articles

img

இருளின் பிடியில் புதுச்சேரி பல்கலை. ஒன்றுபட்டு மீட்க களமிறங்குவோம்! - எஸ்.ராமச்சந்திரன்

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழ கங்களுக்குள் ஓர் உயர்ந்த இடத்தை  தனக்கென தக்க வைத்துக் கொண்டிருந்த  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், கடந்த ஆறு ஆண்டுகளில் சரசரவென்று சறுக்கி தேசியத் தர வரிசைப் பட்டியலில் இன்று 68 வது இடத்தில் விழுந்து கிடக்கிறது. ஒளி பரப்ப வேண்டிய பல்கலைக்கழகம் ஒளி இழந்து ஊழல் சகதியில் சிக்கி இருண்டு கிடப்ப தற்கு என்ன காரணம்? புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலை, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் பெயர் பெற்று விளங்கியது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துணைவேந்தராக பேராசிரியர் குர்மித் சிங் அவர்கள் நியமிக்கப்பட்டார். அன்றிலி ருந்து பல்கலைக்கழக வரலாற்றின் இருண்ட பக்கங்கள் தொடங்கின.  

பந்தாடப்பட்ட பதிவாளர்கள்

பல்கலைக்கழக பதிவாளர் பதவி துணைவேந்த ருக்கு அடுத்த பொறுப்புள்ள பதவியாகும். கடந்த 2018 ஆம் ஆண்டு பல்கலைக்கழகப் பதிவாளராக முனைவர் சசிகாந்த தாஸ் என்ற கல்லூரி முதல்வர் முழு நேரப் பதிவாளராக நியமிக்கப்படுகிறார். இதே சமயத்தில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பணியாற்றிய ஏ.கே.பிரகாஷ் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முழுநேர நிதி அதிகாரியாக நிய மிக்கப்படுகிறார். இவர்கள் இருவரும் பதவி ஏற்ற எட்டு மாதத்திலேயே துணைவேந்தர் குர்மித்சிங் கால் வெளியேற்றப்படுகிறார்கள். இவர்கள் வெளியேற் றப்பட்டதற்கு ஒரே காரணம், ஒன்றிய அரசினால் கருப்பு பட்டியலிடப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு பல்கலைக்கழக வகுப்பறைகள், ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் போன்றவற்றை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில்  சட்டத்திற்கு புறம்பாக துணைவேந்தரின் ‘கட்டளைப்படி’ கையெழுத்திட மறுத்ததே ஆகும்.  அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகப் பதிவாளர் பதவியையும், நிதி அதிகாரிப் பதவியையும் தன் சொல்லுக்கு கட்டுப்படும் பேராசிரியர்களைக்  கொண்டே துணைவேந்தர் குர்மித் சிங் நியமித்துக் கொண்டு வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவை இரண்டுமே பல்கலைக் கழகத்தினுடைய முழு நேர நிரந்தரப் பதவிகள். ஆனால் இன்றைய தேதி வரை தற்காலிக அதிகாரிகளா லேயே இந்த பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

சசிகாந்த தாஸ் பதிவாளர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, துணைப்பதிவாளராக இருந்த முனைவர் சித்ரா பதிவாளராக நியமிக்கப் பட்டார். முறைகேடான பணி நியமனங்களுக்கு இவர் கையெழுத்திட மறுத்ததால் இவரும் வெளியேற்றப் பட்டார். இவரைத் தொடர்ந்து பொருளாதாரப் பேரா சிரியர் அமரேஷ் சமந்தரயா பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.  பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர் கள் மீது துணைவேந்தர் குர்மித்சிங் பல்வேறு பழி வாங்கும் நடவடிக்கைகளை எடுக்க பதிவாளரை நிர்பந்திக்கிறார். இதற்கு ஒத்துழைக்க மறுத்த அமரேஷ் சமந்தரயாவும் வெளியேற்றப்படுகிறார். இவரின் வெளி யேற்றத்தைத் தொடர்ந்து தற்போது பதிவாளர் பதவி யில் புவிசார் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரி யர் முனைவர் ரஜினி புட்டாணி நியமிக்கப்பட்டிருக்கி றார்.  இந்த பதிவாளரும் இன்னும் எத்தனை நாள் நீடிப் பாரோ? துணைவேந்தருக்கு மட்டுமே வெளிச்சம். புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் தற்காலிக பொறுப்பு வகிப்பது போல் புதுவைப் பல் கலைக்கழகத்திலும் முக்கியமான அதிகாரிகள்  அனைவரும் தற்காலிக பொறுப்பே வகிக்கிறார்கள். துணைவேந்தரைத்  தவிர அடுத்த கட்ட அலுவலர் கள் அனைவருமே தற்காலிக பதவியில் தான் நீடிக்கி றார்கள்!.

