articles

img

கடந்த கால வாக்கிய அமைப்பில் சீத்தாராம் குறித்து எப்படி எழுதுவேன்? -பிரகாஷ் காரத்

கடந்த கால வாக்கிய அமைப்பின்கீழ் தோழர் சீத்தாராம் யெச்சூரி குறித்து எழுதுவது என்பது எனக்கு மிகுந்த சிரமத்தையும், வலியையும் கொடுக்கக்கூடிய விஷயமாகும். எங்கள் அரசியல் வாழ்வில் சுமார் ஐம்பதாண்டு காலம், கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தின்போதும் பல்வேறு கட்டங்களில் மிகவும் நெருக்கமாகவும் பின்னிப்பிணைந்தும் இருந்து வந்திருக்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் தோழமை 1974இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்திலும் அதன் பின்னர் கட்சியிலும் தொடர்ந்தது. நாங்கள் இருவரும் கட்சி மையத்தில் சுமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றியுள்ளோம். நான் கட்சி மையத்தின் பணிகளில் 1985இல் என்னை இணைத்துக்கொண்டேன். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சீத்தாராமும் என்னுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கட்சியில் எங்களின் சிந்தனையும் செயலும் அநேகமாக ஒரே பாதையிலேயே அமைந்திருந்தன. நாங்கள் இருவரும் 1984இல் மத்தியக் குழுவிற்கு நிரந்தர அழைப்பாளர்களாக மாறியிருந்தோம். பின்னர் 1985இல் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய 12ஆவது மாநாட்டில் மத்தியக் குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டோம். பின்னர் 1988இல் நடைபெற்ற கட்சியின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் மத்திய செயலகத்திற்கும், பின்னர் 1992இல் நடைபெற்ற 14ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டோம்.

சீத்தாராம், இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கத்திற்கும், பொதுவாக முற்போக்கான சிந்தனைக்கும், ஆற்றிய பங்களிப்புகள் குறித்தும் சரியான கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் அதிக நேரமும் விவாதமும் தேவைப்படும். அவற்றைக் கூறாது, கட்சியின் சித்தாந்தம், வேலைத்திட்டம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பங்களிப்புகள் குறித்து இதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சென்றடைவதில் சீத்தாராமின் திறன் மற்றும் அவர்களை ஒரு கூட்டு மேடையில் ஒன்றிணைப்பதில் அவரது திறமை பற்றி பிரதான ஊடகங்களில் சிறப்பாகவே கூறப்பட்டுள்ளது. அவரது செயல்பாடுகள் குறித்து இது உண்மையாக இருந்தாலும், கட்சி மற்றும் மார்க்சிசத்திற்கு அவர் ஆற்றிய சில முக்கியமான பங்களிப்புகளை நான் இங்கு விவரிக்க விரும்புகிறேன். கட்சி மையத்திலும் அரசியல் தலைமைக்குழுவிலும் மார்க்சிசம்-லெனினிசத்தின் அடிப்படையில் கட்சியின் சித்தாந்த நிலைப்பாடுகளை வடிவமைப்பதில் அவரது பங்கு தனிச்சிறப்பு வாய்ந்தவிதத்தில் அமைந்திருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, மார்க்சிசம்- லெனினிசத்தின் அடிப்படையின்கீழ் உறுதியுடன் நின்று வலது திருத்தல்வாதம் மற்றும் இடது அதிதீவிரவாதத்திற்கு எதிராக மிகவும் உறுதியாகச் செயல்பட்டது. 1968இல் கட்சியின் சித்தாந்தம் குறித்து பர்த்வான் பிளீனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை மற்றும் தீர்மானம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும். அந்த சமயத்தில் சர்வதேச கம்யூனிய இயக்கத்தில் ஏற்பட்ட சித்தாந்த பிரச்சனைகள் மற்றும் வேறுபாடுகளுக்கு மார்ச்சிச லெனினிசத்தைச் சரியான முறையில் பயன்படுத்தியதன் மூலம் கட்சி ஒரு சுயேச்சையான பாதையை வகுத்தது.  இந்த அணுகுமுறையைத்தான் சீத்தாராம் முன்னெடுத்துச் சென்றார்.

