ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டம் 2021 பிப்ரவரி 22ல் துவங்கி மார்ச் 23 வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது. உலக அளவில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்த பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படவுள்ளன. முதல் இரண்டு நாள் கலந்து கொள்ளும் தலைவர்கள் கருத்துரையும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரச்சனைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிப்ரவரி 24ந் தேதி இலங்கையில் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றபிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வுள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிறுபான்மை மக்கள் இன, மொழி, பண்பாட்டு ரீதியாக இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட அநீதியே தொடர் மோதல்களுக்கும், உள்நாட்டுப் போருக்கும் இட்டுச் சென்றது. 2009ல் நடைபெற்ற இறுதிகட்டப்போரில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினரால் பாலியல் கொடுங்குற்றங்கள் இழைக்கப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் முழுமையும் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலநூறு இளைஞர்களின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆணையம் உருவாக்கப்பட்டும் உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள் அபகரிக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்களின் வாழ்வு சொல்லொண்ணா சோகத்தில் மூழ்கியுள்ளது.
புறக்கணிக்கப்படும் விசாரணைக்குழு அறிக்கைகள்
இலங்கையில் நடத்தப்பட்ட மேற்கண்ட கொடுமைகளை எதிர்த்து உலக அளவில் நடத்தப்பட்ட இயக்கங்களின் காரணமாக 2010மே மாதம் இலங்கை அரசினால் “கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு” அமைக்கப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையும் பெயரளவுக்கே நடந்தது. சாட்சியம் அளிக்க முன்வருபவர்கள் மிரட்டப்பட்டதாலும் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாதநிலையிலும் பெரும்பகுதியினர் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை. அந்த குழு நடத்தியஅரைகுறை விசாரணை அடிப்படையிலான சிபாரிசுகளைக் கூட இலங்கையிலிருந்த ராஜபக்சே அரசு செயல்படுத்த மறுத்து விட்டது.
இந்த பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களது முன்முயற்சியில் 2010 ஜூன் மாதத்தில் மூன்று சர்வதேச நிபுணர்களைக்கொண்ட விசாரணைக்குழு அமைக்கப் பட்டது. இக்குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையினை 2011 மார்ச் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012ம் ஆண்டு “இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை ஊக்குவித்தல்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்படி போர்க்குற்றங்களில் ஈடுபட்ட வர்களை தண்டிப்பது, தமிழ் மக்களது மறுவாழ்வு, மனித உரிமைகள் பாதுகாப்பு, ராணுவ முகாம்களை விலக்குவது, ஏற்கனவேநிறைவேற்றப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தில் உள்ளதற்கு மேலும் உரிமைகளை வழங்குவது, தமிழ் மக்களுடைய நிலங்களை மீண்டும் ஒப்படைப்பது, காணாமல் போன இளைஞர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தை செயல்படுத்த உரிய அவகாசம் வேண்டுமென இலங்கை அரசு இரண்டு முறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இழுத்தடித்த ராஜபக்சே அரசு
இறுதிப்போர் நடைபெற்று சற்றேறக்குறைய 12 ஆண்டுகள் முடியும் தருவாயிலும் இலங்கை அரசு தான் அமைத்த “கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க த்திற்கான குழு”வின் சிபாரிசுகளையோ, ஐ.நா.வால் அமைக்கப்பட்ட மனித உரிமை விசாரணைக்குழுவின் சிபாரிசுகளையோ அமல்படுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்தே வந்துள்ளது. இந்நிலையில் 2019ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள் மேலும் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 2015 அக்டோபர் 1ந் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து (30/1) இலங்கை அரசு விலகிக் கொள்வதாக மனித உரிமை கவுன்சில் கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தது. இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்சே இதற்கு முன்பிருந்த அரசு இலங்கைக்குதுரோகம் இழைத்துவிட்டது என்றும், இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளிலும், மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மனித உரிமைகள்ஆணையத்தில் ஒப்புதல் கொடுத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளதோடு இந்த வரலாற்று துரோகத்தைப் போக்குவதற்கு மேற்கண்ட தீர்மானத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் புதிய அறிக்கை
இந்த நிலைமைகள் குறித்தும், தொடர்ச்சியாக இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கடந்த ஜனவரி 27, 2021 அன்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தற்போது வரை நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகள் குறித்த விபரங்கள் விளக்கப் பட்டுள்ளன.இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சேக்களின் அரசு கடந்த காலங்களைப் போலவே மனித உரிமைகளை பறிக்கும்
நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. அரசாங்கம் துரித கதியில் ராணுவ மயமாக்கப்பட்டு வரும் நிலை, முக்கியமான அரசியல் உரிமை பாதுகாப்புகளை மீறும் நிலை, சிவில் சமூகத்தை அச்சுறுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் ரீதியான மக்களுக்கு இடையூறுகளை தொடர்வது போன்றவைகளை அறிக்கை பட்டியலிட்டுள்ளது. மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்திலான அரசின் நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் ஏற்கனவேபோர்க்குற்றங்களில் ஈடுபட்ட 28க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அரசு உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐ.நா. சபை அறிக்கையில், போர்க்குற்றங்கள் நிகழ்த்தியிருப்பதாகவும், மனித குலத்திற்கு எதிரான செயல்களை நிகழ்த்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த மூத்த ராணுவ அதிகாரிகள் இவ்விதம் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். ராணுவத் தளபதியாக ஆகஸ்ட் 2019ல்சவேந்திர செல்மா நியமனம் செய்யப்பட்டது மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் செயலாளராக கமல் குணரத்தினா நியமனம் செய்யப்பட்டது குறித்து இந்த அறிக்கை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளின்அதிகாரங்கள் பறிப்பு
ராஜபக்சே சகோதரர்களின் கைகளில் அரசு அதிகாரங்கள் முழுமையாக வந்தடைந்த பின்னர், அரசியல் சட்ட திருத்தங்களின் மூலம் அமைக்கப்பட்ட மாகாண அரசாங்கங்களின் அதிகாரங்கள் மேலும் மேலும் வெட்டி குறைக்கப்படுகின்றன. 1987ல் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி மாகாண சபைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஒற்றை ஆட்சி முறை திணிக்கப்படுகிறது. மேலும் தமிழ்மக்களின் உரிமைகள் மீதான மறைமுகமான பலகட்டத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.மேற்கண்ட சூழ்நிலையில் தான் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இலங்கைத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். நீண்ட நெடுங்காலமாக தாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு முடிவு ஏற்பட வேண்டும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள், பாலியல் கொடுமையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இணை நாடுகள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் ஒரு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல இலங்கை தமிழர் அமைப்புகள் மிகுந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை தங்களது நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுக்கு பாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 27ந் தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஐ.நா. அறிக்கையின் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறும் விவாதங்களின் முடிவு என்ன விளைவுகளைத் தரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் அதேசமயம் மேற்கு உலக வல்லரசு நாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பகடைக்காயாகவே பயன்படுத்தி வந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதி கட்ட போர் நடந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே மேற்கு உலக நாடுகள் கருத்துக்கள் தெரிவித்திருந்தன என்பதும்குறிப்பிடத்தக்கது. தற்போதும் கூட தங்களதுநலனை கருத்தில் கொண்டே மேற்கத்திய நாடுகள் இத்தகைய நிலைபாட்டை எடுத்துள்ள தாக கருத வேண்டியுள்ளது.எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தமிழர்கள் வாழ்வுக்கும், உரிமைக்கும் குரல் கொடுக்கும் அதே சமயத்தில்ஒவ்வொரு நாடும் அவர்களது சுயதேவை அடிப்படையில் சர்வதேச அமைப்புகளில் பங்களிப்பு ஆற்றுவார்கள் என்பதை மறுத்து விட முடியாது - கூடாது.
இந்திய அரசின் கடமை!
இந்நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு உரிய முறையில்தலையிட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வற்புறுத்த வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக, தமிழ்மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பது, பறிக்கப்பட்ட நிலங்களை அம்மக்களிடம் ஒப்படைப்பது, அனைத்து வகையான பாரபட்சங்களையும் கைவிடச் செய்வது, தமிழ் பிரதேசங்களிலிருந்து ராணுவ முகாம்களை திரும்பப் பெறுவது, மனித உரிமைகள் போர்க்குற்றங்களில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொள்வது, நிம்மதியான வாழ்க்கை உள்ளிட்டவைகளை உறுதி செய்ய வேண்டிய மிகப்பெரும் கடமை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளதை மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசு வற்புறுத்திட வேண்டும்.
சமீபத்தில் இந்திய அயல்துறை அமைச்சர்ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இலங்கைசென்று அந்நாட்டின் ஜனாதிபதி பிரதமர்உள்ளிட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை விபரங்கள் வெளியிடப்பட வில்லை. எனினும் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46வது கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்து பேசியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தப் பின்னணியில் தமிழ் மக்கள் இலங்கையில் சம உரிமையோடும், அந்தஸ்தோடும் வாழவும், போர் ஏற்படுத்திய வடுக்களிலிருந்து விடுப்பட்டு நிம்மதியான வாழ்வு மேற்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்நாட்டு அரசுக்கு உண்டு. இதற்கு அண்டை நாடு என்ற முறையிலும், சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும் ராஜீய ரீதியிலான அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்கும் ஜனநாயக குரல்கள் வலுப்பெற வேண்டும். விடுதலை பெற்றது முதல் இலங்கை ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் இனப் பாகுபாடு என்ற தீயை எரியவிட்டு குளிர் காய்ந்து வருகின்றனர் என்ற வரலாற்று உண்மையை சிங்கள - தமிழ் சகோதரர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய சூழலை உருவாக்குவது அவசியமாகும்.
கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)