articles

img

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலை நாட்டிட நடைபயண பிரச்சாரம் - ஜி.சுகுமாறன்

தமிழக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாத்திட சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் மிக முக்கியமான கோரிக்கை களை முன்வைத்து 2100 கிலோமீட்டர் நடைபயணம் சென்னை, திருவள்ளூர், குமரி, தென்காசி, கடலூர், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய நகரங்களிலிருந்து 7 குழுக்களாக மே 20 முதல் 30 வரை அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்கப் புறப்படுகிறது. நிறைவு நாளான மே 30 அன்று அனைத்துக் குழுக்களும் திருச்சி மாநகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெறும் பொதுக்கூட்டத்தில் சங்கமிக்கின்றன.

ஏன் இந்த நடைபயணம்?

1990 களில் துவங்கிய நவீன தாராளமயக்கொள்கை யின் அமலாக்கலால் சொல்லொண்ணா துயரங்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இக்கொள்கை அம லாக்கம் துவங்கிய காலத்திலேயே இது ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்; இது கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கை; எனவே இதை நிராகரிக்க வேண்டும் என சிஐடியு உள்ளிட்ட செங்கொடி இயக்கங்கள் ஆட்சி யாளர்களை எச்சரித்தன. மக்களை அணி திரட்டின. வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள்; நல்லகாலம் பிறக்கும்; கசப்பு மருந்தை சாப்பிடுவது போல் கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள்; நல்லது நடக்கும் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் வாய்ஜாலம் காட்டினர்.  33 ஆண்டுகளில்  விலைவாசி உயர்வு, வேலையின்மை, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களாக மாற்றுவது, நிரந்தரமற்ற தொழிலாளர்களை உருவாக்குதல், ஒப்பந்த தொழிலாளர் பெருக்கம், திட்ட ஊழியர்கள் என்கிற பெயரில் அநியாய உழைப்புச் சுரண்டல்,  பொதுத்துறைகளும் நிதித்துறைகளும் தீவிர தனியார் மயம், அனைத்து தரப்பு மக்களையும் கார்ப்பரேட் முதலைகளுக்கு காவு கொடுக்கும் கொள்கை என இதன் அமலாக்கம் மோசமான விளைவுகளை உருவாக்கின. குறிப்பாக இந்த 9 ஆண்டுகாலமாக இக்கொள்கை விசுவரூபம் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது.  

நவீன தாராளமயம்  என்றால் என்ன?

கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்தை பன்மடங்கு உயர்த்துவது; அந்நிறுவனங்களின் சொத்துக்களை பெருக்குவது;  உழைப்புச் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துவது; இவைகளை சாத்திய மாக்கிட  தொழிலாளி வர்க்கத்தின்மீது  கடுமையான தாக்குதல்களை நடத்துவது, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது; பொதுச் சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்கள்,  நிதித்துறை நிறுவ னங்கள், இயற்கை வளங்கள் என அனைத்தை யும் பெருமுதலாளிகளுக்கு மாற்றுவது;  மக்களை மதம், இனம், சாதி, வாழ்விடம் என பிரிவினை செய்திட ஊக்கமளிப்பது;  இவைகளை ஆட்சியாளர்களே திட்ட மிட்டு செய்வது;  ஆட்சியாளர்களின் இக்கொள்கை களுக்கு எதிர்க் குரல் எழுப்புவோரை ஜனநாயக நெறிமுறைகளை மீறித் தாக்குவது;  தேவையா னால் அதற்கேற்ப அரசியல் சாசன உரிமைகள் அனைத்தையும் தகர்ப்பது; பற்றி எரியும் வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது;  பழமை வாதத்தை முன் நிறுத்துவது...  இதுதான் இன்றைய நவீனமய தாராளமய கொள்கை.

