articles

img

முதலாளித்துவத்தின் கோர முகங்கள் டொனால்டு டிரம்ப்-கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸும் டிரம்ப்பும் நேரடி விவாதத்தின் போது தங்கள் எஜமானர்களின் கற்பனைகளை முன்வைத்தனர். கார்ப்பரேட் ஊடகங்கள் வழியாக 90 நிமிடங்களுக்கு வடிகட்டப்பட்ட அந்த விவாத அரங்கில், யார் வென்றாலும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு முக்கிய நன்மைகளைச் செய்ய முடியும் என்பது போல நடித்தனர்.

பல பில்லியன் டாலர் லாபம் கொழிக்கும் கார்ப்பரேட்களின் ஆதரவு கொண்ட 2024-க்கான அமெரிக்க ஜனாதிபதி வேட்பா ளர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 10 அன்று 67 மில்லியன் ஏபிசி - டிவி (ABC-TV) பார்வையா ளர்கள் முன் மோதிக் கொண்டனர். கருத்துக் கணிப்பா ளர்கள் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் 66-34 என்ற விகிதத்தில் விவாதத்தை “வென்றதாக” பதிவு செய்தனர். நியூயார்க் டைம்ஸின் உண்மை சரிபார்ப்பாளர்கள் குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் 33 முறை பொய் சொன்னதாகவும் உண்மை களை திரித்ததாகவும் கண்டறிந்தனர்; ஹாரிஸின் ஆதரவாளரான நியூயார்க் டைம்ஸ், அடுத்த நாள் ஹாரிஸ் ஒரே ஒரு சிறிய துல்லியமற்ற அறிக்கையை மட்டுமே வெளியிட்டதாகக் கூறிக்கொண்டது.

இருவருமே பொய் சொன்னார்கள்

ஆனால் உண்மையில், எல்லா முதலாளித்துவ தேர்தல்களிலும் உள்ளது போல, இரு வேட்பாளர்க ளும் விடுபட்டவற்றை மறைத்து பொய்தான் சொன் னார்கள். உண்மையில், யார் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், முதலாளித்துவ அரசின் விவகாரங்களை நிர்வகிக்கும் அடிப்படை முடிவுகள் தேசிய தொலைக் காட்சியில் அல்ல, மாறாக திரை மறைவில், நாட்டின் உயர்மட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து தங்கள் நலன்களை உறுதிப்படுத்தும் 7 டிரில்லியன் டாலர் பெறுமான - 4,000 பக்க அமெரிக்க ஆண்டு பட்ஜெட்டை வரைய வைக்கும் முடிவானது, கார்ப்ப ரேட் இயக்குநர்களின் அறைகளில்தான் எடுக்கப் படுகின்றது. 

இவற்றில் போர் இயந்திரம் அதாவது, அமெரிக்க ராணுவம் மற்றும் அமெரிக்க “தேசிய பாதுகாப்பு அரசு” க்கான ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு 1 டிரில்லியன் டாலர்; ஜனாதிபதியாக வருபவரின் கையெழுத்துக்களில்,  பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள், ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்க ளுக்கான சமூக திட்டங்களில் பெரும் வெட்டுக்கள், அதன்மூலம் ஆளும் வர்க்கத்தின் பெட்டகங்களுக்கு மிகப்பெரும் நிதி மடை மாற்றப்படுவது ஆகியவை அடங்கும்.

டிரில்லியன் டாலர் ஆதாயம்

இந்த வேட்பாளர்களுக்கு ஆகும் செலவு 10 பில்லி யன் டாலர் ஆகும். இது, வேட்பாளர்களின் கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு பல டிரில்லியன் டாலர் ஆதாயம் கிடைக்கும் என்பதுடன் ஒப்பிடும் போது, அது  வெறும் சிறு தொகையாகும். 2024 தேர்தல் செலவுகள், 2020 சாதனை அளவான 8 பில்லியன் டாலரை மிஞ்சியது. 

எல்லா தொழிலாளர் வர்க்க வேட்பாளர்களும் அனைத்து நடைமுறைக் காரணங்களை காட்டி விலக் கப்பட்டுள்ளனர். ஜில் ஸ்டீன் (கிரீன்ஸ்) மற்றும் கார்னல் வெஸ்ட் (“சுயேச்சை”) போன்ற “இடது சாரி” முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் கூட பெரும்பா லும் ஒரு வழியாகவோ மற்றொரு வழியாகவோ வாக்குச் சீட்டிலிருந்து நீக்கப்படுகிறார்கள். முதலாளித்து வத்தின் கீழ் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த நிலையில்தான் கமலா ஹாரிஸும் டிரம்பும் நடத்திய விவாதத்தில், தங்கள் எஜமானர்களின் கற் பனைகளை முன்வைத்தனர். கார்ப்பரேட் ஊடகங்கள் வழியாக 90 நிமிடங்களுக்கு வடிகட்டப்பட்டு, யார் வென்றாலும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு முக்கிய மாற்றங்களை செய்ய முடியும் என்பது போல நடித்தனர். உண்மையிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது.

