articles

img

ஜனநாயகச் சுடர் காயிதே மில்லத்! - மல்லை சி.ஏ.சத்யா

அப்போதைய சென்னை மாகாணம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த திரு மியாகான் ராவுத்தர் - திருமதி முகைதீன் ஃபாத்திமா தம்பதியினரின் மகனாக பிறந்த ஆண் குழந்தைக்கு காயிதே மில்லத் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் 

‘வழிகாட்டும் தலைவர்’

காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள் ‘வழிகாட்டும் தலைவர்’ என்பதாகும். பெற்றோரின் தீர்க்க தரிசனம் இந்திய நாட்டின் மதிப்பு மிக்க தலைவராக உயர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் மாபெரும் தலைவராக காயிதே மில்லத் சாகிப் அவர்கள் திகழ்ந்தார்.  காயிதே மில்லத் தந்தை மியாகான் ராவுத்தர், இஸ்லா மிய மார்க்கப் பற்றாளர், முஸ்லிம் ஜமாஅத் தலைவராக (மௌலவியாக) இருந்தவர். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்திற்கு துணிகள் விற்பனை செய்து வந்த புகழ் பெற்ற வர்த்தகர். 

தேச பக்தர் 

இந்தியா - சீனா போரின் போதும் இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் தன்னுடைய பெயரை முதல் நபராக போருக்கு சேர்க்க வேண்டும் என்றும் தமது ஒரே மகன் திரு. மியாகான் அவர்களை போருக்கு அனுப்புவதாகவும் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதிய தலை சிறந்த தேசபக்தர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாகிப் அவர்கள். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக முகமது  அலி ஜின்னா இருந்த போது காயிதே மில்லத் சென்னை மாவட்ட தலைவராக, பின்னர் சென்னை மாகாண தலைவ ராக, அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் பணியாற்றியவர்.

பிரிவினை

முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு கேட்டு  1947 ஆகஸ்ட் 14 ல் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக சுதந்திரம் பெற்று நின்ற வேளையில் நாட்டை  பிரித்த கட்சி அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி என்று அழுத்த மான காரணத்தைச் சொல்லி அக்கட்சியை கலைத்து விடுங்கள் என்று தேசப்பிதா மகாத்மா காந்தியும், நேரு உள்ளிட்ட தேசிய தலைவர்களும்  கருத்து கூறியதைத் தொடர்ந்து முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணித் தலைவர்கள் பலர் கட்சி மாறி சென்ற வேளையில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி இரண்டாக பிளவுபட்டது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியாகவும் இரண்டாக பிரிந்து அதற்கு உண்டான சொத்துக்களை இரண்டாக பிரித்தபோது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 17 லட்ச ரூபாய்  பங்கு தொகை கொடுப்பதற்கு முன் வந்த போது, பாகிஸ்தான் எங்களின் அன்னிய நாடு; அந்த நாட்டின் மூலம் வருகின்ற பணத்தை பெற மாட்டேன் என்று சொல்லி எங்கள் நாட்டில்  நாங்கள் சம்பாதித்துக் கொள்வோம்; நீங்கள் செய்ய வேண்டி யது விடுதலை பெற்ற பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை மக்களான இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்ஸி கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, சுயமரியாதை யோடு வெளியே வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றவர் காயிதே மில்லத் சாகிப் அவர்கள்.

தமிழ் ஆட்சி மொழி 

இந்திய அரசின் பல நியமனப் பொறுப்புக்களில் பங்கேற்று பாடுபட்ட  தகைசால் பெருந்தகை காயிதே மில்லத்,  இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த போது; இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்த போது இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கக்கூடிய அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்று பிற மொழிகளின் தாயாக விளங்கும் உலகின் பழமையானது தமிழ் மொழி மட்டுமே என்று வாதாடிய மொழிப் பற்றாளர் காயிதே மில்லத்.

தேர்தல்

1946 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று  1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வராக பணியாற்றியவர். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தான் போட்டியிட்ட கேரளா மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க செல்லாமலேயே வேட்புமனு வை தபாலில் அனுப்பி விட்டு வெற்றி வாகை சூடிய மக்கள் தலைவர் காயிதே மில்லத், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 

திராவிட இயக்க ஆட்சி

1937 நீதிக்கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து 30 ஆண்டுகள் கழித்து பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967 ஆம் ஆண்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தது. அதற்கு அடித்த ளம் அமைத்து தோள்கொடுத்த ஜனநாயக சக்திகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அதன் தலைவர்  காயிதே மில்லத் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் அது மிகையாகாது. இந்திய எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு; தமிழே எங்கள் மொழியாகும்; தன்மானம் எங்கள் உயிராகும்  என்று காலமெல்லாம் எந்த கொள்கைக்காக வாழ்ந்தாரோ அந்த கொள்கை வழிப் பயணம் 05.04.1972 முற்றுப் பெற்றது. 

தபால் தலை

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு இந்தியா அவரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருந்தபோது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.  அவர்கள் இந்திய அரசுக்கு காயிதே மில்லத் அவர்களின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று உள்ளிட்ட எல்லா சிறப்பு களையும் எடுத்துச் சொல்லி அதை ஒரு ஆவணமாக தயார்  செய்து கொடுத்தது,  அதை இந்திய தபால் துறை பரிசீலித்து காயிதே மில்லத் தபால் தலை வெளியிட வைத்த பெருமை யைப் பெற்றார்.

ஒன்றிணைவோம்! 

காயிதே மில்லத் சாகிப் அவர்கள் கனவு கண்ட புதிய இந்தியா, மதவாத சக்திகளால் பின்னுக்கு தள்ளப்பட்டு பிற்போக்கு சக்திகள் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் போது கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் களம் கண்டு பகை வெல்ல! மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட, இந்திய அரசியல் வானில் ஜனநாயகச் சுடராக ஜொலித்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாகிப் அவர்கள் பிறந்த ஜுன் 5-இல் உறுதி ஏற்போம்! கட்டுரையாளர் : துணை பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக
 







 

;