தலையாட்டி பொம்மையாக    ஆட்சி மன்றக்குழு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழுவில் நியமிக்கப்படும் பெரும்பான்மையோர் துணைவேந்தரின் கட்டுப்பாட்டில் தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்கள் தான். புதுச்சேரி பல்கலைக் கழகச் சட்டம் 1985, வழிகாட்டியிருக்கக் கூடிய நெறிமுறைகள் -  விதிமுறைகளுக்கு முரணாக பலர் ஆட்சிமன்றக் குழுவிற்கு துணைவேந்தரால் நிய மிக்கப்பட்டுள்ளனர்.    ஒவ்வொரு மத்திய பல்கலைக்கழகத்திலும் இணை வேந்தர் பதவி  முக்கியமானதாக இருக்கும். அகில இந்திய அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்கலை. விதிமுறைகளின் படி அமைக்கப்பட்ட தகுதி வாய்ந்த குழுவால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதுவை பல்கலைக் கழகத்தில் இணை வேந்தர் பதவிக்கு பதிலாக இயக்குனர் பதவியே செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனர் பதவியும் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. தனக்கு கட்டுப்பட்ட பேராசிரியர் தரணிக்கரசு என்பவரை குர்மித் சிங் தற்காலிகமாக இயக்குநர் பதவியில் நியமித்துக் கொண்டுள்ளார். 

இதுபோன்றே பல்கலைக்கழகத்தில் புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் பல்கலைக் கழக விதிப்படி நியமிக்கப்படவில்லை. தனக்கு வேண்டி யவர்களையே இந்த பதவிகளில் நியமித்துக் கொள்கி றார்.  இப்படி நியமிக்கப்பட்டவர்களையே ஆட்சி மன்ற குழுவின் உறுப்பினர்களாகவும் ஆக்கிவிடுவார். இதற்கு அடிப்படையான காரணம், பணி மூப்பு பட்டியல் (சீனியாரிட்டி லிஸ்ட்) 10 ஆண்டுகளாக வெளியிடப்படாததுதான். இதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. காலாவதியாகிப் போன பட்டியல் அடிப்படையிலான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களே ஆட்சி மன்றக் குழுவில் நியமிக்கப்படுகின்றனர். மொத்தத் தில் தலையாட்டி பொம்மைகளே ஆட்சி மன்றக் குழு வாக இயங்கிக்    கொண்டிருக்கிறது. பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் தொடர்பான முடிவுகளை ஆட்சி மன்றக் குழு தான் தீர்மானிக்கும். இந்த ஆட்சி மன்றக் குழுவில் ஒன்றிய அரசினால் நிய மிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களும் இருப்பார்கள். சமீபத்தில் கூடிய ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் நிர்வாக ஊழல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஒன்றிய அரசினால் பிப்ரவரி மாதத்தில் நியமிக்கப் பட்ட சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். கூட்டம் பாதியிலேயே முடிந்தது. 

பணி நியமனங்களில் மெகா ஊழல்

கடந்த 2019 ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட பேரா சிரியர் பணியிடங்களுக்கும், 50க்கும் மேற்பட்ட உதவிப் பதிவாளர்கள், துணைப் பதிவாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு புதுவை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பங்களை பெற விளம்பர அறிவிக்கை (Advt.No.PU/RC/2019/34. dt 05.08. 2019) வெளியிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பணி நியமன விளம்பரங்களுக்கு 2021, 2022 மற்றும் ஜனவரி 2023 வரை பேராசிரியர்களும், அலுவ லர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த பணிய மர்த்தல்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் சட்ட திட்டங்க ளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆலோச னைகளுக்கும் முரணாகவே நடந்தன.  ஒன்றிய அரசின் பணி நியமனத்துறை 2016 ஆம்  ஆண்டு வெளியிட்ட ஆணையின்படி, பணி நியமனங்க ளுக்கு விளம்பர அறிவிக்கை  ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது அறிவிப்பு வெளி யிட்ட தேதியில் இருந்து ஆறு மாதத்திற்குள் பணி நிய மனப் பணி உள்பட அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும். இதே ஆணையை பல்கலைக்கழக மானியக் குழுவும் 2019 வெளியிட்ட சுற்றறிக்கை மூல மாக வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சகமும் இந்த நடைமுறையை வலி யுறுத்தி இருப்பது மட்டுமல்லாமல் பணி நியமனங் கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. இந்த வழி காட்டு நெறிமுறைகளுக்கும், ஆணைகளுக்கும் முர ணாகவும் புறம்பாகவுமே துணைவேந்தர் குர்மித் சிங் தலைமையிலான நிர்வாகம் செயல்பட்டு இருக்கிறது.  இதுவரை 86 பேராசிரியர்கள் 54 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் நியமித்துள்ளது. இந்த பணியிடங்க ளுக்கான வியாபாரம்  பெரும் கையூட்டு மூலம் நடை பெற்று இருக்கிறது. தலா ரூ.35 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெறப்பட்டதாகத் தெரிகிறது. 

