articles

img

திருப்பூர் மக்கள் பணத்தை தின்னும் வெள்ளை யானை! - வே.தூயவன்

நவீன தாராளமயம் எனப்படும் இன்றைய கால கட்டத்தில் மக்களின் உழைப்பும், பணமும் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்ப தற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆளும், அதிகார வர்க்கங்களால் ஆகா, ஓகோ எனப் புகழ்ந்து  கொண்டாடப்பட்ட திருப்பூர் மூன்றாவது குடிநீர் திட்டம் அத்தகைய ஒரு சூறையாடல் திட்டம்தான் என்பது கண்ணெதிரே இருக்கும் சாட்சியமாகும்.

தேவையும், செய்ததும்

1989 - 90 காலகட்டத்தில் ஒன்றுபட்ட திருப்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம், ஏற்றுமதி நகரம் என்ற முறையில் திருப்பூருக்கு உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டது. ஆனால் இன்றளவும் அத்தகைய சிறப்பு நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை. அதே சமயம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் தண்ணீரையும், கழிவுநீர் சுத்திகரிப்பையும் மக்க ளுக்கு செய்ய வேண்டிய அடிப்படைச் சேவை என்று கருதாமல், அதை வைத்து லாபம் சம்பாதிக்கும் திட்டத்தை உருவாக்கினர். அப்படி உருவாக்கப்பட்டது தான் மூன்றாவது குடிநீர்த் திட்டமும், பாதாளச் சாக்கடைத் திட்டமும். 

உலக, உள்ளூர் முதலாளிகள்

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நேரடியான அரசு நிறுவனம் அல்ல. அரசு மற்றும் தனியார் கூட்டு நிறுவனம் . இதில் பன்னாட்டு பெக்டல்  நிறுவனம் (பொலிவியாவில் தண்ணீரை விற்பனைச் சரக்காக மாற்றியதால் பெரும் கலகம் ஏற்பட்டு விரட்டி யடிக்கப்பட்ட நிறுவனம்), பன்னாட்டு நிதி நிறுவ னங்கள், இந்திய வர்த்தக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் ஆகியவை பங்குதாரர்களாக முதலீடு செய்துள்ளன. ஒரு பொதுத் தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் ஏற்றுமதியாளர், சாயஆலை சங்கத்தினரும் பங்குதாரர்களாக சேர்க்கப் பட்டனர். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார். அதாவது நேரடியாக தனியார் முதலாளிகள் ஒரு நிறுவனத்தை நடத்தினால், அவர்களின் லாப நோக்கம் வெளிப்படை யாகத் தெரியும் என்பதால் கூட்டு நிறுவனமாக ஒரு அரசு அதிகாரி பொறுப்பில் செயல்படக்கூடிய நிறுவன மாக அமைத்துக் கொண்டனர்.

உறுதியான நிலை எடுத்த சிபிஎம்

புதுத் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் மூலம் வணிக நோக்கத்தில் குடிநீர்த் திட்டம் என அறிமுகப் படுத்திய நிலையிலேயே சமரசம் இல்லாமல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே! திருப்பூர் மக்களுக்குத் தண்ணீர் தேவை! ஆனால் அதை தனியார் மூலம் வர்த்தக நோக்கத்தில் நிறைவேற்றக் கூடாது. அரசு நகராட்சி மூலம் நேரடியாக குடிநீர்த் திட்டத்தை அம லாக்கி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலி யுறுத்தியது. மிகப்பெரும் பிரச்சாரம், போராட்ட இயக்கம் நடத்தப்பட்டது.  அதே சமயம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுகவும், அதிமுகவும் இத்திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என சொந்தம் கொண்டாடினர். 

புகழ்ந்த ஜெயலலிதா

புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சுமார் ரூ.1300 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போ தைய முதல்வர் ஜெயலலிதா திருப்பூருக்கு வருகை  தந்து இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய போது, “அரசு, தனியார் பங்களிப்பில் உருவாக்கப் பட்டுள்ள நகராட்சியின் ஒரு சேவைத் திட்டம், ஆசியா விலேயே முன்மாதிரியானது” என்று புகழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக எல் அண்ட் டி நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தின் கட்டுமானப் பணி நடைபெற்றது. அப்போது எந்தவித முன்னறிவிப்பு, மாற்று ஏற்பாடு களும் இல்லாமல் சாலைகள் எங்கும் பள்ளங்கள் தோண்டி குழாய் பதித்ததும், அதனால் ஏற்பட்ட விபத்து களில் சிக்கி சிலர் உயிரிழந்ததும், பலர் எலும்பு முறிவு காயங்களுக்குள்ளாகி கை, கால்கள் முறிந்த தும் தனிக்கதை! ஒரு வழியாக சோதனை ஓட்டம் முடிந்து 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

அனுபவம் என்ன?

