articles

img

மனதில் உறுதி வேண்டும்! - உ.வாசுகி

செப்டம்பர் 29, 30 அக்டோபர் 1 தேதி களில்  களைகட்டித் துவங்க இருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் 16 ஆவது மாநாட்டை வரவேற்க கடலூர் தயாராகிக் கொண்டிருக்கிறது. 16ஆவது மாநாட்டைக் குறிக்கும் 16 கருத்தரங்குகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, சதுரங்கப் போட்டி, மினி மாரத்தான் என வகை வகையான நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் அவர் தம் குடும்பத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. அற்புதமான ஓவியங்கள் ஒரு பக்கம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்  மாரத்தான் போட்டியில்  பங்கேற்றது  மறுபக்கம். மேயர்,  மாவட்ட ஆட்சியர்,  காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் பங்கேற்பு  நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்க்கிறது. மாதர் சங்கம் கடந்து வந்த பாதையை சொல்லும் கண்காட்சியும், குடியி ருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற  அரசு ஊழியர் மனோகரன் நல்ல உள்ளத்தோடு வரைந்து கொடுத்த விடுதலைப் போராட்ட பெண் வீராங்கனைகள் படங்களின் அணிவகுப்பும் மாநாட்டின் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டி ருக்கின்றன. கடலூரின் சில்வர் பீச்சை தூய்மைப் படுத்தும் இயக்கம் நடைபெற உள்ளது. 

29ஆம் தேதி மாலை நடைபெற உள்ள பிரம்மாண்ட மான பெண்கள் பேரணி, பொதுக்கூட்டம் இவற்றோடு புதுகை பூபாளம், திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, காம்ரேட் டாக்கீஸின் கேங்ஸ்டா இசைக்குழு உள்ளிட்ட பாடல், நடன நிகழ்ச்சிக ளுக்காக மஞ்சக்குப்பம் மைதானம் ஆவலோடு காத்திருக்கிறது. 

எத்தகைய மாநாடு இது? 

சங்பரிவாரத்தின் ஆணாதிக்க, சாதிய, மதவெறி சித்தாந்தத்திற்கும், அகங்காரத்திற்கும் சரியான பதிலடியாக இம்மாநாடு நடைபெற உள்ளது. அச்சம் தவிர்த்து ரௌத்திரம் பழகிய புதுமைப் பெண்களின் சங்கமம் இது. இச்சைக் கிளியாய் போகப் பொரு ளாய் இருப்பதல்ல எம் பொறுப்பு என எடுத்துச் சொல்கிற மாநாடு இது. பூங்கொடி அல்ல நாமெல் லாம் போர்க்கொடி என உரத்துச் சொல்லும் பேரணி இது. காட்டிலும் மேட்டிலும் வீட்டிலும் உழைத்துக் களைத்த பெண்கள் தங்கள் தலை விதியைத் தாங்களே தீர்மானிப்பதற்காக நடக்கிற பயிற்சிப் பட்டறை இது. இங்கே சாதி, மத வித்தியாசம் எதுவும் கிடையாது. உயர்வு, தாழ்வு என்கிற பேச்சுக்கே இட மில்லை. ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலை என்கிற முழக்கங்களே மூச்சாக உலவும் போர்க்களம் இது.. 

நிலவும் சவால்கள்

விலைவாசி உயர்வு மூச்சை முட்டுகிறது. வேலை யின்மை குரல்வளையைக் கவ்விப் பிடிக்கிறது. வன்முறையோ வெறியாட்டம் போடுகிறது. சாதிக் கொடுமைகளும், ஆணவக் குற்றங்களும் நம்மை மனிதர்களாகவே கருதுவதில்லை. 

இத்தகைய சவால்களை எதிர்த்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் களம் பல கண்டி ருக்கிறது. பெட்ரோல் டீசல் மீதான செஸ், சர்சார்ஜ்  வரிகளை ரத்து செய்யவும், கேஸ் சிலிண்டர் விலை யைக் குறைக்கவும், பொது விநியோக முறையை பலப்படுத்தவும் எண்ணற்ற போராட்டங்கள் இக்கால கட்டத்தில் நடந்துள்ளன. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்த முடியாது என்கிற சூழலில், தேடிவரும் நுண் நிதி நிறுவனங்களின் வலையில் சிக்கும் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளை கையில் எடுத்து தமிழ கம் முழுவதும் வலுவான இயக்கங்கள் நடந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களில் கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்  நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த கறாரான அறி விப்புகளை செய்ய வைத்த இயக்கங்கள் இவை.  பல டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் தேவைப்படும் நிர்ப்பந்தத்தை பல்வேறு மாவட்டங்களில் மாதர் சங்கப் பெண்கள் அளித்துள்ளனர். எண்ணற்ற வன்முறைப் பிரச்சனை களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கும், வழக்கு விரைவாக முடிவதற்கும், பாதிக்கப்பட்ட வர்கள் துணிச்சலோடு இருப்பதற்கும் மாதர் சங்கத்தி னுடைய தலையீடு பெருமளவு உதவி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

