articles

தாண்டி நடடா தம்பி! - த.இராமலிங்கம்

போடா தம்பி போடா!
புயலை எதிர்த்துப் போடா!
காடா மேடா சுழலு
கடமைக் கடலுள் நீந்து!

அச்சம் மூக்கை நீட்டும்
அகந்தை முகத்தைக் காட்டும்
நச்சு நாக்கை நீட்டும்
நசுக்கி நடடா தம்பி!

வஞ்சம் வலையை விரிக்கும்
மயக்கம் நிலையைக் குலைக்கும்
நெஞ்சம் பலவும் நினைக்கும்
நெருப்பாய் நடடா தம்பி!

போட்டி வந்தால் புரட்டு!
புன்மைத் தலையை உருட்டு!
ஈட்டி பாய்ந்தால் விரட்டு!
எட்டி நடடா தம்பி!

உலகம் உன்னை நினைக்கும்!
உன்னுள் அதுவும் அடக்கம்!
அளவில் புகழைப் படைக்கும்!
அடியை எடடா தம்பி!

எவரும் ஒன்றாம் உனக்கு
ஏற்றத் தாழ்வைக் கொளுத்து
தவறும் எதிர்த்தால் மிதித்துத்
தாண்டி நடடா தம்பி!