ஒரு அடர்ந்த காட்டிற்குள் அசோக மரமும் ஓக் மரமும் அருகருகே இருந்தன.
இரண்டும் அடிக்கடி பேசிக்கொள்ளும்.நீண்ட காலமாக அருகருகே இருந்ததால் இரண்டும் நட்பாக இருந்தன.
இவை இரண்டுக்கும் கீழே இருந்த புற்களும் செடி கொடிகளும் பெரிதாக வளர முடியவில்லை. அதிகமாக தங்களோடு தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ள முடியவில்லை. ஆங்காங்கே ஒவ்வொன்றாக வளர்ந்து இருந்தன.
நாம் இப்படி வளர முடியாத போனதற்கு யார் காரணம் என்று அவைகளுக்குள் தீவிரமான ஆலோசனை மேற்கொண்டன. அப்பொழுது “இந்த ஓக் மரம்தான் காரணம். ஓக்மரத்தில்தான் அதிகமான இலைகள் இருக்கின்றன. அசோக மரங்கள் நமக்கு ஒன்னும் பெரிய பிரச்சினையை கொடுக்காது” என்று ஒரு சிறிய புல் கூறியது.
“நீ சொல்வது சரிதான் என்று நான் நினைக்கிறேன்” என்று ஒரு செடி கூறியது. இவை இரண்டும் கூறியதை மற்ற அனைத்துப் புற்களும் கொடிகளும் செடிகளும் ஏற்றுக் கொண்டன. சரி என்ன செய்யலாம். எப்படி இந்த ஓக் மரத்தை இங்கிருந்து அகற்றுவது? நாமோ சிறியவர்கள்” என்று கேட்டது ஒரு பெரிய புல்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறு மைனா ஒன்று “இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? இருவருக்குள் சண்டை மூட்டி விடுங்கள். தானாகப் பிரிந்து விடுவார்கள்” என்றது. “பிரிப்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் வளர வேண்டும்” என்று கூறின புற்கள். மற்ற செடி கொடிகளும் ஆமோதித்தன.
“சத்தம் இல்லாமல் பேசுங்கள். இந்த மரங்களின் வேர்களுக்கும் கிளைகளுக்கும் கூட காதுகள் இருக்கின்றன” என்றது மைனா.
“வேறு ஏதாவது யோசனை தாருங்கள்” என்று மைனாவிடம் செடிகளும் கொடிகளும் புற்களும் கேட்டன.
“சண்டை மூட்டி விடுங்கள். இவை இரண்டில் வலிமை பொருந்தியது அசோக மரம். அசோக மரத்திடம் சென்று ஓக் மரத்தைப் பற்றி பெருமையாகக் கூற வேண்டும்” என்றது மைனா.
புற்களும் செடி கொடிகளும் அசோக மரத்திடம் பேச முயற்சி செய்தன. ஆனால் அதனுடைய உயரத்திற்கு இவர்களால் பேச முடியவில்லை. மீண்டும் மைனாவிடமே உதவி கேட்டன. மைனா அசோக மரத்திடம் தொடர்ந்து ஓக் மரத்தை பற்றிப் பெருமையாகக் கூறிக் கொண்டே இருந்தது. ஆனால் அசோக மரம் காதில் வாங்கவில்ல.
நாட்கள் நகர்ந்தன. மீண்டும் மைனா அசோக மரத்திடம் ஓக் மரத்தை புகழ்ந்து கொண்டே இருந்தது. இதைக் கேட்டுக் கேட்டு உள்ளுக்குள் கோபமாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தது அசோக மரம். மீண்டும் புற்களும் செடி கொடிகளும் கூட்டம் கூட்டிப் பேசின. இந்த முறை மாற்றி யோசிக்கலாம் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைக் கூறின. முடிவில் ஒரு புல் கூறியதை அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
அடுத்த நாள் முதல் புற்களும் செடி கொடிகளும் தொடர்ந்து ஓக் மரத்தை நீ தான் சிறந்தவன். நீ தான் வலிமையானவன். உன்னால்தான் அசோக மரமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீ இல்லை என்றால் அசோகமரம் வாழ முடியாது என்று தொடர்ந்து புகழ்ந்து கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் ஓக் மரம் அசோக மரத்தை விட தானே சிறந்தவன் என்று எண்ணத் தொடங்கியது.
ஓக் மரம் அசோக மரத்து இடம் தன்னைப் பற்றிய பெருமைகளை பேச ஆரம்பித்தது ஏற்கனவே கோபத்தில் இருந்த அசோக மரம் ஓக் மரத்தை அடிக்கடி தாக்க ஆரம்பித்தது. ஒரு நாள் இரண்டின் சண்டையும் அதிகமாகி அசோக மரம் வேகமாக ஓக் மரத்தை தாக்கியதில் ஓக் மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.
“உன்னால்தான் நான் இருக்கிறேனா. யாரோ முட்டாள்கள் கூறியதை கேட்டுக்கொண்டு என்னிடம், என்னால்தான் நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டாய். இப்பொழுது என்ன ஆயிற்று? வீணாக உயிரை இழந்து விட்டாய்” என்று கூறி இறந்து கிடந்த ஓக் மரத்தைப் பார்த்து காடே அதிரும்படி சிரித்தது அசோக மரம்.
ஓக் மரத்தின் இறப்பிற்கு பின், அசோக மரத்திற்குக் கீழே ஏராளமான செடி கொடிகள் புற்கள் வளர ஆரம்பித்தன. இப்படி வளர்ந்தவைகள் ஏராளமான தண்ணீரை உறிஞ்சிக் கொண்டன. ஊசியிலை மரத்துக்கு தண்ணீர் போதாத நிலை ஏற்பட்டது.
அப்பொழுதுதான் தன் தோழி ஓக் மரத்தின் நினைவு வந்தது. நான் தான் பலசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளுடைய நிழல் கீழே விழுந்ததால் கீழே புற்கள் செடி கொடிகள் வளராமல் இருந்தன. அதனால் எனக்கு தண்ணீர் கிடைத்தது. அவள்தான் என்னைக் காத்துக் கொண்டிருந்தாள் என்பது இப்பொழுது தெரிகிறது என்று நினைத்து வருந்தியது.
நாட்கள் நகர்ந்தன. அசோக மரத்தின் ஈரப்பசை குறைய ஆரம்பித்தவுடன் அதுவரை மரப் பட்டைகளில் நுழையப் பயந்த பூச்சிகள் மரத்தை அரிக்க ஆரம்பித்தன. மரப்பட்டைகளை கொத்தப் பயந்த பறவைகளும் கொத்த ஆரம்பித்தன.
அசோக மரத்திற்கு தன் தவறு புரிந்தது. எவ்வளவுதான் பேசியிருந்தாலும் அவளைக் கொன்றிருக்கக் கூடாது என்று தோழியை நினைத்துக் கண்ணீர் சிந்தியது.