articles

img

அடக்குமுறைகளை எதிர்கொண்டு கட்சியை வளர்த்த தோழர் பி.எஸ்.மகாலிங்கம் - ஜி.ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் திற்கு அடுத்ததாக விவசாயத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வா தாரத்திற்காகவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் வலுவான இயக்கம் நடந்த பகுதி ஒன்றுபட்ட சிதம்பரம் வட்டமாகும்.காவிரி டெல்டா வின் ஒரு பகுதியான சிதம்பரம் வட்டம் தற்போது  சிதம்பரம்,  காட்டுமன்னார்குடி, புவனகிரி, திருமுட்டம் ஆகிய நான்கு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியைச் சார்ந்த பல தோழர்கள் களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் தொடரில்  இடம் பெற்றுள்ளனர். இக்கட்டுரையில் நாம் சந்திப்பது தோழர் பி.எஸ்.மகாலிங்கம். இவர் காட்டுமன்னார்குடி வட்டம் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் பட்டியலின சமூ கத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் 1940ல்  பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது தந்தை இறந்து விட்டார்.

மகா லிங்கத்தின் படிப்பு 7 ஆம் வகுப்போடு நின்றுவிட்டது. குடும்பத்தை பாதுகாக்க விவசாய வேலையில்  ஈடுபடநேரிட்டது. இளம் வயதில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங் களுக்குச் சென்று தலைவர்களின் பேச்சைக் கேட்கும் பழக்கம் இவருக்கு இருந்தது. இதனால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. 1959ல் உள்ளாட்சித் தேர்தலில் பிள்ளையார் தாங்கல் கிராமத்தில் இரண்டு வார்டுகளில் போட்டியிட வேண்டுமென்று பி.எஸ்.மகாலிங்கம். கருதினார். ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகர்களாக இருந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் கோபாலகிருஷ்ணன், கோதண்டராமன் ஆகியோரின் ஆதரவுடன் போட்டியிட்டு இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றார். (ஒன்றுபட்ட சிதம்பரம் வட்டத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் இணைந்து போராடியதால் தான் சாதிக்கொடுமையை ஓரளவுக்கு ஒழிக்க முடிந்தது, விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளையும் வென்றெடுக்க முடிந்தது) தோழர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் மகன் ராமமூர்த்தி கட்சியில் உள்ளார்.

தோழர்கள் கோபாலகிருஷ்ணன், கோதண்டராமன் ஆகிய இருவரும் தோழர் பி.எஸ்.மகாலிங்கத்திடம் கம்யூ னிஸ்ட் கட்சி பற்றி கலந்துரையாடியது அவருக்கு கம்யூ னிஸ்ட் கட்சியின்பால் ஈர்ப்பு ஏற்படக் காரணமானது.  “ஒரு கொள்கை ஒருவரின் சிந்தனையை கவ்விப் பிடித்தால் அது உந்து சக்தியாக மாறும்” என்ற கூற்றுக்  கிணங்க பி.எஸ்.மகாலிங்கம் கட்சிப் பணியாற்ற களமிறங்கி விட்டார். பிள்ளையார்தாங்கலில் விவசாய சங்க கொடியை ஏற்றினார். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருந்த எல்.இளையபெருமாள், மகா லிங்கத்தை காட்டுமன்னார்குடிக்கு அழைத்து விவசாய  சங்க கொடியை இறக்க வேண்டும், இல்லையென்றால் ரூபாய் 2000 அபராதம் கட்ட வேண்டுமென்று மிரட்டி யிருக்கிறார். மேலும், மகாலிங்கம் குடும்பத்தினருக்கு அவ்வூரில் உள்ள டீக்கடையில் டீ வழங்கக் கூடாது, கடை களில் மளிகை சாமான்கள் வழங்கக் கூடாது எனவும் காங்கிரஸில் இருந்த பிரமுகர்கள் கட்டுப்பாடு விதித்த னர். அபராதம் கட்ட வழியின்றி கொடியை இவர் இறக்கி விட்டார். இச்சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்த மகாலிங்கத்தை தோழர்கள் கோபாலகிருஷ்ணன், கோதண்டராமன் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் மிரட்ட லுக்கு அஞ்சி கொள்கையை கைவிடக்கூடாது எனக்கூறி னர். இறக்கிய கொடியை மீண்டும் ஏற்றினார். இதன் பிறகு, தோழர் பி.எஸ்.மகாலிங்கம் மேற்கண்ட தோழர் களின் உதவியோடு பல கிராமங்களுக்கு சென்று கம்யூ னிஸ்ட் கட்சியின் கொள்கையை விளக்கி பல கிளை களை உருவாக்கினார்.  கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அவர் கட்சி மற்றும் விவசாய சங்கம் நடத்தக் கூடிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