மாணவர் விரோத    நடவடிக்கைகள்

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மிக அதிகமான கல்விக் கட்டணம் வசூலிப்பது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தான். 2019 ஆம் ஆண்டு பன்மடங்கு கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர் பேரவையை தக்க வைத்துக் கொண்டி ருக்கும் இந்திய மாணவர் சங்கம், இந்த கல்விக் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆயி ரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும், உயர்த்தப்பட்ட கல்வி கட்ட ணத்தை திரும்பப் பெறவும் போராடினர். மாணவர்க ளுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை களைத் தீர்ப்பதற்கு பதிலாக அவர்கள் தன்னை நெருங்காதபடி சுற்றுச்சுவரை எழுப்பினார் மேற்படி துணைவேந்தர் குர்மித்சிங்.  அதுமட்டுமல்லாமல், போராடும் மாணவர்கள் மீது புதுவை அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தில் பல்கலைக்கழகம் சார்பாக வழக்குத் தொடர்ந்தார். இது எந்த கல்வி வளாகத்திலும் நடைபெறாத அராஜகம்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்த உத்தரவை துணைவேந்தர் மதிக்க வில்லை. அதை வெறும் ஏட்டளவில் மட்டுமே நடை முறைப்படுத்தியது. பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கல்விக் கட்டண குறைப்பு எதுவும் நடைபெற வில்லை. 2019, 2020ஆம் ஆண்டுகளில் கொரோனா தொற்றுப் பேரிடரால் நேரடி வகுப்புகள் நடத்தப்படாத தால் போராடிய மாணவர்கள் உட்பட அனைத்து மாண வர்களும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப் படவில்லை.

2021 ஆம் ஆண்டு முன் நின்று போராடிய 11 மாண வர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இம் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியாதபடி தடை உத்த ரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தின் உதவியுடன் 11 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடுத்தனர். மார்ச், 2021இல் நடந்த இவ்வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இத்தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித் தது. மேலும் இம்மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய அனைத்து சான்றிதழ்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக அளிக்க வேண்டும் என உத்தர விட்டது. இந்த உத்தரவையும் குர்மித் சிங் தலைமை யிலான நிர்வாகம் மதித்து நடக்கவில்லை. எனவே மீண்டும் பாதிக்கப்பட்ட 11 மாணவர்களில் நான்கு மாணவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுத்தனர். இவ்வழக்கினை விசாரித்த உயர்நீதி மன்றம், துணைவேந்தர் குர்மித்சிங், அப்போதைய பதி வாளர் அமரேஷ் சமந்தரய்யா இருவர்  மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பதிவு செய்து இவர்கள் இருவரும் டிசம்பர் 2022இல் நேரில் ஆஜராக உத்தர விட்டது. இதற்குப் பிறகு இந்த நான்கு மாணவர்க ளுக்கும் கல்விச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கல்விக் கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. அதற்கான போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.   

ஊழல் களைய; ஒளிபரவ...!

மொத்தத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிலக் கூடிய மாணவர்களுடன் துணைவேந்தருக்கு சுமூகமான உறவு இல்லை. பேராசிரியர்களுக்கு பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லை. பணி மூப்புப் பட்டியல் வெளியிடப்படவில்லை.  பதவி உயர்வு கள் விதிமுறைகளுக்கு முரணாகவே நடைபெற்று வருகின்றன. முழுநேரப் பதவிகள் துணைவேந்தரின் சுயநலத்திற்காக தற்காலிகமாகியுள்ளன. புதிய பணி நியமனங்களிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடை பெற்று வருகின்றன. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்விச் சரிவிற்கான காரணங்கள் இதைவிட வேறு என்ன    வேண்டும்? புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இத்தகைய சீரழிவுக்கு காரணம் துணைவேந்தர் பேரா. குர்மித் சிங்கே! எனவே நீட்டிப்பில் இருக்கக்கூடிய அவர்  துணைவேந்தர்    பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். அவருடைய காலத்தில் நடை பெற்ற அத்தனை நிர்வாகக் குளறுபடிகள், பணி  நியமன ஊழல் விவகாரங்கள் குறித்து  உயர்மட்ட நேரடி விசாரணை அவசியம் வேண்டும். இத்தனை கொடுமைகளுக்குப் பின்பும், புதுச்சேரி பல்கலைக்கழ கத்தில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்களும், அவர்க ளுடைய அமைப்புகளும் மௌனம் காத்து, வாய்மூடி மவுனிகளாக இருப்பது எந்த விதத்திலும் சரியல்ல.

“எனக்கு மிகவும் வேதனை எது தெரியுமா? கொடூரமானவர்களின் மிருகத்தனமல்ல... நல்லவர்க ளின் மவுனம் தான் மிகவும் வேதனையளிக்கிறது”., என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை பேரா சிரியர்கள் கவனிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் உடனடியாக இந்தக் கல்வி வளாகம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் களம் இறங்க    வேண்டும். இது காலத்தின் தேவை.

கட்டுரையாளர்: மாநில செயற்குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி 


 

;