1987ஆம் ஆண்டில், மாஸ்கோவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழா கூட்டத்தில், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மிகயீல் கோர்பச்சேவ் உரை நிகழ்த்தினார். இந்த உரை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட குணாம்சம் குறித்தும் சமூக முரண்பாடுகள் குறித்தும் அதுவரை கடைப்பிடிக்கப்பட்டுவந்த மார்க்சிய ஆய்வுகள் குறித்தும் நாம் அதுநாள்வரையிலும் பின்பற்றிவந்த பல்வேறு பகுப்பாய்வுகளிலிருந்தும் விலகிச் செல்லக்கூடிய விதத்தில் அமைந்திருந்தன. கோர்பசேவ் இவ்வாறு மார்க்சியப் பாதையிலிருந்து விலகிச் சென்றதை 1988 மே மாதம் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விமர்சனம் செய்த முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அடுத்து, 1988 ஆகஸ்டில் மத்தியக் குழு மற்றொரு தீர்மானம் நிறைவேற்றியது. ‘சோவியத் யூனியனில் நடைபெற்றுள்ள சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகள்’ என்று தலைப்பிட்டுள்ள அந்தத் தீர்மானத்தில், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவாகவும், பெரெஸ்ட்ரோய்கா மற்றும் கிளாஸ்நாஸ்ட் என்ற பெயரில் அது ஏற்படுத்திவரும் ஆபத்துகள் குறித்தும் எச்சரித்தது.

மத்தியக்குழுவின் சார்பில் 1990 மே மாதத்தில் மூன்றாவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதில் ஏற்பட்ட சித்தாந்த அரிப்பு (ideological erosion) மற்றும் சிதைவுகள் (distortions) காரணமாகவே அங்கே ஆட்சி செய்துவந்த சோசலிச அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன என்று அந்தத் தீர்மானம் கூறியது. இந்தத் தீர்மானத்தை உருவாக்குவதில் சீத்தாராம் முக்கிய பங்காற்றினார். இந்தத் தீர்மானம்தான் பின்னர் ஒருங்கமைந்த தத்துவார்த்த ஆவணத்திற்கான அடித்தளமாக மாறியது.

1991இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சோசலிசத்திற்கு ஏற்பட்ட இந்த வரலாற்றுப் பின்னடைவைக் கட்சி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது, சோவியத் யூனியனுக்குப் பிந்தைய அதன் சித்தாந்த நிலைப்பாடுகளைப் பட்டியலிட வேண்டியிருந்தது. இது 1992இல் சென்னையில் நடந்த 14ஆவது மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. முழு அளவிலான விவாதங்களுக்குப் பிறகு, கட்சியின் அகில இந்திய மாநாட்டில் ‘சில தத்துவார்த்தப் பிரச்சினைகள் குறித்து’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தீர்மானத்தை முன்மொழிந்து, பின்னர் நடைபெற்ற விவாதங்களுக்குப் பின் தொகுப்புரை வழங்கியவர், தோழர் சீத்தாராம்தான். முதன்முறையாக, கட்சியின் சார்பில் ஒரு தத்துவார்த்த ஆவணம் தயாரிக்கப்பட்டு, அது அரசியல் தலைமைக்குழு சார்பாக, மத்திய செயலக உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்குமுன் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்போதெல்லாம் பொதுவாக இது தோழர் எம். பசவபுன்னையாவால் செய்யப்படக்கூடிய வேலையாகும். இப்போது தோழர் சீத்தாராம் இதனைச் செய்தார். இது சீத்தாராமை, ஒரு மார்க்சியக் கோட்பாட்டாளராக கட்சி அங்கீகரித்திருப்பதை நிரூபித்தது. அப்போதிருந்தே கட்சியின் சித்தாந்த விஷயங்களை நகர்த்தும் சக்தியாக அரசியல் தலைமைக்குழுவில் தோழர் சீத்தாராம் அங்கம் வகித்தார்.

