tamilnadu

img

தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் ஆதரவு போராட்டம்

சென்னை, செப். 19 - சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரில் செயல்படும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேரம் பேசும் உரிமை மற்றும் பெரும்பான்மை சங்கத்துடன் நிர்வாகம் பேச வேண்டும், இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்தி செப்.9 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்வது, ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது என தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை, கம்பெனி நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து செயல்படுகிறது. தொழிற்சங்கத்தை பதிவு செய்யக் கூட மறுக்கிறது. வேலை நிறுத்தத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக செப்.18 அன்று சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்களை காவல்துறை கைது செய்தது. கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்கிறது.இந்திய சட்டங்களை மீறும் சாம்சங் நிறுவனத்திற்கு அழுத்தம் தர மறுக்கிறது. இந்த சூழலில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு அரசு தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் செப்.19 அன்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகம் முன்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். அதேபோல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணிமனைகள் தோறும் அதிகாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, தாம்பரம் பணிமனையிலும், பொதுச் செயலாளர் வி.தயானந்தம் சைதாப்பேட்டை பணிமனையிலும்,  3 பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி அயனாவரம் பணிமனையிலும் கலந்து கொண்டனர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி -1 சார்பில், அண்ணா சாலை எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்டோர் பேசினர்.