இத்திட்டம் கொண்டு வந்தபோது 30 ஆண்டுக ளுக்கு திருப்பூரின் குடிநீர் மற்றும் தொழில் துறையின் தண்ணீர் தேவை பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியது என்று ஆட்சியாளர்கள் கூறினர். அதன்படி தோராய மாக 2035 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் திருப்பூரின் தேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும். நடந்ததா?  இல்லை! இப்போது 2022 ஆம் ஆண்டு, நான்காவது குடிநீர் திட்டத்திற்கான இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஜனவரியில் இத்திட்டம் மூலம் நகரில் குடிநீர் வழங்கும் பணி நடைமுறைக்கு வரும் என்று மாநகராட்சி நிர்வாகத்தி னர் கூறுகின்றனர். ஏன்? தனியார் மூலம் நிறை வேற்றப்பட்ட வர்த்தக நோக்கத்திலான மூன்றாவது குடிநீர் திட்டம் மாநகராட்சியின் முதுகெலும்பை முறிக்கிறது என்பதால்தான்! குறிப்பாக புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்துடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் திருப்பூர் மாநகராட்சிக்கு 3 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீரை, ஒரு கிலோ லிட்டர் ரூ.12.23 என்ற கட்டணத்தில், நாளொன்றுக்கு ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 970-க்குத் தருகிறது. அது போக கூடுதல் குடிநீரை வணிக அடிப்படையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண அடிப்படையில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கின்ற னர். அதன்படி 6 கோடியே 60 லட்சம் லிட்டர் குடிநீரை ஒரு கிலோ லிட்டர் ரூ.27.96 (ஒப்பந்த கட்ட ணத்தை விட 228 சதவிகிதம் அதிகம்) என்ற விலைக்கு, அதாவது நாளொன்றுக்கு ரூ.18 லட்சத்து 45 ஆயிரத்து 360 விலை கொடுத்து மாநகராட்சி வாங்கிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் மூன்றாவது குடிநீர்த் திட்டத்தில் நாளொன்றுக்கு 10 கோடியே 50 லட்சம் லிட்டர் குடிநீரை ஒவ்வொரு நாளும் ரூ.23 லட்சத்து 22 ஆயிரத்து 330 விலை கொடுத்து மாநக ராட்சி வாங்கிக் கொண்டிருக்கிறது. இது யாருடைய பணம்? திருப்பூர் மக்களின் உழைப்பில், வியர்வை யில் சம்பாதித்த வரிப்பணம் யாருக்குப் போகிறது? எங்கோ கண் காணாமல் இருக்கக்கூடிய பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பெரும் முதலாளிக ளின் பைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறது!

மீசையில் மண் ஒட்டவில்லை

சரி, அப்படித்தான் கொள்ளைக் கட்டணம் வசூ லித்தாலும், அவர்கள் சொன்னபடி திருப்பூரின் தண்ணீர்த் தேவை பூர்த்தியானதா? மூன்றாவது குடிநீர்த் திட்டம் நகரின் தண்ணீர்த் தேவையை முழு மையாகப் பூர்த்தி செய்யவில்லை, அவர்களிடம் போதிய தண்ணீர் இருந்தாலும் அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்குவதற்கு மாநகராட்சியால் முடியவே முடியாது என்பதை சுமார் 15 ஆண்டுகளிலேயே அரசு நிர்வாகமே ஒப்புக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அதனால்தான் நான்காவது குடிநீர்த் திட்டத்தை சத்தமில்லாமல் குடிநீர் வடிகால் வாரி யத்தின் மூலம் நிறைவேற்றுகின்றனர். 

கடன் வாங்கி கழித்தல்!

