சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேட்டி
சென்னை, ஜன. 7 - மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் சமரசமற்ற போராட்டத்தை தொடருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செவ்வாயன்று (ஜன.7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பெ. சண்முகம் கூறியதாவது: அதிகரிக்கும் வேலையின்மை ஒன்றிய பாஜக அரசின் நவ தாராளமயக் கொள்கையால் வேலையின்மை கடும் பிரச்சனையாக மாறியுள்ளது. நிரந்தர வேலை, அரசு வேலை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற வகையில் பாஜக அரசின் கொள்கை உள்ளது. கல்வித்துறையில், இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை திணிக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக அராஜகத்தின் உச்சம்
யுஜிசி விவாதத்திற்கு விட்டுள்ள அறிக்கை யில், பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு அமைப்பதில் மாநில அரசுக்கு உள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆளுநர், யுசிஜி, பல்கலைக்கழகம் என 3 நபர்களை நியமித்து தேடுதல் குழுவை அமைப்பார்கள் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு பல்கலைக் கழக சட்டத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழ கத்திற்கும் இது பொருந்தும் என்ற வகையில் தன்னிச்சையாக அறிவிப்பு செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அல்லாத பட்டம் நாட்டில் எங்கும் செல்லாது என்று அறிவித்திருப்பது அராஜகத்தின் உச்சம். எனவே, இந்த நகலை யுஜிசி உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். இதில் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம். ஒத்தக்கருத்துடைய பிற அமைப்புகளோடு பேசி, மாநில அதிகாரத்தை பறிக்கும், மாநில உரிமை மீது தாக்குதல் நடத்தும் அறிவிப்பை எதிர்த்து கூட்டுப்போராட்டத்திற்கு செல்வோம்.
வெளியேற வேண்டும் ஆளுநர்
ஆளுநர் மூலம், மாநில அரசுக்கு ஒன்றிய அரசு ஏராளமான குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சட்டமன்றத்தில், ஆளுநர் உரையாற்றாமல் சென்றதும், தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற ஒற்றைப் பிரச்சனையை எழுப்பி வெளிநடப்பு செய்வதை யும் வாடிக்கையாக ஆளுநர் வைத்துள்ளார். இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். போட்டி அரசாங்கத்தில் ஈடுபடும் ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுக! திமுக அரசு அளித்த பல வாக்குறுதிகளை யும், சொல்லாத பல திட்டங்களையும் நிறை வேற்றி உள்ளது. அதே நேரத்தில் முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, எஞ்சிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபா யும், கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாயும் தருவதாக கூறினார்கள். இதுபோன்ற திமுக அளித்த வாக்கு றுதிகளையே நிறைவேற்றக் கோருகிறோம். போராட்டங்களைத் தடுக்கும் காவல்துறை மக்கள் நலன் சார்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதை தமிழக காவல்துறை வாடிக்கையாக வைத்துள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங் களை தடுக்கும் நோக்கில் காவல்துறை செயல் படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு ஊர்வலம், செந்தொண்டர் அணிவகுப்புக்குக் கூட அனுமதி மறுத்துவிட்டது. இதை எவ்வாறு ஏற்க முடியும். அதையும் மீறித் தான் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற் றது. இதுபோன்று நடத்தும்போது வழக்கு போடுவது, நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்பது போன்றவை நடக்கிறது. போராடுகிற உரிமை யை மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி யுள்ளது. எனவே, போராடக் கூடாது என்ற காவல்துறையின் அணுகுமுறையை மாற்ற வேண்டும். ஜனநாயக உரிமையைப் பாது காக்க முதலமைச்சர் தலையிட வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்தும் வலியுறுத்த உள்ளோம்.
