articles

img

ஒரு வரலாற்று நிகழ்வு - பி.சம்பத் மத்தியக்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

அருந்ததியர் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தலித் மக்களுக் கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்ற சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்வைத்த கோரிக்கை அம்மக்களிடையே பெரும் தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. இக்கோரிக் கையை அறிக்கையாக சிபிஐ(எம்) மாநிலக் குழு சார்பாக வெளியிட்டபோது, பிரபல மான பத்திரிக்கைகளும், இதர ஊடகங்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதை வெளியிட்டனர். இக்கோரிக்கைக்காக இணைந்து போராட முன்வருமாறு அனைத்து அருந்ததியர் அமைப்புகளுக்கும் சிபிஐ(எம்) சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிகப் பெருவாரியான அமைப்புகள் மிகுந்த உற் சாகத்துடன் பங்கேற்றனர். இப்பிரச்சனையில் அன்றைய சிபிஐ(எம்) மாநில செயலாளர் என்.வரதராஜன் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் தனித்துவமானது. இக்கோரிக்கை தொடர்பான மாநாடுகள், போராட்டங்கள், இதர நிகழ்வுகளில் அவர் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டார். போராட்டத்தின் துவக்கமாக நடை பெற்ற நிகழ்வுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாநாடுகள் தான். முதன்முத லாக அருந்ததியர் மக்களின் மாநாட்டை நடத்தியது விருதுநகர் மாவட்டக்குழுதான். விருதுநகர் மாவட்ட மாநாடு நடத்தப்பட்ட தேசபந்து மைதானம் நிரம்பி வழிந்தது. அருந்ததியர் மாநாடா? செங்கடலா? என வியக்கும் அளவிற்கு ஆயிரக் கணக்கான அருந்ததியர் மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தை கள் சகிதம் கலந்து கொண்டனர். விருதுநகரை அடுத்து திண்டுக்கல், சேலம் சங்ககிரி, ஈரோடு, கோயம்புத்தூர் என வரிசை யாக பல மாநாடுகள் நடந்தன. இம்மாநாடுகள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்பிக்கையோடு பங்கெடுத்தனர். இந்த அனைத்து மாநாடுகளிலும் என்.வரத ராஜன், பி.சம்பத் இவர்களோடு பல்வேறு அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

மாவட்ட மாநாடுகளை அடுத்து மாநில அளவில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக் க்கையை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பேரணி சென்னை மாநகரில் ஜூன் 12 - 2007ல் நடைபெற்றது. பேரணியில்  அருந்த தியர் மக்களின் பங்கேற்பு எதிர்ப்பார்பையும் மிஞ்சும் அளவில் இருந்தது. ஆம். 20,000 பேர் பங்கேற்றனர். இதில் 5000 பேர் பெண்கள். 60 சதமானவர்கள் 25 வயதை ஒட்டியவர்கள் என்பது பேரணியின் போர்க்குணத்தை பறை சாற்றுவதாக அமைந்தது. சாதி அமைப்பில் மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளிலும் ஏழைகள், உடமைகள் ஏது மற்ற உழைப்பாளிகளான அருந்ததியர்களின் எழுச்சிமிகு பேரணியை அன்றைய தினம் சென்னை மாநகரம் கண்டது. செங்கொடிகள், பேரணிக்கான பதாகைகள், பேனர்கள் என பேரணியின் தோற்றம், ஆவேச முழக்கம் பார்த்தோரை வியக்க வைத்தது. சிபிஐ(எம்) மாநில செயலாளர் என்.வரத ராஜன் தலைமையேற்க அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மத்தி யக்குழு உறுப்பினர் உ.ரா. வரதராசன்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத், சிஐடியு மாநில செயலாளர் அ.சவுந்தரராஜன், கே.சாமு வேல்ராஜ், எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ., உடன் வந்தனர். இவர்களோடு பேரணியின் முன்வரிசையில் அருந்ததியர் அமைப்பு களின் தலைவர்கள் கு.ஜக்கையன் (மாநில ஒருங்கிணைப்பாளர் - அருந்ததியர் ஒருங்கி ணைப்புக்குழு), அதியமான் (நிறுவனர் - ஆதி தமிழர் பேரவை), அரு.சி.நாகலிங்கம் (தலைவர் - தமிழ்நாடு அருந்தியர் சங்கம்), எஸ்.கே.பழனிச்சாமி (அமைப்பாளர் - அருந்ததியர் ஜனநாயக முன்னணி), கோவை ரவிக்குமார் (அமைப்பாளர் - ஆதி தமிழர் விடு தலை முன்னணி), எம்.மரியதாஸ் (தலைவர் -  அருந்தியர் மகா சபை), ஆ.தயாளன் (பொதுச் செயலாளர் - அருந்ததியர் விடுதலை முன்னணி), ஆர்.நாகராஜன் (பொதுச் செயலா ளர் - புரட்சி புலிகள் இயக்கம்), கே.ஆர்.நாக ராஜன் (செயலாளர் - ஆதி ஆந்திரா அருந்த தியர் மகா சபை), வி.வேலுச்சாமி (நிறுவனர் - திராவிட விடுதலை கட்சி) ஆகியோர் அணி வகுத்து வந்தனர். மொத்தத்தில் ஒடுக்கப்பப் டோர் வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்வாக  இப்பேரணி அமைந்தது.

பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள், பங்கெடுத்தோரை உத்வேகமடையச் செய்தது. பார்ப்போரை பரவசமடைய வைத் தது. காரணம் அவை வெறும் முழக்கங்கள் அல்ல. மனித நாகரீகத்தின் மகத்தான தேவை களாக இருந்தன. சமூக, பொருளாதார, கலாச் சார அம்சங்களின் கலவையாக பேரணியும் அதன் முழக்கங்களும் அமைந்தன. தமிழக உழைப்பாளிகள் மற்றும் மத்தியதர வர்க்க அமைப்புகளின் மகத்தான தலைவர்கள் ஆங்காங்கே கூடியிருந்து வாழ்த்தியதும் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய கர்த்தாக்கள் உணர்ச்சி பொங்க வரவேற்றதும், அருந்ததி யர் மக்களுக்கான ஆதரவு அடித்தளத்தை விஸ்தரிப்பதாக அமைந்தன. சாதி ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகள் ஒழிக்கப்பட ஒடுக்கப்பட்ட மக்க ளின் மகத்தான ஒற்றுமையும் ஆவேச எழுச்சி யும் பிரதான தேவைதான். கூடவே, ஜன நாயக இயக்கங்கள் - இடதுசாரி அமைப்புகள் -  மனித உரிமை அமைப்புகளின் மகத்தான ஆதரவும், ஒத்துழைப்பும் இணையும்போது அம்மக்களின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடுகிறது.

ஆம்! அன்றைய தினமே பேச்சுவார்த் தைக்கு வருமாறு தமிழக முதல்வர் கலைஞரிட மிருந்து அழைப்பு வந்தது. பேரணி கோட் டையை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும்போதே கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் தலைமையில் பி.சம்பத் மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் கு. ஜக்கையன், அதியமான் மற்றும் கட்சியின்  மாநில தலைவர்கள் பலரும் பேச்சுவார்த் தைக்கு சென்றனர். அன்றைய தினம் டெல் லிக்கு செல்வதாக இருந்த தமிழக முதல்வர் கலைஞர் பேரணிக்கு முக்கியத்துவம் அளித்து நேரம் ஒதுக்கி பேச்சுவார்தைக்கு அழைத்தது அருந்ததியர் எழுச்சிக்கும் சிபிஐ(எம்) முன் முயற்சிக்கும் கிடைத்த துவக்க வெற்றியாக அமைந்தது. பேச்சுவார்த்தையின்போது அருந்ததி  யர் மக்களின் கோரிக்கைகளை அறிய தமிழக முதல்வர் கலைஞர் தனித்த  அக்கறை காட்டினார். என்.வரதராஜன் கோரிக்கைகளை விளக்கினார். அருந்ததியர் அமைப்பின் தலைவர்களும் இந்த உரையாடலில் பங்கேற்றனர். அருந்ததியர் மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும்

