articles

img

திருமலைகிரியில் ஆலய வழிபாட்டு உரிமை மீட்பு : தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

சென்னை,பிப்.5- சேலம் மாவட்டம் திருமலைகிரியில்  ஆலய வழிபாட்டு உரிமை மீட்கப்பட்டதற்கு தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு,  பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்ததற்காக தலித் இளைஞர் பிரவீன் என்பவரை திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளரும்,திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான டி.மாணிக்கம் சாதிய ஆணவத்துடன் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டுகிற காணொலி தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது.  திமுக தலைமை டி.மாணிக்கத்தை கட்சி யில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.காவல்துறை, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறை யில் அடைத்தது.மேற்கண்ட நடவடிக்கை கள் குறிப்பிடத்தக்கவை.

காணொலி வெளிவந்தவுடன் டி.மாணிக்கம் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு பிரச்சனைக்கு காரணமான பெரிய மாரியம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு செய்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேலு ஆகியோர் ஜனவரி 31 அன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து,தலித் மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்திட வேண்டும் என்று மனு  அளித்து கேட்டுக்கொண்டார்கள்.  மேற்கண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 3  அன்று  தலித் மக்களை  மாரியம்மன் ஆலயத்துக் குள் அழைத்துச் சென்றதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு பாராட்டு கிறது.  மேற்கண்ட வழிபாட்டு உரிமையை மேலும் உறுதி செய்யும் விதமாக பிப்ரவரி 4 அன்று திருமலைகிரி கிராமத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் 

யு.கே. சிவஞானம்,சேலம் மாவட்டத் தலைவர் குழந்தைவேலு, திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், தங்கவேலு, ராமமூர்த்தி,பிரவின்குமார் மற்றும் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்,  திருமலைகிரி கிராமத்து  தலித் மக்களையும் குறிப்பாக வன்கொடு மையை எதிர்கொண்ட பிரவீன் அவர்களின் சகோதரர் அருண்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆலய வழிபாட்டு உரிமையை உறுதி செய்தனர். சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மேற்கண்ட  நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வரவேற்கிறது.  அதேபோல் தொடர்ந்து வழிபாட்டு உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.  அருவருக்கத்தக்க வகையில் சாதி ஆணவத்துடன் பேசிய டி.மாணிக்கம் மீதான  வழக்கை விரைவுபடுத்தி தண்டனையை உறுதிப்படுத்திட வேண்டும்.  தீர்ப்பு வெளிவருகிறவரை மாணிக்கம் பிணையில் வெளிவருவதை காவல்துறை அனுமதிக்கக்கூடாது. மேலும் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலைப்போல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான அனைத்துக் கோவில்களிலும் சாதியப் பாரபட்சம் இன்றி வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு உறுதிசெய்திட   வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;