articles

img

கார்ப்பரேட் முதலாளிகளின் சதியில் உருவானதுதான் புதிய பென்சன் திட்டம்; இதற்கு துணை போகிறார் மோடி

திருப்பரங்குன்றம், மார்ச் 26- புதிய பென்சன் திட்டம் கார்ப்பரேட் முதலாளி களின் சதியின் ஒரு பகுதிதான். அந்தச் சதிக்கு துணைபோகிறார் பிரதமர் மோடி என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் குற்றம்சாட்டினார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் கல்லூரியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர் அலுவலர் நலச் சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு (மார்ச் 26) ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் பேசியதாவது. 2003-ஆம் ஆண்டுக்கு முன்னர் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு எப்படி பென்சன் கொடுப்பது என தெரியாமல் தவிக்கும் ஒன்றிய அரசு, அவர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாகும்  வரை வேலை பார்க்க வேண்டும்; அப்படியே மரணித்து விட வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது.  பழைய பென்சனுக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் எதிர்காலத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு பென்சன் கிடையாது. நியாயமான சம்பளம் கிடைக்காது, பஞ்சப்படி என்பது கற்பனை செய்து கூட பார்க்க முடி யாது. இதுதான் கார்ப்பரேட்டுகள், பெரும் முதலாளிகளின் நோக்கம்.  தமிழக அரசு நிரந்தரத்தன்மையுள்ள பணி யிடங்களில் நிரந்தரமாக  ஊழியர்களை நிய மிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டுள் ளது. 480 நாட்கள்  பணியாற்றினாலே ஒருவர் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால் அந்த சட்டத்தை எதிர்த்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவுட்சோர் சிங், தற்காலிக பணியாளர்கள், தினக்கூலிகள் என்ற மூன்று தன்மைகளின் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திவிட்டன. தமிழக அரசும் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டம் என்ற பெயரில் ஒன்றிய அரசு  திரட்டும் மூலதனம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்யப்படு கிறது. மக்களிடம் திரட்டும் நிதி மூலதனத்தை எந்தெந்த வழிகளில் செலவழிக்க வேண்டும். அந்த மூலதனம் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விதிகளை எல்லாம் மீறி  பங்குச்சந்தைக்கும் மடைமாற்றம் செய்யப்படு கிறது. புதிய பென்சன் திட்டம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் சதியின் ஒரு பகுதிதான்.  அந்தச் சதிக்கு துணைபோகிறார் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் பேசினார். மேலும் அவர் கூறுகையில், “அனைத்துத் துறை ஓய்வூதியர்களும் ஒரே குடையின் கீழ் அணிதிரள வேண்டும். அணி திரட்டப்பட வேண்டும். அதற்கு சிஐடியு முயற்சி எடுக்க வேண்டும் என்பது பரிசீலிக்கப்படும். பணி யில் உள்ள தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஓரணியில் திரட்டியிருப்பது, எதிர்காலத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் களும் ஒரே குடையின் கீழ் திரட்டப்படுவார்கள். திரள வேண்டும் அப்போதுதான் புதிய பென்சன் திட்டம் என்ற முதலாளித்துவ சதியை நாம் முறியடிக்க முடியும்” என்றும் தெரிவித்தார். 

ஏப்.19 இல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா  

முன்னதாக, 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கோ.முரளீ தரன் தலைமையேற்றார்.  தேசியக் கொடியை முன்னாள் மாநிலப் பொருளாளர் முத்தையா ஏற்றினார். சங்கக் கொடியை மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் மா.ச.முனுசாமி ஏற்றி னார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வரவேற் றார். அஞ்சலித் தீர்மானத்தை மூட்டா ஜி.சி.மனோ கரன் வாசித்தார். மாநாட்டை அகில இந்திய இன்சூரன்ஷ் ஊழியர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் எம்.கிரிஜா துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், “புதிய’ என்றால் ‘மேம் பட்டது’ எனப் பொருள்.  இப்போது ‘புதிய’  என்ற சொல் ‘உரிமைகளையும் பலன்களையும்’ பறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஓய்வூதியம் என்பதை ஏட்டளவிலேயே நிறுத்தி விட முயற்சிகள் நடைபெறுகிறது.

போராடி னால் தான் நாம் வெற்றி பெற முடியும்”என்றார். அனைத்துத்துறை ஓய்வூதியர் மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன்  மாநாட்டு மலரை வெளியிட்டார். மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில துணைப்பொதுச் செயலாளர் வீ. பிச்சைராஜன் மலரை பெற்றுக் கொண்டார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ்நாடு பிரிவு செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின்  பொதுச் செயலாளர் எஸ். பிரபாகரன், லீலாவதி ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநாட்டில், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை ஒன்றிய அரசு  மீண்டும் வழங்க  வேண்டும். காசில்லா மருத்துவம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.   70 வயது முடிந்த ஓய்வூதி யர்களுக்கு  பத்து சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி தர்ணா நடத்துவது என்று மாநாடு தீர்மானித்துள்ளது.

;