- அதற்காக தமிழக அரசு ஒரு குழு அமைத்து அருந்ததியர் மக்கள் தொகையையும் வாழ்நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும் -  மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் உள் ஒதுக்கீட்டை சிபாரிசு செய்ய வேண்டும் என பேச்சுவார்த்தையில் பலமாக வற்புறுத்தப்பட்டது. இதனை கவனமாக கேட்ட தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இதன் எல்லா அம்சங்களையும் பரிசீலிக்க ஒரு குழு அமைக்க ஏற்றுக் கொண்டார். இக்குழுவை காலதாமதமின்றி அமைக்கவும், ஆறு மாத காலத்திற்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் அவர் மனமுவந்து ஒப்புக் கொண்டார். அருந்ததியர் மக்களின் நீண்ட கால கனவான உள்ஒதுக்கீடு நிறை வேற அன்றைய தினம் அடித்தளம் அமைக்கப் பட்டது என்றால் அது மிகையல்ல. சிபிஐ(எம்) தலை யீடும், முன்முயற்சியும் இதில் பிரதான பங்கு வகித்தது என்றாலும் இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி மற்றொரு பிரதான சாதனையாகும். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியும், பாராட் டும் தெரிவிக்கப்பட்டது. அருந்ததியர் மக்களின் இதர கோரிக்கைகளும் அன்றைய தினம் தமிழக முதல் வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பேரணி நடைபெற்ற அன்றைய தினமே துப்புரவு பணியாளர் நலவாரியத்தை தமிழக அரசு அமைத்த தானது குறிப்பிடத்தக்க சாதனையாகும். சிபிஐ(எம்) கோரிக்கையை ஏற்று இந்நலவாரியத்தில் பி.சம்பத், கே.ஆர்.கணேஷ், கு.ஜக்கையன் ஆகியோரை நல வாரிய உறுப்பினர்களாக இணைக்க தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டார். இந்நலவாரியம் பல முறை கூடி மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முடிவு கட்டுவது உட்பட பல ஆலோ சனைகளை உருவாக்கியது. அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கு வது குறித்து பரிசீலிக்க நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு ஒப்புக் கொண்டபடி நியமனம் செய்தது. இக்குழு பல மாத காலம் கடினமான பணிகளை மேற்கொண்டது. இக்குழுவிடம் சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக அருந்ததியர் மக்களின் வாழ்நிலை விபரங்கள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன. பல அருந்ததியர் அமைப்புகளும் இத்தகைய மனுக்களை அளித்தன. பல மாதங்கள் ஆய்வுக்கு பிறகு ஜனார்த்தனம் குழு தமிழக அரசிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. எனினும், இதன் மீதான தமிழக அரசின் மேல்நடவடிக்கை சற்று தாமத மானது. இக்காலத்தில், சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டங்கள், மறியல் போன்ற இயக்கங்கள் நடந்தன.

இப்பின்னணியில் தமிழக அரசு ஜனார்த்தனம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ஒதுக்கீக்  வழங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை துவக்கியது. முதல்கட்டமாக அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் கலைஞர் தலைமையில் நடந்தது. சிபிஐ(எம்) உள்பட அனைத்து அரசியல் இயக்கங்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றன. இக்கூட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடாக வழங்குவதற்கான ஆலோசனையை தமிழக முதல்வர் முன்வைத்து உரையாற்றினார். அனைத்து அரசியல் இயக்கங்களும் இந்த ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்க அம்சமா கும். குறிப்பாக, இக்கோரிக்கையின் நியாயத்தை விளக்கி என்.வரதராஜன் முன்வைத்த விவாதம் அனைவரையும் கவர்ந்தது. எனினும், இக்கூட் டத்தில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சியின் தலை வர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் உள் ஒதுக்கீடு ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். ஆக, தமிழக அரசியல் இயக்கங்கள் அனைத் தும் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததானது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்தது.