கடந்த நவம்பர் 16ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி யின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்மானம் எண் 483 -இல் புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திற்கு கடன் நிலுவையை செலுத்துவது பற்றி முன்மொழியப்பட்டுள்ளது. இதில் குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டணம் ரூ. 91 கோடியே 45 லட்சம்! இந்த கடனை செலுத்தாததால் அவர்கள் விதிக்கும் வட்டி 20 சதவிகிதம் வீதம் 64 கோடியே 45 லட்சம்! ஆக நிலுவை கட்டணம் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்தால் ரூ.155 கோடியே 90 லட்சம் அந்த நிறுவனத்துக்கு மாநக ராட்சி வழங்க வேண்டுமாம்! ஆனால் இந்த தொகை எந்த ஆண்டு, எந்த மாதத்தில் இருந்து செலுத்த வேண்டியுள்ளது என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை. கந்துவட்டிக்காரர்கள் வசூலிக்கும் வட்டியைப் போல 20 சதவிகிதம் வட்டியை நிர்ணயித்து வசூலிக்கின் றனர்.

இந்த கடனை செலுத்துவதற்கு என்ன வழி? தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ) என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் குறைந்த (வருடம் 7.35 சதவிகிதம்) வட்டியில் ரூ.90 கோடி கடனை மாநகராட்சிக்குத் தருகிறார்கள். அதை வாங்கி மொத்தமாக புதுத் திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திற்கு செலுத்தி விட வேண்டும். கடன் வாங்கி கடனைக் கழிக்கிறார் கள்!  சரி, பிரச்சனை தீர்ந்ததா? இல்லை, புதிய வடி வத்தில் பிரச்சனை தொடர்கிறது. ஆம், டுபிட்கோ நிறுவ னத்திடம் வாங்கும் ரூ.90 கோடி கடன் மற்றும் அதற்கான 10 ஆண்டு வட்டித் தொகை ரூ.33 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரத்து 750 சேர்த்து மொத்தம் ரூ.123 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரத்து 750 தொகையை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு 40 தவணைகளில் திருப்பூர் மாநகராட்சி செலுத்த வேண்டும்! அதாவது ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை சராசரியாக ரூ.3 கோடி வீதம் மாநகராட்சி பணம் டுபிட்கோ நிறுவ னத்திற்கு செலுத்த வேண்டும்.

நிபந்தனைகள் என்ன?

அந்த நிறுவனம் விதித்திருக்கும் நிபந்தனைகள் வருமாறு: மாநகராட்சி பட்ஜெட்டில் இந்த கடனை செலுத்துவதற்கு உரிய வழிவகையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசின் நிதிக்குழு பரிந்துரை, இதர மானியம் மற்றும் இதர வருவாய் நிதிக ளில் பெறப்படும் தொகையில் இக்கடனை திரும்பிச் செலுத்த வேண்டும். சொத்து வரி, தொழில் வரி உயர்வு நடைமுறைப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டா லும், தவணைக் காலத்தில் நிதிப் பற்றாக்குறை உருவானாலும் டுபிட்கோ நிறுவனத்திற்கு கடனை செலுத்துவோம் என மாநகராட்சி உறுதியளிக்க வேண்டும்.

பட்ஜெட்டில் உரிய வழிவகை என்பது, வார்டுகளில் குடிநீர்ப் பணி, ரோடு போடுவது, தெரு விளக்கு பராமரிப்பு, கழிவுநீர்க் கால்வாய் பிரச்சனை என செய்ய  வேண்டிய வேலைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு மாறாக கடனை செலுத்த வேண்டும் என்பதாகும். அத்துடன் அரசு தரக்கூடிய இதர மானியங்கள், நிதிகளையும் பெற்று மக்களுக்கு செய்ய வேண்டிய உள்ளாட்சிப் பணிகளை செய்வதை விட கடனை செலுத்த முன் னுரிமை அளிக்க வேண்டும் என்பதாகும். என்ன நெருக்கடி ஏற்பட்டாலும் அதை மக்கள் தலையில் சுமத்தலாமே தவிர, கடனை கட்டாமல் இருக்கக் கூடாது என்பதும் நிபந்தனை! அடுத்த 10 ஆண்டுக ளுக்கு மாநகராட்சி மக்களிடம் வசூலிக்கும் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களில் பெரும் பகுதி கடனைக் கட்டுவதற்கு போகப் போகிறது என்பதே இதன் பொருள்!

