articles

img

திருநர் சமூகம் சந்திக்கும் சவால்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர புறவழிச்சாலையில் ஒரு திருநங்கை கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த சம்பவத்தில்  தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படு வார்கள் என எதிர்பார்த்தால் நடந்தது வேறாக இருந்தது. சிதம்பரத்தை சுற்றி உள்ள திருநங்கைகள் காவல்துறையால் வேட்டையாடப்பட்டனர். பார்க்கும் இடத்திலெல்லாம் காவல்துறையால் தக்கப்பட்டனர்.  பேருந்தில் ஏறினால் அடி, பேருந்து நிலையத்தில் வழக்கம் போல கடைகளில் காசு கேட்டு கை நீட்டினால் அடி, அவர்களை ஆட்டோவில் ஏற்றிய காரணத்தினால் ஒரு ஆட்டோ ஓட்டுனர் அடித்து நொறுக்கப்பட்டார். இந்த சூழலில் திருநங்கை தோழர்கள் நமது கட்சியை அணுகினர். உடனடியாக சிதம்பரம் கட்சி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட திரு நங்கைகள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 30 பேரில் 26 பேர் பிஎச்டி, எம்பில், எம்எஸ்சி, பிஏ சித்தா டாக்டர் என பட்டங்களை வாங்கி குவித்து இருந்தனர். அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சி யாகவும் இருந்தது. ஒரு ஆண் குற்றம் செய்தால் ஒட்டுமொத்த ஆண்களும் குற்றவாளிகளாக பார்க்கப்படுவ தில்லை, ஒரு பெண் குற்றம் செய்தால் ஒட்டுமொத்த  பெண்களும் குற்றவாளிகளாக பார்க்கப்படுவ தில்லை, ஆனால் ஒரு திருநங்கை தவறு செய்தால் ஒட்டுமொத்த திருநங்கைகளும் குற்றவாளிகளாக பார்க்கப்படுவது என்ன நியாயம் என்று காவல்துறை யிடம் நாம் பேசிய பிறகு அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டது. 

கலந்துரையாடல்

அதற்கு அடுத்ததாக கடலூரில் நடந்த மாதர் சங்க மாநில மாநாட்டினையொட்டி திருநங்கைக ளுக்கான விவாத அரங்கம் மிகவும் உணர்ச்சிகர மாக இருந்தது. காவல்துறையால் வேட்டையாடப்படு வதும், பொதுவெளியில் புறக்கணிக்கப்படுவதும், ஆணாய் இருந்தபோது முனைவர் பட்டப் படிப்பிற்கு பதிவு செய்து, திருநங்கையாய் மாறிய காரணத்தால் பட்டம் பெற முடியாமல் போனது, எல்.ஐ.சியில் பாலிசி எடுக்கமுடியாமல் தவிப்பது என தங்கள் வாழ்வின் வலிகளை திருநங்கையர்கள் சொன்னபோது வந்திருந்த அனைவரும் கலங்கி நின்றனர்.     ‘‘இயற்கையின் படைப்பினால் நாங்கள் திருநங்கை களாக மாறிப்போனோம். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆனால் எங்கள் வீடுகளில் இருந்து எங்களை விரட்டினார்கள். சமூகம் எங்களை புறக்க ணித்தது. வாழ வழி இருந்தால் நாங்கள் ஏன் தெருவில் பிச்சை எடுக்கிறோம்?’’ என்று கலங்கினர்.

அடுத்த கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள திருநர்கள் பிரச்சனைகளை புரிந்துகொள்ள கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விழுப்புரத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருநர்கள் வந்திருந்தனர். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கள் உ.வாசுகி மற்றும் பி.சம்பத் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.   ‘‘நமது பிரச்சனைகளை மட்டும் தனித்துப் பேசமுடி யாது. ஏனெனில் நாம்வாழும் சமூக சூழலுக்கு உட்பட்டே நமது பிரச்சனைகள் அமைந்துள்ளன. இந்திய சமூகச்சூழல் ஒரே மாதிரியாக இல்லை. ஏழை பணக்காரர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு, அனைவரை யும் பாதிக்கிற மனிதஉரிமைப் பிரச்சனைகள், வாழ்வா தாரப் பிரச்சனைகள் என அனைத்துமே நம் வாழ்க்கையை பாதிக்கின்றன. எனவே திருநர் சமூகப்  பிரச்சனைகளை இன்றைய அரசியல், சமூக, பொரு ளாதார, பண்பாட்டுச் சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது’’ என்று தோழர் வாசுகி குறிப்பிட்டது மிக முக்கியமானதாகும். 