கமலா ஹாரிசின்  குணம் தெரிந்தது

கமலா ஹாரிஸ், தமது விவாதத்தின் போது, அமெரிக்க இராணுவத்தின்  “கொல்லும்” ஆதிக்க சக்தியை பெருமைப்படுத்தினார்.

வல்லுநர்களால் விவாதத்திற்கு முன் ஐந்து  நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப் பட்ட சாமர்த்தியமான, நன்கு தயாரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், விவாதம் தொடங்குவதற்கு முன் அதிர்ச்சி யூட்டும் வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட மேடையைத் தாண்டி புதிதாக, பாசிச இனவெறி சொற்பொழிவு நிகழ்த்தும் டிரம்பிடம் கை குலுக்கச் சென்றார். “உல கின் மிகவும் கொடூரமான முதலாளித்துவ ஏகாதி பத்திய சக்தியை வழிநடத்த முழுமையாக தகுதி வாய்ந்த வலிமையான கருப்பினப் பெண் நான்; உங்கள் பொய் சொல்லும், இனவெறி பெருமிதம் கொண்ட ஆணவத்தை நசுக்க வந்துள்ளேன்” என்று சொல்வது போல், ஹாரிஸ் நடந்து கொண்டார்!

அமெரிக்க இராணுவ-தொழில் வளாகமான பெண்டகனிடம் யாரையும் “கொல்லும்” திறன் உள்ளது என்பது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட விவாதச் சொல். அந்த ஒற்றை வார்த்தையில் அவர், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை அச்சுறுத்தும் அல்லது கேள்வி கேட்கும் எந்த நாட்டின் மீதும் மரணம் மற்றும் அழிவைப் பொழிய, முடக்கும் தடைகளை விதிக்க, முடி வற்ற தலையீட்டு மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களை, ட்ரோன் போர்களை, சிறப்பு நடவடிக்கைப் போர்க ளை மற்றும் படுகொலைப் போர்களை நடத்த முழு மையாக தயாராக இருப்பதை தெளிவுபடுத்தினார்.

ஏகாதிபத்திய விசுவாசம்

கமலா ஹாரிஸ் உண்மையில் வலிமையான ஜனாதிபதியாக இருப்பேன் என வாக்குறுதி அளித்தார். தற்போது கிட்டத்தட்ட செயல் இழந்துவிட்ட தனது எஜமானர் ஜோ பைடனின் நடப்பு பாலஸ்தீன காசா மற்றும் மேற்குக்கரை இனப்படுகொலை கொள்கை களில் இருந்து ஒரு சிறிதளவு விலகி இருப்பதாகக் காட்டுமாறு முன்கூட்டியே கெஞ்சிய- தனது குறைந்து வரும் தாராளவாத/இடதுசாரி- ஆதரவாளர்களுக்கு அவர் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தார்.

ஹாரிஸ் மத்திய கிழக்கில் யூத இனவெறி இஸ்ரே லின் நடப்புப் போர்களுக்கும்; ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் நடக்கும் அமெரிக்காவின் மறைமுகப் போருக்கும்; மற்றும் அதற்கு அப்பாலும் தனது ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு முழுமையான விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். டிரில்லியன் டாலர் அமெரிக்க புதை படிம எரிபொருள் தொழிலின் லாபங்க ளுக்கும், மரணம் விளைவிக்கும் அவர்களின் கொடிய இயற்கை வளச் சுரண்டல் நடவடிக்கைகளுக்கும் எந்த தடையும் விதிக்க மாட்டேன் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். 

உண்மையில், உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கொண்ட - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை 2014 இல் கவிழ்த்த அமெரிக்க ஆதரவு பாசிச சக்திகள் தலை மையிலான ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னணியில் இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நோக்கம் - அந்த நேரத்தில் உலகின் முன்னணி புதை எரி பொருள் (நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வழி) சப்ளையராக இருந்த ரஷ்யாவுக்கு பதிலாக தனது தற்போதைய - மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிற பாறை யிடுக்கு இயற்கை எரிவாயு (ஷேல் கேஸ்) இருப்புகளை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்று, சந்தையை முழுமையாகக் கைப்பற்றுவது ஆகும். 

