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. அன்றைக்கு நேரு போன்றவர்கள் அறிவியல் அணுகுமுறை,மதச்சார்பின்மை கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்த னர். விடுதலைப் போராட்டத்திலும் கூட  மக்கள் மதச்சார்பற்ற உணர்வுடன் போராடி னர். ஆனால் அரசு, முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசாக  இருந்ததால், பழமைவாதம் கூடிக் குலாவிடும் நிலை தொடர்ந்து இருந்தது. எந்த மதத்தையும் சாராது அரசு செயல்படும் என்கிற மதச்சார்பற்ற கோட்பாட்டை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. எனினும் அவ்வப்போது மீறல்களும், விலகல்களும் இருந்து வந்துள்ளன. இன்று, இந்திய முதலாளித்துவம் பல்வேறு வகைகளில் ஏற்றம் பெற்று வளர்ந்துள்ளது. நிலப்பிரபுத்துவமும் பழைய வடிவிலேயே இல்லாமல் பல மாற்றங் களைக் கண்டு,அதிகாரத்தில் நீடிக்கிறது.  நவீன பெரும் கார்ப்பரேட் பெருமுத லாளித்துவமாக  இருந்தாலும், பழமை வாத, மிகப் பிற்போக்குத்தனமான, சாதிய, பாலின ஒடுக்குமுறைச் சிந்தனைகள் உயிர்ப்புடன் இருப்பது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.  அதிகார மேலாதிக்கத்திற்கு பழமை வாதம் ஆளும் வர்க்கங்களுக்கு தேவைப் படுகிறது. பல வழிமுறைகளை  இதற்கு பின்பற்றுகின்றனர்.

உண்மைகளை சிதைத்தல்

‘போஸ்ட் ட்ரூத் (Post Truth)’ என்கிற கருத்தாக்கம் பரவலாக பேசப்படு கிறது. இந்தச் சொல்லை, ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம், 2016-ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக அறிவித்தது உண்மையான தரவுகள், விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கருத்துக்கு வந்தடைவதற்கு பதிலாக; உணர்வுகள், தனிப்பட்ட நம்பிக்கைகளை அடிப்படை யாகக் கொண்டு கருத்துக்களை உருவாக்கு கிற முயற்சிகளை ‘போஸ்ட் ட்ரூத்’ என்று வரையறுக்கின்றனர் இது, ‘உண்மைக்குப் பின்’ அல்லது ‘உண்மைக்குப் பிந்தைய  அரசியல்’ என்றெல் லாம் அழைக்கப்படுகிறது.உண்மையை மறைப்பது, உண்மைகளை சிதைப்பது, போலி ஆதாரங்களை முன்வைத்து உண்மை என சித்தரிப்பது போன்றவை ‘போஸ்ட் ட்ரூத்’ (உண்மைக்குப் புறம்பான அரசியல்) வேலைகள். சங் பரிவாரமும்,மோடி தலைமை யிலான இன்றைய ஆட்சியாளர்களும் இதில் வல்லவர்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. ஒரு மத நம்பிக்கையை மையமாக வைத்து போலியான, கற்பனை யான ஆதாரங்களைக் கொண்ட பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. “காஷ்மீர் பைல்ஸ்”, “கேரளா ஸ்டோரி”  போன்றவை திரைப்பட ஊடகத்தை பயன் படுத்தி ‘போஸ்ட் ட்ரூத்’ வேலையை செய்கின்றன. திரைப்படம், சமூக ஊடகம், அச்சு ஊடகம் என அனைத்திலும் ‘போஸ்ட் ட்ரூத்’ பாணி பிரச்சாரம் நடக்கிறது. 1990-களில் சோசலிச நாடாக இருந்த யுகோஸ்லேவியா இன அடிப்படையில் சிதறுண்டு போனது. அந்நாட்டைக் கூறு  போட, அமெரிக்காவும்,நேட்டோ கூட்டாளி நாடுகளும் கட்டவிழ்த்து விட்ட பொய்யான கட்டுக்கதைகள் முக்கிய காரணம். ஏராள மான உயிர்ப் பலிகளுடன் இது நடந்தது. 1930-களில் ஹிட்லரின் வெறிப் பிரச்சாரத்தை மக்கள் நம்பினார்கள்.யூதர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டி யவர்கள் என்று சொன்னதை விமர்சன மின்றி மக்கள் நம்பினர். தேர்தலில் ஹிட்லர் பாசிசக் கும்பல் வெற்றிபெற்றது. அதன் பிறகு நடந்த யூதப் படுகொலையும் கொடூரங்களும் வரலாற்றின் இரத்தக்கறை படிந்த கொடிய பக்கங்கள்.

