இந்த மாதம் முழுவதும் தமிழ் நாட்டு செய்தித் தாள்களில் பரவலாக - ஜமாபந்தி - வருவாய்த் தீர்ப்பா யம் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தச் செய்திகள் ‘பசலி’ஆண்டு என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. பசலி என்றால் என்ன? பசலி எனும் சொல் உருது, அரபி வார்த்தையாகும். ஆங்கிலத்தில் Harvest தமிழில் அறுவடை. அப்படி எனில் பசலி(Fasli) ஆண்டு என்பது அறுவடை ஆண்டாகும். உண்மையில் இது வேளாண்மை ஆண்டு என்றே பொருள்படும். பசலி ஆண்டு 12 மாதங்கள் கொண்டது தான். ஆங்கில மாதக் கணக்குப்படி பார்த்தால் ஜூலை முதல் ஜூன் வரையிலா னது. அதனால்தான் இந்த வேளாண்மை ஆண்டின் நிறைவுக் காலத்துக்கு முன்பாக வேளாண் வருவாய் தொடர்பான பிரச் சனைகள், சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்து வதற்காக முந்தைய ஆட்சியாளர்களால் ஜமாபந்தி-வருவாய்த் தீர்ப்பாயம் ஏற் படுத்தப்பட்டுள்ளது. வருவாய் ஆண்டு அல்லது நிலவரி ஆண்டு என குறிப்பிட வேண்டுமென தமிழக அரசு கூறியுள்ளது. பிரிட்டிஷார்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, பட்ஜெட் (வரவு - செலவு திட்டம்) சமர்ப்பிக்கப்பட்டு நிறை வேற்றப்படும் பழக்கம் வந்துள்ளதல் லவா? இது நிதி ஆண்டு என்றழைக்கப் படுகிறது. இந்த நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை 12 மாதங்களை கொண்டதாக உள்ளது தானே.
இந்த நிதியாண்டு நடைமுறை முதலா ளித்துவ ஜனநாயக அமைப்புகளான சட்ட மன்ற, நாடாளுமன்றங்கள் ஏற்பட்ட பின்னர் வழக்கத்துக்கு வந்தது. அப்படி எனில் இந்த பசலி ஆண்டு - வேளாண் ஆண்டு - அறுவடை ஆண்டு எப்போது நடைமுறைக்கு வந்திருக்கும்? இது உலகம் முழுவதும் உள்ளதா? இந்தியா வில் மட்டும் உள்ளதா? தமிழகத்துக்கு எப்படி வந்தது? அறுவடைக் காலம் வருவதற்கு முன் உழவடைக் காலம், சாகுபடிக் காலம் இருக்குமல்லவா? ஆடிப்பட்டம் தேடி விதை என்பதும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதும் தமிழ்நாட்டின் முது மொழிகள் அல்லவா? ஆடி மாதம் விதைக்க வேண்டும் என்றால் முன் கூட்டியே அதாவது வைகாசி, ஆனி மாதங்களில் நன்செய் நிலமோ, புன்செய் நிலமோ உழவு செய்து விதை விதைப்பதற்கு - நாற்று நடவு செய்வதற்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்து நீர்பாய்ச்சி, உரமிட்டு, களைபறித்து, விளைய வைத் தால்தான் அறுவடைக்கு பயிர் தயா ராகும்.
முந்தைய காலங்களில் மானாவாரி (புன்செய் - புஞ்சை) விவசாயமும், பாசன ஏற்பட்டுள்ள நன்செய் (நஞ்சை) விவசாய மும் மழை, ஏரி, குளங்கள், கண்மாய் கள், ஆறுகள், கால்வாய்களின் இருப்பைப் பொறுத்தே அமைந்திடும். அதற்கு ஏற்ப ஒரு முறையோ (ஒரு போகம்), இரு முறையோ (இருபோகம்), மும்முறையோ (முப்போகம்) விவசாயம் நடைபெறும். அந்தக் காலத்தின் பயிரினங்களின் விளைச்சல் கால அளவுகள் நீண்டதாக நான்கு மாதம், ஐந்து மாதம், ஆறு மாதம் கொண்டதாக இருந்தது. எப்படியாயினும் சித்திரை மாத கோடைக் காலத்தில் கொஞ்சம் ஓய்வு காலமாகவே விவசாயிகளுக்கு அமை யும். எனவே அந்தக் காலத்தில் வேளாண் பொருளாதாரத்தின் ஆதாரமான விவசாயி களின் நிலம் மற்றும் இதர பிரச்சனைகள் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது முந்தைய ஆட்சிக் காலங்களில். அப்படி என்றால் பிரிட்டிஷாருக்கு முன்னால் இருந்த ஆட்சி யாளர்கள் தான் இத்தகைய நடை முறையை கொண்டு வந்திருக்க முடியும். அது நிலப்பிரபுத்துவ - மன்னராட்சி கால நடைமுறையாகவே அறிமுகப்படுத் தப்பட்டிருக்கும். அப்படி எனில் இது யார் ஆட்சிக் காலத்தில் நடந்திருக்கும்? இந்தியா தான் ஜனநாயகத்தின் தொட்டில் என்று இன்றைய மோடி வகை யறாக்கள்- ஆர்எஸ்எஸ், பாஜக - பரி வாரங்கள் கூறுகின்றனவே, அப்படி ஏதாவது ஒரு முந்தைய பொற்கால ஆட்சிகளில் கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஏதும் இல்லை. பின் எப்போது இந்த முறை (பசலி ஆண்டு) நடைமுறைக்கு வந்தது? யாரால் கொண்டுவரப்பட்டது? வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் - இப்போது தான் எல்லாம் கூகுளிலும், விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது என்கிறார்களே, அதன் வழி யாகப் பார்த்தால் விஷயம் தெரிய வரு கிறது.
