games

img

விளையாட்டு...

சென்னை டெஸ்ட் அஸ்வின் சதம் அடித்து அசத்தல் சரிவிலிருந்து மீண்ட இந்தியா

வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டி களைக்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வியாழனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, வங்கதேசத்தின் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஹாசன் மகமூத் பந்துவீச்சில் கடுமையாக திணறியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் ஓரளவு தாக்குப்பிடிக்க, விராட் கோலி (6), ரோகித் சர்மா (6), கில் (0) ஆகியோர் சொற்ப  ரன்னில் ஹாசன் மகமூத் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பி னர். 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், ஜெய்ஸ்வால் - ரிஷப் பண்ட் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. இந்த  ஜோடியையும் ஹாசன் மகமூத் பிரித்து, ரிஷப் பண்டை (39)  பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த சில நிமிடங்களில் ஜெய்ஸ்வாலும் (56) ஆட்டமிழந்தார்.  அதன்பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல் (16) வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 200 ரன்களை கடப்பது சிரமம் என்ற நிலை இருந்தது. ஆனால் மூத்த ஆல்ரவுண்டர்களான அஸ்வின் - ஜடேஜா ஐபிஎல் மூலம் தங்களுக்கு நன்கு பழக்கமான சென்னை மைதானத்தில் நங்கூரமிட்டனர். இந்த ஜோடியை கழற்ற வங்கதேச வீரர்கள் படாதபாடுபட்டனர். எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் (102) சதமடித்து அசத்திய நிலையில், ஜடேஜா (86) அரை சதம் அடித்தார்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் - ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹாசன் மகமூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெள்ளியன்று காலை 9:30 மணியளவில் தொடர்ந்து 2ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

செஸ் ஒலிம்பியாட் - 2024 முதலிடத்தில் இந்தியா

45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது.  இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவிலிருந்து ஓபன் பிரிவில் (ஆடவர்) அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிக்ரிஷ்ணா பெந்தாலா ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில், மகளிர் பிரிவில் அணியில் ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் நடக்கும் 11 சுற்றுகளில் அதிக வெற்றியை ருசித்து, தரவரிசை யில் முதலிடம் பெறும் நாடு தங்கப் பதக்கத்தை வெல்லும் என்ற நிலையில், இதுவரை நடந்த 7 சுற்று போட்டிகளி லும் இந்தியாவின் ஓபன் அணி, மகளிர் அணி என இரண்டு அணிகளுமே தொடர் வெற்றியுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன. வியாழனன்று இரவு நடைபெற்ற 7ஆவது சுற்றில் இந்திய அணி 2.5-1.5  என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. அதே போல இந்திய மகளிர் அணி 7ஆவது சுற்றில் 3-1 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 11 சுற்றுகளில் 7 சுற்றுகளுக்கு தொடர் வெற்றி பெற்றுள்ள இந்தியா இன்னும் சில சுற்றுகளே உள்ள நிலையில், அதையும் வென்றால் தங்கம் வெல்வது உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.