 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, இராக்கின் மீது போர் தொடுப்பதற்காக ஏராளமான கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி  வெளியிட்டது. போருக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் அன்றைய ஜனாதி பதி ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்க மூத்த  அதிகாரிகள் இராக்கிற்கும், சதாம் உசேனுக்கும் எதிராகவும் 935 பொய்களை ‘ஆதாரங்களாக’ வெளியிட்டதாக ஒரு ஆய்வு நிறுவனம் கணக்கிட்டது.  மூன்று லட்சம் மக்களை பலிவாங்கி, 90 லட்சம் மக்களை அகதிகளாக்கிய இந்த  ஏகாதிபத்திய போருக்கு ‘போஸ்ட் ட்ரூத்’ பிரச்சாரம் பயன்பட்டது. இந்த வரலாறுகள் இந்தியாவில் தற்போது நடக்கும் பிரச்சாரம் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகின்றன. ‘போஸ்ட் ட்ரூத்’ விமர்சகர்கள் அந்த பிரச்சாரங்களின் வர்க்கப் பின்னணி பற்றி பேசுவதில்லை. இதற்கான தெளிவுக்கு மார்க்சியத்திடம்தான் செல்ல வேண்டும். 

மார்க்சியப் பார்வை

19ஆம் நூற்றாண்டிலேயே,மார்க்சியம் இதனை விளக்கியுள்ளது.  மார்க்ஸ், ஏங்கல்ஸ் 1845-46 ஆண்டு களில் எழுதிய நூல் ‘ஜெர்மன் சித்தாந்தம்’.  இதில் வருகிற பொன்னான வாக்கியங்கள் இவை:

“ஒவ்வொரு சகாப்தத்திலும் கோலோச்சுகிற கருத்துக்கள், அதன் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே’’.
 

‘‘அதாவது சமூகத்தின் பொருளாதார சக்தியை தங்களிடம் உடைமையாகக் கொண்டுள்ள ஆளும் வர்க்கமே,அந்த சமூகத்தின் ஆளுகிற அறிவுத்துறை சக்தியாகவும் இருக்கிறது’’.
 

‘‘பொருள் உற்பத்தி சாதனங்களை தன் கையில் வைத்திருக்கும் வர்க்கம், அறிவுத்துறை உற்பத்திசாதனங்கள் மீதும் தனது கட்டுப்பாட்டை வைத்திருக்கும். இதனால் பொதுவாக அறிவுத்து றை உற்பத்தி சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துக்கள் அடங்கி ஒடுங்கியே இருக்கும்’’.

எனவே, ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் ஒரு சமூகத்தில் ஆதிக்க கருத்துக்களாக நீடிக்கும்.  இந்த நிலையை கருத்தில் கொண்டு, பாட்டாளி வர்க்கங்கள் தங்களது விடியலுக்காக சித்தாந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டும். ஆளும் வர்க்க சித்தாந்த  ஆளுகையை பாட்டாளி வர்க்கம் தகர்த்தெறிய வேண்டும். இதுவே மார்க்சின் வழிகாட்டுதல்.

 


 

;