பணம் தின்னும் வெள்ளை யானை

ஆக, 1990களில் வணிக அடிப்படையில் மூன்றா வது குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, இது  மக்கள் தலையில் சுமையாக மாறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொன்னது நூற்றுக்கு நூறு அப்படியே உண்மையாகி திருப்பூர் மக்கள் தலையில் சுமையாக, காலைச்  சுற்றிய பாம்பாக இந்தத் திட்டம் உள்ளது தெளிவாகிறதல்லவா?  இது மட்டுமல்ல, இதற்கு முன்பும் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே புதுத்திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் திவாலாகும் நிலைக்குப் போனது. அப்போது, ஆசியா வுக்கே முன்மாதிரியான தனியார் அரசு கூட்டுத் திட்டம் என்று 2002இல் புகழ்ந்த அதே ஜெயலலிதா, 2011இல் இந்த நிறுவனத்திற்கு மீட்புத் திட்டம் என மக்களின் வரிப்பணம் ரூ.105 கோடியைத் தூக்கிக் கொடுத்தார்! இப்போது கட்டண நிலுவை, வட்டி என ரூ.155.90 கோடி வசூலிக்கின்றனர்.

புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மூன்றாவது குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு கடந்த 17 ஆண்டுக ளில் திருப்பூர் மாநகராட்சி செலவு செய்திருக்கும் தொகை மட்டும் தோராயமாக ரூ.1440 கோடி! இது  தவிர அரசு மீட்புத் திட்டம் என ரூ.105 கோடி கொடுத்தது தனி! ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.85 கோடி திருப்பூர் மக்கள் பணம் இந்த வெள்ளை யானையின் வயிற்றுக்குள் போய்க் கொண்டிருக்கிறது. 

செய்ய வேண்டியது என்ன?

ஆக, தாராளமயம், தனியார்மயம் என்பது மக்களுக்கு நன்மை செய்யும் கொள்கை அல்ல என்ப தற்கு, புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகமும், அதன் மூலம் நிறைவேற்றும் மூன்றாவது குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டமும் அனுபவ சாட்சி யமாக உள்ளது. சீர்மிகு நகரம் திட்டம் உள்பட ஒவ்வொரு திட்டமும் ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வங்கி, ஐரோப்பிய ஒன்றிய நிதி நிறுவனங்கள், ஜப்பான் வங்கி என பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதி களை கடன் என்ற பெயரில் வாங்கி பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. அவர்கள் ஒன்றும் சேவை செய்யக்கூடிய நல்லெண்ணம் படைத்தவர்கள் அல்ல. லாபமே அவர்கள் நோக்கம்! 

 மக்களுக்குச் செய்ய வேண்டிய சுகாதாரம், கல்வி ஆகிய அடிப்படைச் சேவைகளை அரசே நிறை வேற்ற வேண்டும் என்பதே சரியானது. அதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சுத்தமான குடிநீர் வழங்குவது சுகாதாரம் பேணுவதற்கான அடிப்படையாகும். தண்ணீர் வணிக மயத்தினால் திருப்பூர் மக்களின் குடிநீர்த் தேவை தீரவில்லை, லாப நோக்கத்தில் கணக்குப் போட்டு காசு பறிக்கும் வேலைதான் தொடர்ந்து கொண்டிருக்கி றது. இன்றும் பத்து நாட்கள், பதினைந்து நாட்களுக்கு  ஒரு முறைதான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை  திருப்பூர் மாநகரின் பல பகுதிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவது போக, குடிநீருக்காக மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியைச் செலவிட்டு கேன் குடிநீர் வாங்கி பயன் படுத்தும் நிலையில் திருப்பூர் மக்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் மூன்றாவது குடிநீர்த் திட்டத்திற்கு மாநகராட்சி செலுத்த வேண்டிய மொத்தக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் வாங்கிக் கழித்தல் என அடுத்த 10 ஆண்டு களுக்கு டுபிட்கோ நிறுவனத்திற்கு கடன் செலுத்தும் சுமையை அரசு கைவிட வேண்டும். தனியார்மய, தாராளமய சிலந்தி வலையில் சிக்கியிருக்கும் அதிகார வர்க்க அறிவுஜீவிகளுக்கு இதற்கு அப்பால் சிந்தித்துச் செயல்பட வழி தெரியாது. எனவே அவர்கள் சொல்வ தைக் கேட்டுச் செயல்படுவதை அரசு துணிவோடு நிராகரிக்க வேண்டும். 


 






 

;