மாதர் சங்க உறுப்பினர்கள் யாரும் விக்டிமாலஜி படித்தது கிடையாது, ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்களை போராளிகளாக மாற்றும் உத்தி தெரிந்த வர்கள். கவுன்சலிங் படித்தவர்கள் அல்ல, ஆனால் வாழ்க்கையைப் படித்தவர்கள். முன்னணி ஊழி யர்கள் சட்டம்  படித்தது கிடையாது, ஆனாலும் சட்டப் பிரிவுகளில் தேர்ந்தவர்கள். தற்காப்புக் கலை தெரி யாது, ஆனாலும் சமூக விரோதிகளோடும் தடியடி நடத்தும் காவலர்களோடும் மோதுகிற துணிச்சல் பெற்றவர்கள். மற்ற பெண்களைப் போலவே அடுப்பு வேலைகளில் இடுப்பு முறிகிறவர்கள் தான், ஆனாலும் இந்த சமூகம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக எதனையும் சந்திப்பவர்கள். சமத்து வத்திற்காக  வாயாடிகளாகவும்,  சண்டைக்காரிகளாக வும் செயல்படும் இந்த வீராங்கனைகள் தான் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெரும் சொத்து. 

கருத்தியல் போராட்டம்

சாதிய சக்திகள், பெண்களை, சாதி ‘தூய்மையை’ பாதுகாப்பவர்களாக, ஆண் வாரிசுகளை, குலக்கொ ழுந்துகளை உருவாக்குபவர்களாக மட்டுமே பார்க்கின்றன. மதவாத சக்திகள் பெண்களை வீட்டுக் குள்ளேயே நிறுத்தி அவர்களது உரிமைகளை முடக்கு கின்றன. எது லாபம் தருகிறதோ அதனை வியாபாரம் செய் என்கிற நவீன தாராளமயக் கொள்கையின் தாரக மந்திரம், வாடகைத் தாய்களையும், கருமுட்டை விற்பனையாளர்களையும் உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. கும்பல் பாலியல் வல்லுறவு எவ்வித மனக் கிலேசமும் இன்றி நடந்து வருகிறது.  சங்கிகளின் ஆட்சியில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மீண்டும் சோதிக்கப்படுகின்றனர். பில்கிஸ் பானு வின் வாழ்க்கை இதற்கு அண்மைக்கால உதாரணம். பெண்களைப் பாதுகாப்போம் என்பது போன்ற பிர தமரின் வாய்ச்சவடால் முழக்கங்களுக்கு குறை வில்லை. 

தேசிய கல்விக் கொள்கை அடுத்த பத்து ஆண்டு களில் எத்தகைய மாணவர்களை உற்பத்தி செய்யும் என நினைத்துப் பார்க்கும்போதே இடி விழுகிறது. சமூகம் பற்றிய அக்கறையில்லாத, சமத்துவத்தில் நம்பிக்கை அற்ற, மனிதநேயம் இல்லாத, அறிவியல் பார்வை  அகற்றிய, எல்லாவற்றிலும் பணக்கணக்கு பார்க்கிற இயந்திரங்களாகத் தான் கல்வி நிலையங்க ளில் இருந்து வெளிவருவார்கள். சங்கிகள் சொல்லும் இந்துத்துவ ராஷ்டிரம் உருவானால், அதன் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்கிற நகலை 30க்கும் மேற்பட்ட சாதுக்கள் சமீபத்தில் வெளியிட்டனர். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, மதப் பிரதிநிதிகள் தான் இருப்பார்கள், இது தில்லி யில் கூடாது, வாரணாசியில் தான் கூடும் என்பது துவங்கி நீதி பரிபாலனம் இன்றைய பாணியில் இருக்காது, திரேதா யுகம், துவாபர யுகத்தில் நிலவிய நீதி வழங்கும் முறை தான் அமலுக்கு வரும். மொத்தத்தில் நிர்வாகத்தின் அடிப்படையாக நால் வருண முறை இருக்கும் என அந்நகல் கூறுகிறது. 

எந்தச் சாதியில் பிறந்தாலும் பெண்கள் சூத்திரர்க ளுக்கு சமமானவர்கள், அதாவது அவர்கள் கல்வி கற்கக் கூடாது. ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது, சொத்து வைத்திருக்கக் கூடாது. இதுதான் அவர்கள் முன்வைக்கும் புதிய இந்தியா. இத்தகைய கருத்து களை எதிர்க்காமல் பெண்ணுரிமையைப் பாதுகாக்க முடியாது. பெண் அடிமைத்தனத்தை நியாயப் படுத்தும், பயன்படுத்தும் நில உடமை மற்றும் முத லாளித்துவ தத்துவங்களை எதிர்க்காமல் நிகர் நிலை குறித்து கனவு காண முடியாது. வெறுப்பு அரசிய லும், கார்ப்பரேட் ஆதரவு கருத்துக்களும், ஆணாதிக்க  அராஜகங்களும் கடந்த காலத்தை விட படுதுணிச்ச லாக முன்வைக்கப்படுகிறது. ஜனநாயக, மதச்சார் பற்ற, பாலின சமத்துவ, இடதுசாரி கருத்தியல் மட்டுமே இதற்கு மாற்று மருந்து என்பதை உரக்கச் சொல்லும் மாநாடாக இது திகழும். 

கட்டுரையாளர் : அகில இந்திய துணைத் தலைவர்,  ஜனநாயக மாதர் சங்கம்
 



 

;