articles

அரசியலிலிருந்து மதத்தை அப்புறப்படுத்துங்கள்! - கே.எம். ஜோசப், பி.வி.

புதுதில்லி, மார்ச் 31 - வெறுப்பு எனும் தீய வளையத்தில் தேசம்  சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அரசிய லிலிருந்து மதத்தை அப்புறப்படுத்துவதே, இதற்கான தீர்வு என்றும் நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. மேலும், “முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது” என்றும் குறிப்பிட்டுள்ளது. வெறுப்புப் பேச்சுக்களை கட்டுப்படுத்து வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தக் கோரி ஷாகீன் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த விவ காரத்தில் வேறு சில மனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த புதனன்று (மார்ச் 29) விசாரித்தது. மனுதாரர் ஷாகீன் அப்துல்லா தரப்பில் வழக் கறிஞர் நிஜாம் பாஷா ஆஜராகி வாதாடி னார். அவர், வெறுப்புச் பேச்சுக்கள் தொடர்பான  விவகாரத்தில், எந்தவொரு புகாருக்கும் காத்தி ருக்காமல் அரசுகள் தாங்களாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

4 மாதத்தில் 50 பேரணிகள்

மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் 50 பேரணிகள் நடத்தப் பட்டுள்ளன; ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு வெறுப்பு பேச்சு மாநாடு நடைபெறுகிறது; இது மகாராஷ்டிராவில் மட்டுமே உள்ள நிலை மையாக உள்ளது; எனினும், இவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று நிஜாம் பாஷா குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் செய்தி அறிக்கைகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று கூறியதுடன், “இவ்வாறு செய்தி அறிக் கைகளைத் தாக்கல் செய்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றமாக மாற்றுகிறோமா?” என்றும் கேள்வி எழுப்பி னார். அப்போது, “மாநில அரசுகள் வெறுப்புப் பேச்சுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க வேண்டி யது உள்ளது. இவ்வாறு செயலற்று இருப்பதற்கு எதற்கு அரசு?” என்று கேட்ட நீதிபதி கே.எம்.  ஜோசப், “தற்போதைய வெறுப்புப் பேச்சு விவ காரம், இந்திய ஜனநாயகத்தின் இதயத்தின் இயக்கத்தோடு தொடர்புடையது என்று இதே  சொலிசிட்டர் ஜெனரல் முன்பு மனதார ஒப்புக் கொண்டவர்தானே!” என்றும் நினைவுபடுத்தி னார்.

இதுதொடர்பான வாதப் பிரதிவாதங்களின்  போது, துஷார் மேத்தாவிற்கு பதிலளித்த நீதிபதி கே.எம். ஜோசப், “இந்த தேசம் வெறுப்பு எனும்  தீய வளையத்தால் சூழப்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வு அரசியலில் இருந்து மதத்தை தள்ளி வைப்பது மட்டுமே. அரசியலில் இருந்து மதம் அப்புறப்படுத்தப்படும் அந்தத் தருணத்தில் இந்த வெறுப்புப் பேச்சுக்கள் எல்லாம் தடை படும்” என்றார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவோ, “அரசியலுக்கும் வெறுப்புப் பேச்சுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று ஒரேயடி யாக சாதித்தார். ஆனால், “நிச்சயமாக வெறுப்புப் பேச்சுக்களுக்கும், மதம் மற்றும் அரசி யலுக்கும் தொடர்பு இருக்கிறது. அரசியல்வாதி கள் மதத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்று நீதிபதி கே.எம். ஜோசப் உறுதிபடக் கூறினார்.