போர்வெறியை வெளிப்படுத்திய கமலா ஹாரிஸ், பின்னர் விவாதத்தின் போது அப்பட்டமான கள்ள மௌனத்தை தேர்ந்தெடுத்தார் - இஸ்ரேல் போர் இயந்திரத்திற்கு மேலும் 10 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த மௌனம், 110 நாடுகளில் உள்ள 1100 அமெரிக்க இராணுவ தளங்களை மேலும்  வலுப்படுத்தும் 1 டிரில்லியன் டாலர் அமெரிக்க இராணுவ ஆண்டு பட்ஜெட் குறித்த மௌனம், 43 நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கொடிய பொருளாதாரத் தடைகள் குறித்த மௌனம் - என  மௌனம்! மௌனம்! மௌனம்! 

அவர் தேர்ந்தெடுத்த “கொல்லும்” என்ற வார்த்தை, ஹாரிஸ் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியல் மற்றும் நடைமுறைக்கு புதியவர் அல்ல என்பதை முற்றிலும் தெளிவுபடுத்த போதுமானதாக இருந்தது.

வெறி பிடித்த டிரம்ப்

இதற்கிடையில் பம்பரமாக சுழலும், பெயர் சூட்டி அழைக்கும், தொடர்ந்து பொய் சொல்லும், சுய புகழ்ச்சி கொண்ட, இனவெறி கொண்ட டொனால்டு டிரம்ப், விவாதத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலை இந்த அல்லது அந்த சர்வதேச நபரு டனான தனது தனிப்பட்ட இராஜதந்திரம் அல்லது உறவுகளின் வாயிலாக நிலைநாட்ட முடியும் என்று வாதிட்டார். ஜனாதிபதியாக இருந்தபோது, ஆப்கா னிஸ்தானில் “தலிபான்களின் தலைவர்”, “அப்துல்” [அப்துல் கனி பராதர் என்ற பெயரை அவரால் நினைவு  கூர முடியவில்லை] -க்கு அவரது வீட்டின் புகைப் படத்தையே அனுப்பி, பேச்சுவார்த்தைகளில்,  அமெரிக்க நிபந்தனைகளை மறுத்தால் தலிபான் தலைவரின் வீடும் குடும்பமும் குண்டுவீச்சில் சின்னா பின்னமாக்கப்படும் என்று எச்சரிக்கை செய்ததாக, புதுச் சரடு ஒன்றை அவிழ்த்துவிட்டார். 

20 ஆண்டுகால - தோல்வியுற்ற - அமெரிக்கா வின் ஆப்கானிஸ்தான் போர் 2.6 டிரில்லியன் டாலர் செலவில் நடந்தது. போரின் உச்சக்கட்டத்தில் 1,20,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப் பட்டன - அவற்றில் பாதி பிளாக்வாட்டர் மற்றும் பிற தனியார்மயமாக்கப்பட்ட கூலிப்படை மற்றும்  போர்க்குற்றம் புரியும் படைகள். இவை அனைத்து க்கும் அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்டது. இவை யெல்லாம் டிரம்பின் அசட்டுத்தனமான விவாத உரை யில் இருந்து விடுபட்டன. 20 ஆண்டு காலப் போரில், நேரடி மற்றும் மறைமுகமாக 4,70,000 ஆப்கன்  பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 2,442 அமெரிக்க துருப்புக்கள் இறந்தனர் மற்றும் 20,666 பேர் காய மடைந்தனர் என்பதும் அவரது உரையில் குறிப்பி டப்படவில்லை. உலகின் மிகவும் ஏழ்மையான நாடுக ளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், மிகவும் சக்தி வாய்ந்த நாட்டை தோற்கடித்து மீண்டும் ‘வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து’ விடுதலை பெற்றது என்பதும் டிரம்பின் பேச்சில் இடம்பெறவில்லை.

டிரம்ப்போ, கமலா ஹாரிஸோ, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய நீண்ட போரின் நோக்கங்களில் ஒன்று, ரஷ்யாவின் எல்லையில் அணு ஆயுதங்களுடன் அமெரிக்க இராணுவத் தளங்க ளை நிறுவுவதும், ரஷ்யாவை எதிர்காலத்தில் துண்டாடு தலும்தான் என்பதை பார்வையாளர்களுக்கு தெரி விக்க விரும்பவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானின் மிகப் பெரும் அளவிலான லித்தியம் வளங்களை அமெரிக்கா கட்டுப்படுத்துவதும் குறிப்பிடப்பட வில்லை. 

அரசியல் பின்னடைவின் இழிவான காட்சி

மொத்தத்தில் 2024 செப்டம்பர் 10 அன்று நடை பெற்ற டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான விவாதம், கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க அரசியல் அமைப்பின் பிரதிபலிப்பாக அமைந்தது. டிரம்பின் பாசிச வெறி கொண்ட மனப் பிறழ்வுப் பேச்சுக்களும், போர்வெறி பிடித்த கமலா ஹாரிஸின் பிற்போக்குத்தனமான கருத்துக்களும், அமெரிக்க முதலாளித்துவத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்தின.

