articles

img

காந்தி பெயரிலான திட்டத்தையும் ஒழித்திடும் முயற்சி - ஏ.லாசர்,

தேசபிதா மகாத்மா காந்தி 1948, ஜனவரி 30-இல்  ஒரு மதவெறியனால் சுட்டுக் கொல்லப் பட்டார். அவர் என்ன ‘பாவம்’ செய்தார்? சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடாது என்றார். பிரிவினை மதமோதலை  ஏற் படுத்தும்; அதன் காரணமாக மனிதப் படுகொலைகள் கொடூரமாக நடக்கும்; அது மிக மோசமான விளைவு களை தேசத்தில் உருவாக்கும்; இந்தியாவில் மனித நேயத்தையும் மனிதத் தன்மையையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று அழுத்தமான கருத்தை தேசம் முழு வதும் பிரச்சாரம் செய்தார். ஆனால், இதை மத வெறியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.  காந்தியின் பூத உடல் அழிக்கப்பட்டது அவர்களின் சதியினால். ஆனால் மனிதநேயம் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, பிறருக்கு விட்டுக் கொடுத்து வாழ்வது, கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என்ற அந்நியன் உயிர்மூச்சான கோட்பாடுகளை மதவெறியர்களால் அழிக்க முடியவில்லை. அதனால், அவரைக் கொன்ற கூட்டம் சுதந்திர இந்தியாவில் கடந்த 75 ஆண்டு காலமாக அவருடைய கோட்பாடுகளை அழிக்க முயற்சி எடுத்து வருகிறது. 

காந்தியின் கிராம ராஜ்ஜியத்தை இந்தியாவில் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் அந்த கிராமப்புறத்து மக்களை வாழ்விக்க, அவர்கள் வாழும் இடங்களிலேயே நிலைநிறுத்த, அவர்களுக்கு வேலையும் குறைந்த கூலியும் கிடைக்க இடதுசாரிகள் எடுத்த முயற்சியினால் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் 2005இல் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்படி காந்தியின் பெயரில் ஒரு சட்டம் இருக்கவேக் கூடாது; காந்தியின் பெயரே இந்தியாவில் உச்சரிக்கப்படக்கூடாது என்று கருதும் இன்றைய பாஜக ஆட்சியாளர்கள்; அவருடைய பெயரில் ஒரு சட்டத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?  எனவே மோடியின் தலைமையில் ஒன்றிய ஆட்சி வந்த காலத்திலிருந்து அதை சிதைப்பதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். முதலில், இந்த சட்டமே தேவையற்றது; கிராமங்களிலே இருக்கக்கூடிய விவசாயத்திற்கு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் போகிறது என்று சொன்னார்கள். கிராமங்களிலே கூலிக்காரர்களுக்கு விவசாயத்தின் மூலம் கூலி வேலை கிடைப்பது குறைந்து போனதால்தான் இந்த சட்டம் வந்தது என்று விளக்கம் கொடுத்த பின்பு அதற்கு ஒதுக்கப்படுகிற நிதி, எந்த பலனையும் ஏற்படுத்தவில்லை; வேலை செய்யாமல் பணத்தை வாங்குகிறார்கள்; ஒரு சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்குகிறது என்று சொன்னார்கள். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில்,  வேலை நாட்களை குறைத்தார்கள். சம்பளத்தை உரிய காலத்தில் கொடுக்காமல் நிறுத்தி வந்தார்கள். மாநிலத்திற்கு தர வேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதியை இழுத்தடித்தார்கள். இயந்திரங்களை வைத்து வேலை செய்வதற்கும், காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்  பேரில் மனித உழைப்பை குறைத்தார்கள். சாதி அடிப்படையில் வேலை, கூலி வழங்குவது என்று தீர்மானித்தார்கள். இப்படி பல தடைகளின் காரண மாக தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் 100 நாள் வேலைகள் இப்போது 30 அல்லது 40 நாட்கள் கூட கொடுக்கப்படுவது இல்லை.

கடந்த 2022, டிசம்பர் மாதத்தில் மோடி அரசு ஒரு உத்தரவை போட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை டிஜிட்டல் முறையில் ஊழல் இல்லாமல் வேலை செய்பவர்களுக்கே சம்பளம் என்று ஒழுங்கு படுத்துவதற்காக நவீனப்படுத்தியுள்ளோம் என்று பெரு மிதத்தோடு டிவியில் சொல்லி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் உண்மையில் அவர் சொல்லுவது போன்ற நிலையில்லை. காலை யில்  எட்டு மணிக்கு ஒரு முறை போட்டோ  எடுக்க வேண்டும், மாலையில் ஒரு முறை போட்டோ எடுக்க வேண்டும். கைரேகையும் வைக்க வேண்டும். இதுதான் அவருடைய நவீனப் படுத்துதல்.  இதன் மூலமாக இன்றைக்கு இருக்கும்30 நாள் வேலை 100 நாளாக மாற்றப்படுமா? விலை வாசி உயர்வுக்கு ஏற்ற சம்பள உயர்வு இதில் இருக்கிறதா? ஒவ்வொரு வாரமும் வேலை செய்த உடன் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுமா? காண்ட்ராக்ட் முறையிலும், இயந்திரங்களின் மூலமும் வேலைகளை செய்து தொழிலாளிகளின் வேலை நாட்களை பறிக்கும் கொடுமைகள் தடுக்கப்படுமா? இதெல்லாம் செய்யப்படாமல் மோடி சொல்கிற டிஜிட்டல் முறையினால் விவசாயக்  கூலி மக்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? காந்தியின் பெயரில் இருக்கும் ஒரு சட்டத்தை அழிக்கும் நோக்கமாக மட்டுமே இருக்கிறது. 

காந்தியை கொன்ற 75 ஆண்டுகளுக்கு பின்பும்  அவருடைய பெயர் எந்த இடத்திலும் உச்சரிக்கப்படக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்-சின் நோக்கத்திற்கு ஏற்பத்தான் இதுவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  எனவே தேசம் முழுவதும் உள்ள கிராமப்புற  உழைப்பாளிகளை ஒன்றுதிரட்டி உழைப்பாளிகளுக்கு விரோதமான மோடியின் கொள்கைகளை, கோட்பாடு களை தகர்த்தெறிந்திட நாம் மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தில் சபதமேற்போம்!

;