குடிமனை வழங்க விரிவான திட்டம்
1949-ஆம் ஆண்டிலிருந்து இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. ஆனால், 75 ஆண்டுகளைக் கடந்தும் குடிமனைப்பட்டா பிரச்சனை தீரவில்லை. குடிமனைப்பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும். ஏராளமான தரிசு நிலம் தமிழகத்தில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த குடிமனை வழங்குவது என்பதை அரசு நினைத்தால் சாத்தியமாக்கலாம். நீர்நிலை, அரசுப் புறம்போக்கு நிலங்களில் வாசிப்போரை நீதிமன்றத் தீர்ப்புகளை காட்டி வெளியேற்றுவ தால், அது அரசுக்கும் மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் பெல்ட் ஏரியா என்ற பெயரில் பட்டா தருவதை முற்றிலும் தடை செய்து வந்துள்ள னர். கிராமப்புறங்களில் தான் பட்டா வழங்கப் படுகிறது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குடிமனைப்பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண விரிவான திட்டத்தை (மாஸ்டர் பிளான்) அரசு உருவாக்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்போம் பட்டியலின மக்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் அந்த மக்களிடம் இல்லை. அரசுக்கு தேவை என்றால் சட்டத்தை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்துகிறது. ஆனால், மக்களுக்கு நிலம், பட்டா தர உருப்படியான எந்த நட வடிக்கையும் எடுக்காத போக்கு உள்ளது. நீதி மன்ற உத்தரவு, அரசாணையை நடைமுறைப் படுத்த அந்த நிலங்களை மீட்க வேண்டும். இதனை செய்யாவிடில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே நேரடியாக பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தை நடத்தும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.
மக்கள் நலனில் சமரசம் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பெ. சண்முகம் பதிலளித்தார். அதில் மேலும் அவர் கூறியதாவது: மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் அரசு எதிர் நிலை எடுக்கிறபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரி வித்து வருகிறது. வேலை நேரத்தை உயர்த்திய போது சிபிஎம் எடுத்த கடும் எதிர்ப்பின் விளை வாக அது திரும்பப் பெறப்பட்டது. சாம்சங் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யாத போது வலுவான போராட்டத்தை நடத்தினோம். மக்களைப் பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்ற பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் சமர சத்திற்கு இடமில்லை. குறிப்பாக, உழைப்பாளி மக்களின் நலனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும். மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை வரவேற்கும். கடுகளவும் உண்மையில்லை திமுக அரசை விமர்சித்துப் பேசியதன் காரண மாக செயலாளர் மாற்றப்பட்டார் என்பதில் கடு களவு கூட உண்மை இல்லை. கட்சியின் அமைப்பு நடைமுறை தெரியாமல் தவறாக சிலர் இவ்வாறு கூறுகின்றனர். காவல்துறை அனுமதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து, முதலமைச்சரை சந்திக்கும் போது எடுத்துக் கூறுவோம். இதில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்துவோம். சாம்சங் தொழிற்சங்க பதிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் இருப்பது தொழிலாளர் விரோத போக்குதான். இதை ஏற்க முடியாது. இதையும் முதலமைச்சரிடம் தெரிவிப்போம். சாம்சங் பிரச்சனையில் திமுகவின் அணுகு முறையை முற்றிலும் ஏற்கவில்லை. அதே நேரம், முதலமைச்சரின் தலையீடு காரணமாக சாம்சங் பிரச்சனையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பொருட்டு அவரை சந்தித்துப் பேசினோம்.
சிறப்புச் சட்டம் அவசியம்
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை முதலமைச்சர் நிராகரித்து விட்டார். தற்போதுள்ள சட்டங்களே போதும் என்றார். அதன்பிறகும் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே, சிறப்புச் சட்டம் கேட்டு அழுத்தம் கொடுத்து போராடிவருகிறோம். திமுகவுடன் உறவு தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, மதச் சார்பற்ற சக்திகளை ஒற்றுமைப்படுத்துவதில் திமுக முழுமையான பங்கு வகிக்கிறது. திமுக ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தமிழ கத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்த்த போராட்டத்தை வலிமையாக முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை. இந்த அரசியல் அம்சத்தை விட்டுவிட்டு, கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை மட்டும் வைத்து அர சியல் உறவைத் தீர்மானிக்க முடியாது. மாநில உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களில் திமுகவுடனான உறவு தொடரும். வாக்குவங்கியை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தவில்லை. மக்கள் நலன், உழைப்பாளி மக்கள் நலன் சார்ந்து தான் போராடுகிறது.
ஈரோடு இடைத்தேர்தல்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும்.இவ்வாறு பெ. சண்முகம் பதிலளித்தார். பேட்டியின் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகி யோர் உடனிருந்தனர்.