tamilnadu

img

உள் ஒதுக்கீடு சட்டரீதியானது; சமூகநீதியை உறுதி செய்ததும்! - ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட ரீதியானது மட்டுமல்ல; சமூக நீதியையும் உறுதி செய்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார். கோவை சிவானந்தா காலனியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் அதியமான் தலைமை ஏற்றார். சுயமரியாதை கழகத்தின் நேருதாஸ் வரவேற்றார். ஆதித்தமிழர் பேரவையின் கோவை ரவிக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் யு.கே.சிவஞானம், திராவிடர் தமிழர் கட்சியின் பேரறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக  பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்க உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கொமதேக  தலைவர் இ.ஆர்.ஈஸ்வரன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் சி.வெண்மணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றிய, ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: கடந்த 2009 ஆம் ஆண்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்ட பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு 3 சதவிகிதம் அமலாக்கப்பட்டு வருகிறது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டொன்றுக்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் ஆண்டு ஒன்றுக்கு 1050 மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள். குரூப் 1 போன்ற பணிகளில் ஆண்டொன்றுக்கு 60 பேர் சேர்ந்து வருகிறார்கள். ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள் ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றப்பட்டாலும் இப்பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றதால் அம்மாநிலங்களில் அமலாகவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலும், உள் ஒதுக்கீடு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமே அமலாகி வருகிறது. 

செங்கொடி இயக்கத்தின் வலுவான தலையீடு

உள்ஒதுக்கீடு கேட்டு அருந்ததிய சமூக மக்கள் போராடிய போது, அவர்களுக்கு ஆதரவாக நின்றதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மாநில அளவில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. இத்தகைய போராட்டத்துக்குப் பிறகே அப்போதைய திமுக அரசு நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்தது. 2008 ஆம் ஆண்டு ஒரு நபர் கமிஷன் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்கான தீர்ப்பை உறுதிப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வாதாடியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியாக பாடுபடும். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட ரீதியானது மட்டுமல்ல; சமூகநீதியையும் உறுதி செய்துள்ளது. பட்டியல்  சமூகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. 

பன்முகத்தன்மை கொண்டது

பட்டியல் சமூகம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டது அல்ல, பன்முகத்தன்மை கொண்டது என தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருக்கிறது. மேலும் “ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காண ஒரே மாதிரியான அளவுகோலை வைத்துக் கொள்வது சரியல்ல” என அண்ணல் அம்பேத்கர் சொன்னதை  தலைமை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும், குஜராத் மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்ட 92.4 சதவிகித கிராமங்களில் 79 சதவீத கிராமங்களில் உள்ள தலித் மக்களுக்கான கோவில்களில் மிகவும் பின் தங்கிய பிரிவைச் சார்ந்த தலித் மக்கள் நுழைய முடியாது” என்ற நிலையையும் நீதிபதி தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மாநில அரசு அமைத்த ஜனார்த்தனன் கமிஷன் தமிழகத்தில் தலித் மக்களுடைய கல்வி, வேலை வாய்ப்பு பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்வறிக்கையின்படி தலித் மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அருந்ததிய மக்களுக்கு கிடைத்த இடங்களை கேட்டால் மிகவும் துயரமானதாக இருக்கும். இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 58 ஆண்டுகளில் ஒரு அதிகாரி கூட அருந்ததியர் சமூகத்தில் இருந்து வரவில்லை என ஜனார்த்தனன் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டில் 32 தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் மட்டும்தான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இத்தகைய அறிக்கைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் தலித் சமூகம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல பன்முகத்தன்மை கொண்டது என தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.  எனவே, பட்டியலின சமூகங்களில் மிகவும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கலாம் எனவும், அத்தகைய ஒதுக்கீட்டை அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பட்டியலினத்தில் ஒரு சாதியை சேர்ப்பதோ, அல்லது பட்டியலில் உள்ள ஒரு சாதியை நீக்குவதோ, குடியரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் உள்ளது. உள்ஒதுக்கீடு என்பது பட்டியலில் ஒரு சாதியை சேர்ப்பதும் இல்லை, நீக்குவதும் இல்லை. உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்

உள்ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த தலித் மக்களின் ஒற்றுமையை பாதிக்கும் என சிலர் சொல்கிறார்கள். இது முரணாக இருக்கிறது. அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் தான் ஒற்றுமை பாதிக்கப்படுமே தவிர, கொடுப்பதால் ஒற்றுமை பாதித்து விடாது. மக்களிடையே சமத்துவம் இல்லாமல், மிகவும் ஏற்றத்தாழ்வான இடைவெளி இருந்தால் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.  ஒட்டுமொத்த வேலை வாய்ப்பில் வெறும்  2 சதவீதம் மட்டும்தான் அரசு சார்ந்த பணிகளில் உள்ளது. மற்ற 98 சதவிகிதம் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் தான். கடந்த 10 ஆண்டுகளில் பல பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய பாஜக அரசு தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அதானி குழுமத்துக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் போது அங்கு இட ஒதுக்கீடு என்பது இருக்காது. அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் அதிகரித்தால் அங்கு இட ஒதுக்கீடு இருக்காது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் டெலிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல், விஎஸ்என்எல் என இரண்டாகப் பிரித்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது. பிரித்த பிறகு, விஎஸ்என்எல் நிறுவனத்தை வாஜ்பாய் அரசு தனியாருக்கு விற்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது இட ஒதுக்கீட்டுக்கும் சமூக நீதிக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் எனில் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. 

சாதி வாரி கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.  சாதிகளின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொருளாதார பின்னணி உள்ளிட்ட கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என குரலெழுப்ப வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு துவங்கிய கருஞ்சட்டை பேரணி சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்.