articles

img

வாலிபர் இயக்கத் தியாகிகள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

வாலிபர் இயக்கத் தியாகிகள்

துருவ நட்சத்திரங்கள்

யாகம் என்ற வார்த்தையில் எத்தனை மகத்துவம்! பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, திருப்பூர் குமரன் போன்ற வீரர்கள் துருவ நட்சத்திரங்களாக ஒளிர்வதற்குக் காரணம் அவர்களின் தன்னலமற்ற தியாகமே. விடுதலைக்குப் பின் இளைஞர்களின் கனவுகள் கானல் நீரானதால், 1980-இல் உருவானது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இந்த இயக்கத்தின் தமிழக வரலாற்றில் பல இளம் உயிர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்த கதைகள் நெஞ்சை உருக்குபவை.

தமிழக வாலிபர் இயக்கத்தின் முதல் ரத்தசாட்சிகள்

சீராணம்பாளையம் வி.பழனிச்சாமி - சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் துடிப்பு மிக்க தோழர். திருப்பூர் இடுவாய் பஞ்சாயத்து விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்ததால், செங்கொடி இயக்கம் பரவுவதைத் தடுக்க 1979 ஜூன் 8-இல் சமூக விரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். குட்டி ஜெயப்பிரகாஷ்  - 1980 ஜனவரியில் மதுரையில் நடந்த தேர்தல் கலவரத்தில், காயமுற்ற இருவரைக் காப்பாற்ற முயன்ற இந்த நிராயுதபாணி இளைஞனை காவல்துறை சுட்டுக் கொன்றது. அருமனை பாபு மற்றும் செல்லையன்  - “ஊமையாய் வாழாதே! மோதி அழி அல்லது தியாகம் செய்” என்று முழங்கியவர்கள். மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து மதவெறிக் கூட்டத்தை எதிர்த்ததால், 1984 மே 10-இல் ஆர்.எஸ்.எஸ் கூலிப்படையால் பாபு வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் காக்க ஓடிவந்த செல்லையனும் அதே இடத்தில் சிதைக்கப்பட்டார்.

மக்களுக்காக  உயிர் நீத்தவர்கள்

மண்டபம் முத்து  - போதைப் பொருள் கடத்தும் சமூக விரோதிகளை எதிர்த்ததால், 1985 டிசம்பர் 5-இல் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

அரசூர் சேட்டு

- உள்ளாட்சித் தேர்தலில் “உயர்”சாதி வேட்பாளரை எதிர்த்து எளிய மனிதன் வெற்றி பெற்றதை சகிக்காத கூட்டம், அரசூர் கிராமத்தையே கொளுத்தியது. மக்களைக் காக்க எதிர்த்து நின்ற சேட்டு 1988 ஜனவரி 18-இல் வெட்டிக் கொல்லப்பட்டார். அரகநாடு சுதாகரன்  - தோட்டத் தொழிலாளிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தந்ததாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான நிலைபாட்டாலும், 1989 மார்ச் 12-இல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆதித்யவர்த்தன் ஸ்ரீ - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியையும் கள்ளச்சாராயத்தையும் எதிர்த்ததால், 1991 ஜனவரி 16-இல் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூர் ராஜு  - சென்னையில் வளர்ந்து வந்த ரவுடியிசத்திற்கு சவாலாக எழுந்து, மக்களைப் பாதுகாத்ததால், 1994 மார்ச் 12-இல் படுகொலை செய்யப்பட்டார்.

சமூகநீதி காக்க சேலம் சீனிவாசன்

 - விபச்சாரத்தையும் ரவுடியிசத்தையும் எதிர்த்ததால், கடத்தப்பட்டு கை-கால்கள் வெட்டப்பட்டு, கண்கள் குத்தப்பட்டு, தலை உடைக்கப்பட்டு, 1999 மார்ச் 23-இல் சேலத்தாம்பட்டி ஏரியில் வீசப்பட்டார். திருப்பூர் பன்னீர்செல்வம்  - தான் பணியாற்றும் நிறுவனத் தொழிலாளிகளுக்காகப் போராடியதால், 1998 மார்ச் 17-இல் கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது கொலை செய்யப்பட்டார். பட்டிதேவன்பட்டி பாண்டி  - பெரும்பான்மைச் சாதியில் பிறந்தும், சிறுபான்மை சாதி வேட்பாளரை ஆதரித்ததால், “சொந்த சாதிக்குத் துரோகம் செய்தவன்” என 1998 ஜனவரி 4-இல் கற்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அநீதியை எதிர்த்த அக்னிக் குஞ்சுகள் குமார் & ஆனந்தன்  

- 1999 ஜூன் 26-இல் உலக போதை எதிர்ப்பு தினத்தன்று, கள்ளச்சாராயக் கூட்டத்தை எதிர்த்ததால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கோவில்பட்டி அமல்ராஜ்  - பொதுப்பாதையை மறித்துச் சுவர் எழுப்பிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடியதால், 2001 மார்ச் 17-இல் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். கண்டமங்களம் சுரேஷ்  - உள்ளாட்சி அதிகாரிகள் சாலை போடுவதில் செய்த ஊழலைத் தட்டிக் கேட்டதால், 2002 ஜூலை 29-இல் கொலை செய்யப்பட்டார். சிறைக் கொட்டடியில்  உயிர் நீத்த கோபி”  - 1989 ஆகஸ்ட் 29-இல் வேலைநிறுத்தத்தின்போது தாக்குதல் நடந்து, பொய்வழக்கில் தலைமறைவான தொழிற்சங்கத் தலைவர்கள் பற்றிக் கூறுமாறு சித்ரவதை செய்யப்பட்டு, செப்டம்பர் 6-இல் சிறைச்சாலைக்குள் உயிரிழந்தார். கள்ளச்சாராயம், கந்து வட்டி, ரவுடித்தனம், மதவெறி, சாதிவெறி, ஊழல் இவற்றுக்கு எதிராகப் போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த இந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் இளைய தலைமுறையினரை ஈர்க்கும், மீண்டும் மீண்டும் வீரத்தின் வரலாறாகப் போதிக்கும்!