கேரளத்தில் இ.எம்.எஸ் தலைமையிலான மாநில அரசு அமலாக்கி வரும் நில உச்சவரம்பு சட்டத்தைப் போல்  தமிழகத்திலும் காங்கிரஸ் அரசு சட்டம் இயற்ற வேண்டு மென வலியுறுத்தி 1961 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் விவசாய சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில் சுமார் 800 பேர் மறியலில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் தோழர்கள் ஜி.கலியபெருமாள், டி.ராஜாராம், பொன்னந்திட்டு சீனிவாசன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டதாக குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு 6 மாதத்திற்கு பிறகு விடுதலை செய்யப் பட்டனர். 1962 ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் சிதம்பரம் வட்ட மாநாட்டில் வட்டக்குழு உறுப்பின ராக தோழர் பி.எஸ். மகாலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். அம்மாநாட்டில் தோழர் டி.ஆர்.விஸ்வநாதன் வட்டக்குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது தோழர் பி.எஸ்.மகாலிங்கம். அதில்  இணைந்தார். மேலும், காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ள கட்சி தோழர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.

1970 ஆம் ஆண்டு இடையார் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாலிங்கம் போட்டியிட்டார். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்த தோழர் கே.பாலகிருஷ்ணன் (இன்றைய மாநில செயலாளர்) தனக்காக கிராமத்தில் பிரச்சாரம் செய்த தாக நெகிழ்வோடு குறிப்பிடுகிறார். பிள்ளையார்தாங்கல் உள்ளிட்ட இடையார் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை வெற்றி பெற்று பணியாற்றியிருக்கிறார். அக்காலத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல நலத்திட்டங்களை அமலாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சிதம்பரம் நாடாளு மன்ற தொகுதியிலும், காட்டுமன்னார்குடி சட்டமன்றத் தொகுதியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். 1969 ஆம் ஆண்டு சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்குடி பகுதிகளில் விவசாய தொழிலாளிகளுக்கான கூலி உயர்வு  போராட்டம் நடைபெற்றது. மிராசுதார்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து விவசாய தொழிலாளர்களை கொண்டு வந்து அறுவடையில் ஈடுபடுத்தி போராட்ட த்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். வெளியாட்களை வராமல் தடுத்தபோது குறிப்பாக இடையார், பிள்ளையார்தாங்கல் கிராமங்களில் அடிதடி தகராறும், கலவரமும் ஏற்பட்டது.

போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு காவல்துறை யினர் தோழர் பி.எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டு 16 பேர் மீது, அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்ளையடித்த தாக பொய் வழக்கு போட்டனர். தோழர் மகாலிங்கம் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தோழர் மகாலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தண்டனை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் அனைவரும் விடுதலை யானார்கள். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உரு வானபோது சில ஆண்டுகள் சிதம்பரம் வட்ட செயலாள ராகவும், 10 ஆண்டுகள் காட்டுமன்னார்குடி வட்டச்  செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி யிருக்கிறார். 1978 ஆம் ஆண்டு கட்சியின் மாவட்டக்குழு விற்கு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை  மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் தோழர் பி.எஸ்.மகாலிங்கம் செயல்பட்டிருக்கிறார். தற்போது, 83 வயதாகும் தோழர் பி.எஸ்.மகாலிங்கம்  அவர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப் பணி யாற்றி வருகிறார். இவருடைய துணைவியாரும், பிள்ளை களும் கட்சி ஆதரவாளர்கள். பொய் வழக்கு, சிறை, காவல்துறையின் தாக்குதல் போன்ற அடக்குமுறைகளை உறுதியாக எதிர்த்து போராடியவர். காட்டுமன்னார்குடி பகுதிகளில் இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கிளைகளும், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர்கள் சங்க அமைப்புகளும் துடிப்போடு செயல்படு வதற்கு கடந்த காலத்தில் தோழர் பி.எஸ்.மகாலிங்கம் ஆற்றிய பணியும் அடிப்படையாக உள்ளது. தற்போது, கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு கிராமத்திலும், வட்ட  அளவிலும் கட்சி பணியாற்றி வருகிறார். தோழர் பி.எஸ்.மகாலிங்கம் ஆற்றி வரக்கூடிய இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

தோழர் டி.ஆர்.விஸ்வநாதன்

டி.ஆர்.விஸ்வநாதன் அவர்கள் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் குறிப்பாக சிதம்பரம் டெல்டா இயக்க வரலாற்றில் மறக்கமுடியாத பெயர்.  கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து பிழைப்பிற்காக சிதம்பரத்திற்கு வந்தவர். பாலக்காட்டில் ஒரு பிராமண குடும்பத்தை சார்ந்த இவர் உழைக்கும் வர்க்க, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக உயர்ந்தவர். ஓட்டலில் வேலை செய்த அவர் கம்யூனிஸ்டாக மாறினார். ஒன்றுபட்ட சிதம்பரம் வட்டத்தில் பல கிராமங்களுக்கு நடந்தே சென்று விவசாயிகள் இயக்கத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கியவர். 1953 ஆம் ஆண்டு  குமராட்சி பகுதியில் விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு மாநாடு    நடைபெற்றது. இம்மாநாட்டில் பி.சீனிவாசராவ், பி. இராமமூர்த்தி, மணலி கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதில் டி.ஆர்.விஸ்வநாதன், டி.ராஜாராமன், ஜி.கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை நடத்தியதில் தோழர் டி.ஆர்.விஸ்வநாதன் முக்கியப் பங்காற்றினார். விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது.

ஏற்கனவே, கீழத்தஞ்சையில் கொண்டு வரப்பட்ட பண்ணையாள்  பாதுகாப்பு சட்டத்தை சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளுக்கும் அமலாக்கிட வேண்டுமென்று ஒடுக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டத்தை நடத்தியவர் தோழர் டி.ஆர்.வி., நீண்ட போராட்டத்திற்கு பிறகு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றுபட்ட சிதம்பரம் வட்டத்தில் அமலாக்கப்பட்டது. கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது  96 பேர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் எஸ்.நடராஜன், டி.ஆர்.விஸ்வநாதன் போன்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.  இத்தகைய போராட்டத்திற்கு பிறகு மாநில அரசு காட்டுமன்னார் கோவில் சிதம்பரம் பகுதிகளுக்கும் கீழத்தஞ்சையில் கொண்டு வரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்க உத்தரவிட்டது.

நிலச்சுவான்தார்களை எதிர்த்து  கூலி உயர்வுக்காகவும், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பிற்காகவும் மட்டுமல்ல, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் வலுவான போராட்டம் நடைபெற்றது. இப்பின்னணியில் ஒன்றுபட்ட சிதம்பரம் வட்டத்தில் பரவலாக விவசாயிகள் சங்கம் உருவானது கம்யூனிஸ்ட் கட்சி வலுவான அமைப்பாக வளர்ந்தது. தோழர் டி.ஆர்.விஸ்வநாதன் தனது பிள்ளைகள் அனைவருக்கும் சீர்திருத்த முறையிலும், சாதி மறுப்பு திருமணமும்  (பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்த) செய்து வைத்தார்.
 

 

 

;