கட்டவிழ்த்துவிடப்படும் வெறுப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி. நாக ரத்னாவும், “சகோதரத்துவம் என்ற நன்மதிப்பில், இன்று வெறுப்புப் பேச்சுக்கள் விரி சல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த வெறுப்புப் பேச்சுக்களை மதம் சார்ந்த சில அமைப்புகள் உருவாக்குகின்றன. முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உரைகளைக் கேட்க, தொலைதூரப் பகுதிகளிலிருந்தும், மூலை முடுக்கிலிருந்தும் மக்கள் கூடினர். ஆனால் இந்தக் காலத்தில் எவ்வித ஞானமும் இல்லாத சிறிய அமைப்புகள் எல்லாம் வெறுப்புப் பேச்சுக் களை கட்டவிழ்த்து விடுகின்றன” என்றுவிமர்சித்தார். மேலும், “இவ்வாறு வெறுப்புப் பேச்சை பரப்புபவர்கள் இந்தியாவை எங்கே இழுத்துச் செல்கிறார்கள்? வெறுப்புப் பேச்சுக்களுக்காக ஒவ்வொரு நபர் மீதும் அவமதிப்பு நடவடிக்கை  எடுப்பதாக இருந்தால், இந்த நீதிமன்றம்தான் வேலை என்னவாகும்?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பி.வி. நாகரத்னா, “ஒவ்வொரு நாளும்,  உதிரி சக்திகள் மற்றவர்களை இழிவுபடுத்து வதற்காக டிவி மற்றும் பொது விவாதம் உள்ளிட்ட தளங்களில் வெறுப்புப் பேச்சை பேசுகின்றன. சகிப்பின்மை, அறிவின்மை, கல்வி யின்மையால் மதி மயக்கம் ஏற்படுகிறது. இதை  அகற்றுவதில் நாம் முதன்மை கவனம் செலுத்த  வேண்டும். சகிப்புத்தன்மை என்பது யாரையும்  சகித்துக்கொள்வது அல்ல, மாறாக வேறுபாடு களை ஏற்றுக்கொள்வது. ஆனால், இன்றைய  சகிப்பின்மைக்கு, அறிவு மற்றும் கல்வியி ன்மையே முக்கியமான காரணமாக உள்ளது. இந்த நாடு நம்பர் ஒன் இடத்திற்குச் செல்ல வேண்டுமானால், மற்ற மக்களை அல்லது சமூ கங்களை இழிவுபடுத்த மாட்டோம் என்று  இந்திய மக்கள் ஒவ்வொருவரும் உறுதி யெடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

வல்லரசாகும் முன்பு...

இதையே நீதிபதி கே.எம். ஜோசப்பும் வலி யுறுத்தினார். “வல்லரசாகும் முன்னர் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். வெறுப்புப் பேச்சுக்கள் என்பவை கண்ணியத்தின் மீதான  தாக்குதல். கண்ணியத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடக்கும்போதுதான், ‘பாகிஸ்தா னுக்கு செல்லவும்’ போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வெளியாகும். அவர்கள் (முஸ்லிம் கள்) தாமாகவே முன்வந்து இந்த தேசத்தை  தேர்வு செய்தவர்கள். அவர்கள் உங்களின் சகோ தரர்கள், சகோதரிகள். நீங்கள் பள்ளிக்கூடத் திலேயே ‘இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர - சகோதரிகள்’ என உறுதிமொழி ஏற்றீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எனக்கு 65 வயதாகிறது.

நான் பழமையானவாக இருக்க லாம். இன்னும் 4 மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். ஆனால் 75 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் நம் தேசத்தின் பயணத்தைத் தொடங்கிய போது நம் இலக்கு சட்டத்தை மதிக்கும் தேசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆகையால் வெறுப்பு எனும் கீழ்நிலைக்கு நாம் இறங்கக் கூடாது” என்று ஜோசப் குறிப்பிட்டார். மதப் பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று இந்து சமாஜின் வழக்கறிஞர் கூறியதற்கு, “மதப் பேரணி நடத்த உரிமை உண்டு என்ற போதிலும் பேரணியில் பங்கேற் பவர்களின் செயல் என்னவாக இருக்கிறது? நமது முன்னோர்கள் கட்டி காத்த சிறுபான்மை யினரின் உரிமைகளை இப்போது என்ன செய்யப் போகிறோம்? மற்றவர்களின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்வதுதானே, சகிப்புத்தன்மை...? என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கூறினார்.  நீதிபதி கே.எம். ஜோசப் கூறுகையில், “இந்த நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்க ற்கள் போல உங்கள் தலையில் விழும். உண்மை யான வளர்ச்சி என்பது நமது நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும். அதற்கு நாம்  சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டை சிறந்த வாழும் இடமாக மாற்றமுடியும்” என்றார். நிறைவாக, வெறுப்புப் பேச்சுகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பதில்  மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி கள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வா னது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை யை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


 

;