articles

செங்கோலும்... கொடுங்கோலும்... - ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)

பக்கத்து நாட்டு ராஜா மாதம் ஒரு முறை “சிறப்பு பட்டிமன்றம்”  நடத்துகிறான் என்று கேள்விப்பட்டு பரபரப்பானான்  23ஆம் புலிகேசி. “சும்மா இருப்பது சுகமில்லை” என்று தனது தரப்பில் “இலக்கிய நேரம்” தொடங்கினான் தனது  தறிகெட்ட தர்பாரில். திரும்பிய இடம் எல்லாம் “திறப்பாடு இலாதவர்கள்” திரியும் சபை அது. “முடங்கிய” மூடர் “அடங்கிய” அவை. யோசிக்கத்தெரிந்த எவனும் புலிகேசியின் தர்பாரில் கனவில் கூட கால்வைக்க முடியாது. “வடிகட்டியவர்களுக்கு” மட்டும் தான் வாய்ப்பும் வரவேற்பும். இலக்கிய நேரத்தின் நெறிமுறையில் குழப்பமே இல்லை. விவாதப் பொருளை புலிகேசி அறிவிப்பான். இவன் யாரைப் பேசச் சொல்கிறானோ அவன் பேச வேண்டும். ஆனால்  இறுதித்தீர்ப்பு எப்போதும் இவனுடையது தான். மற்றவர் பேசும் போது மௌனம் காப்பதும் புலிகேசி தும்மினால் கூட கரவொலி எழுப்புவதும் அவையோரின் செஞ்சோற்றுக்கடன். ஒருமுறை புலிகேசியின் தும்மலில் “எதுகை மோனை” இருப்பதாகக்  கண்டுபிடித்தவன் தான் இப்போது  பண்பாட்டுத் துறையைப் பார்த்துக்கொள்கிறான். இலக்கிய நேரத்தின் முதல் நாள் நிகழ்வே கலகலப்பாக இருந்தது...

“ஔவையார் யார்?” என்ற முதல் வினாவை தொடுத்துவிட்டு மீசையைத் தடவிக்கொண்டான் புலிகேசி. அவர் ஒரு பெண்பால் புலவர் என்பதை சரியாக சொன்ன  நிதியமைச்சருக்கு காவலாளி கையால் பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தான் புலிகேசி.. ஆனால் அடுத்த கேள்வியில் ஆடிப்போனது அவை. “நாலடியார் யார்?” என்று நக்கலாக சிரித்தான் புலிகேசி... அவர் ஒரு ஆண்பால் புலவர் என்ற அவசரப்பட்டு உளறிய உணவுத்துறை அமைச்சரின் ஊதியத்தை பாதியாய் குறைத்தான் புலிகேசி... இருந்தாலும் நாலடியார் யார் என்பது புலிகேசிக்கும் தெரியாததால் அந்த விடுகதை இன்று வரை வெளிச்சம் பெறவில்லை. மன்னனே அறிவிக்காததால் நாலடியார் யார் என்பது “நாட்டு நலன் சம்பந்தப்பட்ட அரசாங்க ரகசியமாகத்தான் இருக்கும்” என்று அவையிலிருந்த ‘அவை’ பேசிக்கொண்டன. இன்னொரு நாள் புலிகேசியின் ஒரு வினாவிற்கு  விடைதரும் அவசரத்தில் அமைச்சர் ஒருவர் வாய்தவறி ‘வள்ளுவர்’  பெயரையும் சொல்லி அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால் என்று பட்டியலும் போட்டுவிட்டார். புலிப்பால் குடித்து வளர்ந்ததாக  பொய்சொல்லிவந்த புலிகேசிக்கு தனக்குத் தெரியாமல் இத்தனை ‘பால்’ எப்படி இருக்கலாம் என்று ஆத்திரம் வந்தது. “அமைச்சர் அத்துமீறுகிறார்” என்ற கோபத்தில் புலிகேசி ஒரு வினாக் கணையைத் மீண்டும் தொடுத்தான். பசும்பால் வெள்ளை. ஆட்டுப்பால் வெள்ளை. “

அறத்துப்பால் என்ன நிறம்” நிலைதடுமாறிப் போனான் அமைச்சன். “மன்னா.. அறத்துப் பால் நீக்கமற நிறைந்திருப்பது.. அது நிறமற்றது..” “குடம் குடமாய் நிறைந்திருக்கும் கோமாதாவின் பாலிற்கே நிறம் இருக்கும் போது நீக்கமற நிறைந்த பாலிற்கு நிறமில்லையா? அதைக் கண்டறிய உனக்கு திறமில்லையா” தர்பாரில் இருந்த தற்குறிகள் அனைவரும் “திறமில்லை திறமில்லை” என்று குரல் கொடுத்தார்கள். அமைச்சருக்கு இடமாற்றம். அரண்மணை பால்பண்ணையில் இப்பொழுது பால் கணக்கெழுதுகிறார். ஒரு முறை செங்கோலுக்கும் கொடுங்கோலுக்கும் வித்தியாசம் என்ன? என்று ஒரு விவாதம் வந்தது. எப்போதோ குறள் படித்திருந்த ஓணாண்டிப் புலவர் “ஒருபாற் கோடாமை” “முறைசெய்யா மன்னவன்” என்று விளக்கத்தொடங்கினான்... ஆனாலும் 23 ஆம் புலிகேசிக்கு இதுபற்றிய தெளிவான கருத்து இருப்பது தெரிந்திருந்தால் ஓணாண்டிப் புலவர் “சும்மா” இருந்திருப்பார்... “யாரங்கே..” என்று குரல் கொடுத்தான் புலிகேசி.. “எடுத்துவாருங்கள் இரண்டு கோல்களையும்”.. பட்டுத்துணி சுற்றிய இரண்டு கோல்களையும் எடுத்துவந்தார்கள் காவலர்கள்...

செம்மரத்தில் செதுக்கி சிவப்பாக இருந்தது ஒன்று. “இது என்ன”? என்றான் புலிகேசி. “செங்கோல்” என்று சிலிர்த்தது அவை.. அடுத்ததை எடுத்தான் அது கொடுக்காபுளி பறிக்கும் தொரட்டி போல கோணலாக இருந்தது. “இது என்ன” என்று புலிகேசி கேட்ட நொடியில் அவை அதிர்ந்தது. “இது கொடுங்கோல்...” “தவறான” விளக்கம் அளித்த ஓணாண்டிப் புலவரின் முகத்தில் கலவரம். அவரை அருகில் அழைத்த புலிகேசி செங்கோலால் அவர் வயிற்றில் ஓர் அழுத்து அழுத்தி விட்டு சொன்னான். “இது செங்கோல் செங்குத்தாய்க் குத்த...” அடுத்து குடைப்பிடி போல  கோணிய தடியை அமைச்சரின் கழுத்தில் மாட்டி இழுத்தான். “இது கொடுங்கோல் கொக்கி போட்டு இழுக்க..” வெட்கம் கெட்ட சபை விழுந்து விழுந்து சிரித்தது. இதற்கிடையில் “செங்கோல் விளக்கிய சிகரம் நீயே... கொடுங்கோல் உணர்த்திய கோபுரம் நீயே” என்று நீட்டிமுழக்கினான் சொல் விற்றுப் பிழைக்கும் சோம்பேறி ஒருவன்.. அவை அத்துடன் ஒத்திவைக்கப்பட்டது.. (மீள்)

;