முகலாய ஆட்சிக் காலத்தில் - மகா அக்பர் காலத்தில் 1556இல் இந்த பசலி ஆண்டு முறை அறிமுகமாகியிருக்கிறது. அந்த காலத்தின் இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் 963 AH வருடம். அதுவே இந்து - சம்வாத் ஆண்டுக் கணக்கில் 1612 SE வருடம். பசலி என்கிற அரபு வார்த்தைக்கு பிரிவு அல்லது பருவம் என்றும் பொருள். அது இந்தியாவில் பருவ காலத் தொகுப்பை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக் கிறது அவர்கள் வழியில். இதில் குறுவை, சம்பா எனும் இரண்டு பருவங்கள் உள்ளன. இந்த பசலி ஆண்டுக் கணக்கு அந்தக் காலத்தில் பெரும்பாலும் வட இந்தியப் பகுதிகளில் தான் நடை முறையில் இருந்திருக்கிறது. அப்படி என்றால் தென்னிந்தியப் பகுதிக்கு எப்போது வந்தது? அக்பரின் பேரன் ஷா ஜஹான்தான் இங்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார் 1630(கிபி)இல். அது எப்படி? ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலிகான் மூலமாக அப்படித் தான் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதி களுக்கு வந்து சேர்ந்தது. நிஜாமின் நிர்வாக நடைமுறை நில வருவாய் மற்றும் நீதித் துறையோடு இணைந்துவிட்டது. அதுதான் தமிழ்நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. அறுவடையை ஆதாரமாகக் கொண்ட இந்த காலண்டர் முறை தெற்காசியா முழு வதும் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஆயினும் தற்போது தக்காணப் பகுதி அதாவது தென்னிந்தியப் பகுதியில் உள்ளது.
சரி, இந்த பசலி ஆண்டுக்கும் தற் போதைய ஆங்கில ஆண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை எப்படிக் கணக் கிடுவது அல்லது புரிந்து கொள்வது? பசலி காலண்டர் துவங்குவது 963 ஹிஜ்ரா (AH) வருடம். இது இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில் உள்ளது. ஏனெனில் அது நிலவு சுழற்சியை (உதிப்பது தேய்வதை) அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மற்றவை சூரியச் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. அதனால் ஆங்கில காலண்டர் ஆண்டி லிருந்து 590 ஆண்டுகளை கழித்துக் கணக்கிட வேண்டும். அதுதான் பசலி ஆண்டாகும். எடுத்துக்காட்டாக 2000-2001 ஆம் ஆண்டில் வந்த பசலி ஆண்டு என்ன? 2000-590=1410. இதுதான் பசலி ஆண்டு. இப் போது நடப்பது 1432 ஆம் பசலி ஆண்டு. அதாவது 2022-2023 ஆம் நிதியாண்டு நடப்ப தால், 2022-590=1432 ஆகும். இந்த பசலி ஆண்டை அக்பர் அறிமுகப் படுத்தினார் என்றால் அவர் ஆட்சிக்கு வந்ததுமே அறிமுகப்படுத்திவிட்டாரா? அதாவது 1556இல் இரண்டாம் பானிபட் போரில் அக்பர் வெற்றி பெற்றுத்தான் ஆட்சிக்கு வருகிறார். அக்பர் ஆட்சிக்கு வந்த போது அவருக்கு வயது 13 தான். அதனால் அவரது தாய்மான் பைரம்கான் தான் தளபதியாகவும் ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் தான் ஹெமுவை பானிபட் போரில் தோற்கடித்தார்.
ஆனால் இந்த நிர்வாக முறைக்கு அவ ருக்கு முன் ஆட்சியிலிருந்த ஷெர்ஷா தான் காரணம். அவர் சூர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் 1540 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசை தனது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்திருந்தார். அவர் 1537இல், அக்பரின் தந்தையான ஹூமா யூனை தோற்கடித்து ஆட்சியைக் கைப் பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷெர்ஷாவின் நிர்வாகத் திறமை அளவிடற்கரியது என்று வரலாற்றாசிரி யர்கள் குறிப்பிட்டுள்ளனர். பசலி ஆண்டுக் கணக்கு முகலாயர் களின் நிர்வாக நடைமுறை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ பத்தாம் பசலித் தனத்தை ஆட்சி நிர்வாகங்களில் புகுத்தி நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள். வரலாற்றுச் சக்கரம் பின்னோக்கி நகரக் கூடாது.