articles

தூணாய் மக்களுக்கு ஆக்கிடு! - கோவி.பால.முருகு

தீக்கதிர் நாளிதழ் படித்திடு-சமூகத்
     தீமை  அதனால் வென்றிடு!
மக்களின் துன்பம் போக்கிடும்-நல்
    மாற்றம் அதனால் ஆக்கிடும்!

உழைப்போர் உரிமைப் பேசிடும்-வீணில்
      உழைப்புச் சுரண்டலைச் ஏசிடும்!
அழைத்திடும் உரிமைப் போருக்கு-அதால்
     ஆக்கிடும் நன்மை ஊருக்கு!

பெண்கள் உரிமைக் காத்திடும்-துன்பம்
   பெற்றால் பகையைச் சாய்த்திடும்!
கண்களாய்ப் பெண்களைப் போற்றிடும்-கயவர்
     கண்களில் விரல்விட்டு ஆட்டிடும்!

ஆட்சியின் அவலம் கூறிடும்-அதை
        அகற்றிட  வீதியில் போரிடும்!
மீட்சியை மக்களுக் காக்கிடும்-மக்கள்
        மேன்மை  மட்டுமே தூக்கிடும்!

சாதியை மதத்தைச் சாடிடும்-அந்த
        சாக்கடை  புத்தியை மூடிடும்!
 நீதி  நேர்மை  அதனுயிர்-இவை
        நீங்கா இதழே தீக்கதிர்!

தீக்கதிர் தீக்கதிர் தீக்கதிர்-நாட்டின்
       திக்கெலாம்  பரவிடும் அதன்பயிர்!
தூக்கிடு தூக்கிடு தூக்கிடு-தீக்கதிர்
        தூணாய் மக்களுக் காக்கிடு!