இதையடுத்து, அருந்ததியர் மக்களுக்கு 3 சத மானம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத் தில் கலைஞர் அரசால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. ஏறத்தாழ ஏகமனதாக இச்சட்டத்திருத்தம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இதற்கு கவர்னர் ஒப்புதலும் பெறப்பட்டது. தமிழ கத்தில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டப்பூர்வமான உரிமையாக அங்கீகரிக்கப்பட்டதானது அருந்த தியர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி யது. தமிழகம் முழுவதும் இதற்கான கொண்டாட்டங் கள் நிகழ்ந்தன. தமிழக அரசிற்கும் சிபிஐ(எம்) - தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் பாராட்டு தெரிவிப்பதாக இக்கொண்டாட்டங்கள் அமைந்தன. அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தமிழகத்தில் சில சக்திகள் விரும்பவில்லை என்பது உண்மைதான். அத்தகைய சக்திகள் இப்பிரச் சனையை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்த னர். இவ்வாறு வழக்குத் தொடுத்தவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர். அருந்ததியர் உள்ஒதுக் கீடு அமலாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது இவர்களது வாதம். உடனடியாக சிபிஐ(எம்) சார்பாக ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பி. சம்பத் இந்த வழக்கில் மனு தாரர்களாக இணைந்து அருந்ததியர் உள்ஒதுக் கீட்டை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி ஆஜராகி அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டப்பூர்வமானதுதான் என வாதாடினார். தமிழக திமுக அரசும் திறமையான வழக்கறிஞர்களை கொண்டு உள்ஒதுக்கீட்டின் நியாயத்தை எடுத்துரைத் தது. இதுகுறித்த அனைத்து வாதங்களையும் கேட்ட பிறகு, உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. இது போன்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெறுவதால் அந்த வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க தீர்ப்பளித்தது. நல்ல அம்சம் என்னவென்றால், அருந்ததியர் உள்ஒதுக்கீடு அம லாக்கத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது என்பதுதான்.

தற்போதும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் பெஞ்ச் கோர்ட்டிற்கு மாற்றப்பட் டுள்ளது. இந்த வழக்கிலும் சிபிஐ(எம்) சார்பாக ஜி. ராமகிருஷ்ணன் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பி.சம்பத் மனுதாரர்களாக இணைந்து அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக 3 சதமான அருந்ததியர் உள்ஒதுக்கீடு அமலாகி வருகிறது. அருந்ததியர் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான அருந்ததியர்கள் மருத்துவர்களாக - பொறியாளர்களாக - பட்டதாரி களாக - இதர உயர்கல்வி பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். இதுபோக, வேலை வாய்ப்பிலும் அருந்ததியர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு பொறியாளர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் இன்னபிற பொறுப்புகளில் தமிழக அரசு மற்றும் தமிழக பொதுத்துறை நிறு வனங்களில் நியமனம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தி லும் இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அருந்ததியர் உள்ஒதுக்கீடு போராட்டமும், இதற்கு கிடைத்த வெற்றியும் தமிழக சமூக சீர்த்தி ருத்த இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயம் ஆகும். இப்போராட்டத்தில் தலையாய பங்கு வகித்தத்தற்காக சிபிஐ(எம்) - தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி பெருமை கொள்கிறது. இப்பிரச்சனையில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் பங்களிப்பும் மகத்தானது. அருந்ததி யர் உள்ளிட்டு தலித் மக்களின் சமூக விடுதலைக் காக தொடர்ந்து போராட சிபிஐ(எம்) - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதி பூண்டுள்ளன.

;