கோடிக்கால் பூதமடா - தொழிலாளி
கோபத்தின் ரூபமடா
நாடி எழுந்ததுபார் - குவலயம்
நாற்றிசையும் அதிர
தேடிய தேகம் ஒன்றே - நடை நெஞ்சு
தீப்பொறிய பார்வை ஒன்றே
சாடிக் குதித்து முன்னே - முன்னேறித்
தாவியே செய்வதைப்பார்
(கோடி)
வெந்து புகைந்துருகும் - தொழிற்சாலை
சந்துகள் இருட்சூகை
பொந்துகளில் இருந்தே - தொழிலாளி
பூதம் புறப்பட்டதும்
நைந்து நொங்கினவே - சங்கிலிகள்
நாலாயிரம் வருடம்
வந்த பழங்கட்டுகள் - பொடிபட்டு
மண்ணில் புதைபட்டதே
செங்கொடி தான்பரப்பி - புதுமன்னன்
தெருக்களில் புகுந்தான்
தங்கரதத்தின் வலிமை - காட்டுதற்குச்
சடுதியில் முனைந்தான்
எங்கும் முறிந்தனவே - முதலாளி
ஈன்ற சட்ட திட்டங்கள்
பொங்கும் இடிமுழக்கி - தொழிலாளிப்
பூதம் உரைத்ததிவை
“யாவும் எனதுடைமை - புவிமிசை
யாவும் எனக்குரிமை
ஜீவப்பொருள் உணவு - பானம், உடை
தெருக்கள் மாளிகைகள்
கோவில்கள் கோபுரங்கள் - பாங்கு, பொருள்
கூட்டுக் களஞ்சியங்கள்
காவியம் ஓவியங்கள் - பூந்தோட்டம்
கவிகள் நாணயங்கள்
(யாவும்)
புத்தக சாலையுடன் - கல்லூரி
புதுநாடக மேடை
நத்துவண்டி வாகனம் - மியூசியம்
நாவாயுடன் பலவும்
இத்தசை மீதினிலே - இனிமேல்
யாவும் எனதுடைமை”
சத்தம் வெடித்ததுகேள் - தோழனே
சமதர்ம உலகில்
(கோடி)