அடையாளப்படுத்திய உச்சநீதிமன்றம்

உண்மையில், மனித குலம் உருவான போதே  திருநர்களும் உருவானார்கள். இந்திய இதிகாசங்க ளில் அவர்கள் பங்கேற்பு இருந்தாலும், இந்தியாவில் திருநர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அங்கீகாரம் கிடைத்தது. ஒருவரது பாலின ஈர்ப்பு  என்பது அவரின் தனித்துவத்தனமான குணநலன், கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் பிரிக்கவியலாத அங்கமாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (எதிர்) இந்திய அரசு –வழக்கினில் திருநர்களை மூன்றாம் பாலினத்த வர்களாக உச்சநீதிமன்றம் அடையாளப்படுத்தியது. ஆனால், மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு மான போராட்டத்தை இன்னும் நடத்துகின்றனர். அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஏச்சுக்களையும், அவதூறுகளையும், துன்புறுத்தல்க ளையும் சந்திக்கின்றனர். இச்சமூகம் அவர்களை சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறது. பண்பாட்டு ரீதியாக திருநர்கள் பொது நீரோட்டத்திலிருந்து விலக் கப்பட்டுள்ளனர். வாடகைக்கு வீடு, வேலைவாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன. பாலியல் கொடுமைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களில் பாகுபாடும், துன்புறுத்தலும் இருப்பதால் பாதி யிலேயே படிப்பை விடவேண்டியுள்ளது. மருத்துவ உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. பால் மாற்று அறுவை சிகிச்சை கிடைப்பதில் அரசு மருத்துவ மனையில் நீண்ட காலதாமதம் ஆகிறது. தனியார் மருத்துவமனை என்றால் நிறைய பணச்செலவு ஆகிறது. ரேஷன்கார்டு, ஊரகவேலை உறுதித்திட்ட வேலை அட்டை கிடைப்பதில் சிரமம் உள்ளது. 

செய்ய வேண்டியவை

திருநர் அடையாள அட்டை கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சனை நிலவுகிறது. நிர்ப்பந்தத்தின் காரணமாக பிச்சை எடுப்பது, பாலியல் வணிகத்தில் தள்ளப்படு வது போன்றவை நடக்கின்றன. திருமணம், விவா கரத்து, தத்து எடுப்பது, சொத்தில் பங்கு போன்ற சிவில் உரிமைகள் சட்டரீதியாகக் கிடைப்பதில் சிர மங்கள் உள்ளன. பெற்றோரும், உறவினர்களும், நண்பர் களும் கைவிட்டுவிடும் நிலையில் ஆதரவு ஏற்பாடும்,  உளவியல் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. குடும்பம் திருநங்கைகளை வைத்து பராமரிக்கும் படி சட்டத்தை உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநர் சமூகத்திற்கான இடப் பங்கீடை மாநில அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். ரயில்வே, பேருந்துநிலையம், பொது கழிப்பறை என எல்லா “Q” அட்டவணைகளிலும் ஆண், பெண், திருநர்கள் என வரிசைப்படுத்திட வேண்டும். அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் பால்மாற்று அறுவை  சிகிச்சையைக் கொண்டுவருதல். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநர்க ளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் துவக்க வேண்டும். கல்வி இடை நின்ற திருநங்கைகளுக்கு மேலும் கல்வியை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும். பிறப்பால் சூட்டப்பட்ட பெயரை சான்றிதழ்கள் மற்றும் அரசு ஆவணங்களில் மாற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள். கல்வியில் பின்தங்கிய மற்றும் வயது மூத்த திருநங்கையருக்கு சிறுதொழில் தொடங்குவ தற்கான கடன் உதவி கிடைக்கவும் வகை செய்ய  வேண்டும். இவையெல்லாம் அரசாங்கம்செய்யவேண்டிய வையாகும். ஆனால் அரசுகள் என்ன செய்கின்றன?

கேரள மாநிலம்தான் முதன்முதலில் திருநர் சமூகத்துக்கென தனிக் கொள்கையை உருவாக்கியது. பின்னர் ஆந்திரா, தெலுங்கானாவிலும் தனிக் கொள்கை உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு  2008லேயே தனி நலவாரியத்தை உருவாக்கியது. தனிக் கொள்கை வகுப்பதாகத் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். கர்நாடகம் மற்றும் பீகாரில் இட ஒதுக்கீடு 1 சதவிகிதம் உண்டு. 2014 துவங்கி 2019-29 வரை பலமாற்றங்களும், திருத்தங்களும் செய்யப் பட்டு 2019 திருநர் உரிமைகள் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆயினும், திருத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளதாக செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்)  மாநிலக்குழு உறுப்பினர்

 

;