விலைவாசி கடும் உயர்வு

மோடி அரசு ஆட்சிக்குவந்தபோது 2014-ல் ரூ.415 ஆக இருந்த சமையல் எரிவாயு இப்போது ரூ.1200ஐ தாண்டிவிட்டது. எண்ணெய், பருப்பு, அரிசி என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.  விலைவாசியின் உச்சம் மக்களை திணறச் செய்கிறது.  வறுமை அதிகரித்துள்ளது.  மக்களின் வாங்கும் சக்தி பெரு மளவு வீழ்ந்துள்ளது.  விலை உயர்வினால் 90 சத விகித மக்கள் தங்களது நுகர்தலைக் குறைத்துள்ள தாக ஆய்வுகள் சொல்கின்றன.   மொத்தமுள்ள 116 நாடுகளில் 2020 -ல் 94வது இடத்தில் இருந்த இந்தியா 2021-ல் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

லட்சக்கணக்கில்  காலிப் பணியிடங்கள்

வேலையின்மை முன் எப்போதுமில்லாத அளவில் பெருகியுள்ளது.  வேலை வாய்ப்பை அதிகமாக உருவாக்க வேண்டிய அரசுகள் வேடிக்கை பார்க் கின்றன.  அரசுத் துறையிலேயே பல லட்சம் காலிப்பணி யிடங்கள் பல ஆண்டுகாலமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் துறைகளில் மட்டும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று மாநில அரசுகளிடமும் உள்ளது . பட்டிய லின பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாச்சார அடிப்ப டையில் வேலை கிடைத்துவந்த பொதுத்துறைகளும் தனியாரிடம் சிக்கித் தவிக்கின்றன.  இங்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது. கிடைக்கும் வேலைகள் கூட கண்ணியமற்றதாக  உள்ளன.  தகுதிக்கேற்ற, கண்ணியமான வேலை மறுக்கப்படுகிறது. சமூக பாதுகாப்பற்ற சூழலை திட்டமிட்டே  ஆட்சியாளர்கள் உருவாக்குகிறார்கள். நவீன தாராளமயக்கொள்கை நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகள் அனைத்திலும் ஒப்பந்த தொழி லாளி முறைக்கு தள்ளியுள்ளது.  இதன் மூலம் தொழி லாளர்களுக்கு மிக சொற்ப கூலி கொடுக்கப்படுகிறது. இதனால்  உழைப்புச் சுரண்டலை அதிகரிக்க முடி கிறது. பல மடங்கு கொள்ளை லாபத்தைப் பெருக்க முடிகிறது.  இப்போது ஒப்பந்த முறையையும் தாண்டி குறிப்பிட்ட காலத்திற்கான தொழிலாளர்கள் (fixed term employment) போன்ற புதிய பெயர்களை சூட்டுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ‘கிக்’ என்ற  பெயரிலான தொழிலாளர்கள்,  இவர்களுக்கு எந்தவித மான சட்ட பாதுகாப்புகளோ, தொழில்தகராறு சட்டங்க ளோ பொருந்தாது.  இவர்களை தொழிலாளியாகக் கூட அங்கீகரிப்பது  இல்லை.  எவ்வித சமூகப் பாது காப்பும் இவர்களுக்கு பொருந்தாது.  ஆக தற்போது உள்ள சட்டங்கள் எதுவும் பொருந்தாத ஒரு பெரும் இளைஞர் கூட்டத்தை கார்ப்பரேட்டுகளின் நவீன  அடிமைகளாக மாற்றிவிட்டதுதான் நவீன தாராள மயக் கொள்கை.  

சிஐடியு நடைபயணம் இன்று துவக்கம்

1. சென்னை - திருச்சி:  தலைமை: எம்.தனலட்சுமி, மாநில செயலாளர்; கன்வீனர்: பா.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்.
2. திருவள்ளுவர் - திருச்சி: தலைமை: எஸ்.கண்ணன், மாநில உதவிப் பொதுச்செயலாளர்;கன்வீனர்: கே.விஜயன், துணைத் தலைவர்.
3. கடலூர் - திருச்சி: தலைமை: கே.திருச்செல்வன், மாநில உதவிப் பொதுச் செயலாளர்;கன்வீனர்: சி.ஜெயபால், மாநிலச் செயலாளர்
4. களியக்காவிளை - திருச்சி: தலைமை: வி.குமார், மாநில உதவிப்பொதுச் செயலாளர்;கன்வீனர்: கே.தங்கமோகனன், மாநிலச் செயலாளர்
5. தென்காசி- திருச்சி: தலைமை: எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர்;கன்வீனர்: பி.என்.தேவா, மாநிலச் செயலாளர்
6. கோவை - திருச்சி: தலைமை : கே.சி.கோபிக்குமார், மாநிலச் செயலாளர்கன்வீனர்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்
7. ஓசூர் - திருச்சி: தலைமை: கே.ஆறுமுகநயினார், மாநில உதவிப் பொதுச் செயலாளர்; கன்வீனர்: டி. உதயக்குமார், துணைத் தலைவர்