90 நிமிட விவாதம் முழுவதும், தொழிலாளர்களை பாதிக்கும் எந்த முக்கிய சமூகப் பிரச்சனைகளும் விவாதிக்கப்படவில்லை. சமத்துவமின்மை, வறுமை, வேலை இழப்பு, தேங்கிய ஊதியம் போன்றவை குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. கோவிட்-19 தொற்றால் இன்றும் கூட வாரம் 1,000 பேர் இறப்பதையும், தொற்று தொடர்ந்து பரவுவதையும் இரு வேட்பாளர்களும் குறிப்பிடவில்லை.

டிரம்ப் தனது ஆட்சியின் போது பங்குச் சந்தை உயர்வை “சிறந்த பொருளாதாரம்” என்று கூறினார். அதே நேரம், நாட்டில் நிலவும் ஆழமான அதிருப்தி யை குடியேற்றத் தொழிலாளர்கள் மீது திருப்பி விட முயன்றார். “சிறைகள், மனநல மருத்துவமனைகள், மனநோய் ஆசிரமங்களில் இருந்து குடியேறிகள் நாட்டிற்குள் பாய்ந்து வருகின்றனர்” என்று அவர் குரூரமான  பொய்களை அவிழ்த்துவிட்டார்.

ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் ஹைட்டி நாட்டின் தொழிலாளர்கள் குறித்து அவரது பிரச்சாரம் பரப்பிய பொய்யான வதந்தியை டிரம்ப் திரும்பத் திரும்ப இந்த விவாதத்திலும் குறிப்பிட்டார். “ஸ்பிரிங்ஃபீல்டுக்கு போகாதீர்கள். அங்கு வந்தவர்கள் நாய்களை சாப்பிடுகிறார்கள். பூனைகளை சாப்பிடுகிறார்கள். இங்கு வசிப்பவர்களின் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்” என்று அவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார்.

மறுபுறம் இஸ்ரேலின் இனப்படுகொலையை  நியாயப்படுத்திய கமலா ஹாரிஸ், ஈரானுக்கு எதிராக  போர் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுத்தார்: “இஸ்ரே லுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறனை நான் எப்போதும் வழங்குவேன். குறிப்பாக ஈரான்  மற்றும் அதன் பிரதிநிதிகள் இஸ்ரேலுக்கு ஏற் படுத்தும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பேன்” என்றார்.

சீன விவகாரத்தில் டிரம்பை வலதுசாரி கண் ணோட்டத்தில் இருந்து விமர்சித்தார் ஹாரிஸ். “சீனாவின் இராணுவத்தை நவீனமயமாக்க உதவும் வகையில் அமெரிக்கச் சிப்களை அவர்கள் விற்றனர்” என்று டிரம்ப் நிர்வாகத்தை குற்றம் சாட்டினார்.

அமெரிக்க மக்கள் எழ வேண்டும்

நவம்பர் 5 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ளன. கருத்துக் கணிப்புகளில் இரு வேட்பாளர்களும் விடாக் கண்டன் - கொடாக் கண்டன் என்ற நிலையில் உள்ளனர். தோல்வியுற்றால் தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டேன் என டிரம்ப் அறிவித்துள் ளார். குடியுரிமைச் சான்றிதழ் இல்லாத லட்சக்க ணக்கான - குறைந்த வருமானம் கொண்ட வாக்கா ளர்களை நீக்கும் நோக்கில் தற்போதைய ஆளும் குடியரசுக் கட்சியினர் புதிய சட்ட முன்வரைவை கொண்டு வந்துள்ளனர்.

மொத்தத்தில் இரு வேட்பாளர்களின் நேரடி விவாதம் அமெரிக்க முதலாளித்துவத்தின் கொடூர மான முகத்தை வெளிப்படுத்தியது. பிற்போக்குத் தனம், சர்வாதிகாரம், போர் ஆகியவற்றை எதிர்க்க, அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிச இயக்கத்தை அந்நாட்டு மக்கள் கட்டமைப்பது அவ சியமாகிறது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 முறை போட்டியிட்ட சோசலிஸ்ட் ஆக்சன் தேசிய செயலாளர் ஜெப்ரி மேக்ளர் மற்றும் வேர்ல்டு சோசலிஸ்ட் இணையதளத்தில் எழுத்தாளர்களில் ஒருவரான எரிக் லண்டன் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளின் சுருக்கம்  தொகுப்பு : எஸ்.பி.ஆர்