திட்டமிட்ட வறுமை

நவீன தாராளமயக் கொள்கை வறுமையை திட்டமிட்டு உருவாக்குகிறது.  வறுமையிலிருந்து விடுபட பிழைப்பைத் தேடி ஓடவைக்கிறது.  கிடைக்கும் வேலைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள வைக்கிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் இந்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது. அதுவே திட்ட ஊழியர்களின் நிலை.  தமிழகத்திலும் இந்தியாவிலும்  ஐசிடிஎஸ், ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு போன்ற துறைகளில் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் கணிசமா னோர் பெண்கள். இத்தொழிலாளர்களுக்கு தொழிலாளி என்கிற அந்தஸ்து வழங்கக்கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை. 

“உண்டு; ஆனால் இல்லை”

அனைத்து சேவைத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க பெரும் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்கிறது.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் ஏழைகள் பயன்படுத்திவந்த ரயில்வே துறை இப்போது வந்தே பாரத் திட்டத்தின்மூலம் ஏழைகளுக்கு எட்டா கனியாக  மாறியுள்ளது. ரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்க்க ஒன்றிய அரசு துடிக்கிறது.  அமைச்சர் கள் இதை மறுக்கின்றனர். இப்படித்தான் விமான போக்குவரத்தையும் கூறினார்கள்.  விமான போக்கு வரத்து துறை ஒன்றிய அரசிடம் இப்போதும் இருக்கி றது.  இத்துறைக்கான ஒன்றிய அமைச்சர் இருக்கிறார். ஆனால் ஒரு விமானம் கூட ஒன்றிய  அரசுக்குச் சொந்தமாக இல்லை. இதுபோன்று தான் ரயில்வேத் துறையும் மாற்றப்படுகிறது. இத்துறைக்கான அமைச்சர் இருப்பார். ஆனால் ரயில் நிலையங்க ளோ, ரயில்களோ அரசிடம் இருக்காது.  இதுதான் மோடி அரசின் புதிய இந்தியா.  இதே நிலையை போக்குவரத்துத்துறையிலும் மின்துறையிலும் உருவாக்க முயல்கிறார்கள்.

ஆபத்தான திருத்தங்கள்

தொழில் தகராறு சட்டத்தில் 100 தொழிலாளர்க ளுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவ தற்கோ இதர நடவடிக்கைகளுக்கோ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்ததை 300 பேர் என திருத்தம் கொண்டுவந்திருக்கிறது.  இது பெரும் ஆபத்தை விளைவிப்பதாக மாறிவிடும்.  பெரும் முதலாளிகள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு அமர்த்தவும் துரத்தவும் அதிகாரம் வேண்டும் என அரசை நிர்ப் பந்தித்து வருகிறார்கள்.  இதற்கு அரசு அடி பணிந்ததன் விளைவே இச்சட்டத்திருத்தம்.  90 சதவீதம் ஆலைகளில் 300க்கும் குறைவான நிரந்தரத் தொழி லாளர்களே இப்போது உள்ளனர். எனவே இச்சட்டம் அமலானால் பெரும்பகுதி ஆலைகள் தொழிற்சாலை சட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.  எவ்விதத்தி லும் இச் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் உரி மைகளை பறிப்பதும், முதலாளிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கவுமே உதவி செய்கிறது.  

தமிழகத்தில்...

தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான நல்ல பல காரியங்களைச் செய்து வருகிறது. ஆனால் தொழிலாளி வர்க்கம் சந்திக்கக்கூடிய பிரச்சனை களில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறை வேற்ற வேண்டியுள்ளது; முதலீடுகளை ஈர்க்க வேண்டும்;  அது இன்றைய தேவை.  அதுதான் மாநி லத்தின் வளர்ச்சி.  அதே வேளையில் எவ்வளவு சலுகை களை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கினாலும் அவர்கள் தங்குகிறார்களா? வேடந்தாங்கல் பறவைகள் போல் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்து நமது ஏரியில் உள்ள மீன்களையும், உயிரினங்களையும் தின்று கொழுத்து முட்டைபோட்டு குஞ்சு பொரித்து தன் குஞ்சுகளுடன் பறந்து செல்வதைப்போல் அரசிடம் ஏராளமான சலுகைகள் பெற்று அது மின்சாரக் கட்டணத்தில், தண்ணீர் வரியில், நில விலையில், வரி விதிப்பில்- என அனைத்திலும் சலுகைகள் பெற்று நமது இளைஞர்களின் உழைப்பை ஈவிரக்க மின்றி சுரண்டிக் கொழுத்து சலுகைக்காலம் முடிந்த தும் வேறு எங்கு சலுகை அதிகம் கிடைக்குமோ அங்கு போகும் நிலையை நாம் பார்த்தோம்.  பாக்ஸ்கான், போர்டு நிறுவனங்களின் நிலை அதுதானே.  இவர்கள் மீண்டும் வேறு பெயர்களில் சலுகை பெற வருவார்கள். - எனவே, மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்.  உள்ளாட்சித் துறையில், அரசு மாவட்ட மருத்துவ மனைகளில், கொசு ஒழிப்புத் திட்டத்தில் என அனைத்து துறைகளிலும் பல ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.  இவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமோ, சட்டப் பாது காப்போ இல்லை. அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவர்களை முறைப்படுத்துவதற்கான எந்தத் திட்டத்தையும் இன்றுவரை அரசு முன்வைக்கவில்லை. 

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து வோம் எனக் கூறிய அரசு புதிய புதிய ஒப்பந்த முறைகளை கொண்டுவரத் திட்டமிடுகிறது. போக்குவரத்து துறையிலும், மின்சார துறையிலும் அவுட்சோர்சிங் முறை வரும் அபாயம் நிலவுகிறது. உள்ளாட்சித் துறையில் மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிவரை எதிர்காலத்தில் அவுட்சோர்சிங் முறை அமலாக்கப்படும் என அரசு ஆணை பிறப் பிப்பது சரியல்ல.       தமிழக கஜானாவை நிரப்புகின்ற பெரும் பணியை டாஸ்மாக் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.  முந்தைய அரசு இவர்களை வஞ்சித்தது. இவர்கள் பல பத்தாண்டு களாக பணியாற்றியும் இன்னும் கால முறை ஊதியம் வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. இப்படி ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இவைகளுக்கு உரிய தீர்வை தமிழக அரசிடம் எதிர்பார்க்கிறோம்.  

கட்டுமானம், ஆட்டோ, தையல் உள்ளிட்ட நலவாரி யங்களின் செயல்பாடுகளில் மேலும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.  வாரிய உறுப்பினர்களுக்கு உரிய காலத்தில் பணப்பயன்கள் பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டியுள்ளது.  இப்போது வழங்கும் பணப்பயன்களில் வாரியங்களுக்கேற்ப ஏற்றத்தாழ்வான நிலை நீடிப்பது சரியானதல்ல.  வாரிய நிதியை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட வேண்டும்.  அல்லது அரசின் பொது நிதியிலிருந்து வாரி யங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  இவைகளுக்கு மாற்றாக வாரிய உறுப்பினர்களுக்குள் ஏற்றத் தாழ்வை உருவாக்குவது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும்.  ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்க ளில் பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கும் முயற்சியில் அம் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.  வயதான காலத்தில் கண்ணியமாக வாழ்வதற்கு அமலில் இருந்த பழைய பென்சன் திட்டத்தை அம லாக்கிட இதர மாநிலங்களைப்போல் தமிழகமும் முன்முயற்சி எடுக்க வேண்டும். 

இந்த நிலைமைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், நவீன தாராளமயக்கொள்கையின் தீவிர அமலாக்கமே. அதன்மூலம் கார்ப்பரேட்களின் கொள்ளை இலாபத்திற்கு தேவையான சட்ட மாற்றங்களை கொண்டுவர துடிக்கும் ஒன்றிய அரசு,  மதவெறியை கட்டவிழ்த்துவிட்டு மக்களிடம் மோதலை உருவாக்கி பிரிக்க முயல்வதுதான்.இந்த  அடிப்படைப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் போராட்டக் களங்களைக் கட்டமைக்க இப்பிரச்சாரப் பயணம் வழிவகுக்கும். 

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச் செயலாளர்,  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)