இத்தகைய சித்தாந்த கவசத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1993 மே மாதம் கொல்கத்தாவில் காரல் மார்க்சின் 175ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கருத்தரங்கின் கருப்பொருள், ‘தற்கால உலக நிலைமையும் மார்க்சியத்தின் செல்லுபடியாகும் தன்மையும்’ (`Contemporary World Situation and Validity of Marxism’) என்பதாகும். சோவியத் யூனியனின் சிதைவு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச ஆட்சிகளின் சரிவுக்குப்பின்னர் மார்க்சிசத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நடைபெற்ற முதல் சர்வதேச கருத்தரங்கமாகும் இது. 21 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆவணங்களை சமர்ப்பித்தார்கள். கட்சியின் சர்வதேச துறைக்குத் தலைமை தாங்கிய சீத்தாராம், கட்சி சார்பாக ஆவணத்தைத் தயார் செய்திருந்தார். இந்தக் கருத்தரங்கின் அமைப்பாளராகவும் இருந்தார்.

பின்னர், சித்தாந்த விவகாரங்களில் நமது புரிதலை புதுப்பிக்க மத்தியக் குழு முடிவு செய்தபோது, ஒரு விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆவணத்தை உருவாக்கும் பொறுப்பு இயல்பாகவே சீத்தாராம் மீது விழுந்தது. இந்தத் தீர்மானம், ‘சில தத்துவார்த்த பிரச்சனைகள் மீதான தீர்மானம்’ (Resolution on Some Ideological Issues)  2012இல் கோழிக்கோட்டில் நடைபெற்ற கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டில் சீத்தாராம் அவர்களால் முன்மொழியப்பட்டு, முழுமையான விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாசிச இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராக மற்றொரு முக்கியமான சித்தாந்தப் போராட்டத்திற்கு சீத்தாராம் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார். இந்தப் போராட்டத்தில் சீத்தாராம் ஆற்றிய முக்கியப் பங்கை கீழ்க்கண்ட உதாரணம் எடுத்துக்காட்டும்.

1993இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவராக (சர்சங்சாலக்)  இருந்த, எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ஒரு புத்தகம் குறித்து சீத்தாராம் எழுதினார். கோல்வால்கர் 1939இல் வெளியிட்ட 77 பக்கம் கொண்டது அந்தப் புத்தகம்.  ‘நாம் அல்லது வரையறுத்தப்பட்ட நமது தேசம்’ (We or Our Nationhood Defined) என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். சீத்தாராம் 1939ஆம் ஆண்டின் அசல் பதிப்பின் நகலைப் பெற்று, ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற சித்தாந்தத்தினை நுணுகி ஆய்வுசெய்து அதன் பாசிச பரம்பரை மற்றும் சித்தாந்தக் கருத்துக்களைக் கூர்மையாக விமர்சனம் செய்தார். இது 1993 மார்ச் 12 அன்று ‘பிரண்ட்லைனி’ல் வெளியிடப்பட்டது, பின்னர் விரிவுபடுத்தப்பட்ட வடிவத்தில் ‘பிரண்ட்லைன்’ வெளியீடாக வெளியிடப்பட்டது. இந்த சிறு புத்தகத்தின் முக்கியத்துவத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதனை சமூகத்திற்குத் தோலுரித்துக் காட்டிவந்தவரும், சமீபத்தில் மறைந்தவருமான ஏ.ஜி. நூரணி நன்கு புரிந்துகொண்டார். அவர் இந்தப் புத்தகத்தை எழுதியமைக்காக சீத்தாராமை வெகுவாகப் பாராட்டினார். இந்துத்துவாவின் சித்தாந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வதில் உள்ள தொலைநோக்கு பார்வையும் தெளிவும்தான், மதச்சார்பின்மையைக் காக்கவும் இந்துத்துவா-வகுப்புவாத சக்திகளை எதிர்க்கவும் சீத்தாராமின் அரசியல் அர்ப்பணிப்பைத் தூண்டியது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அதன் போர்த்தந்திர பாதையை (strategic path) வகுத்து அளிப்பதில் அடிப்படை ஆவணமாக அமைவது அதன் கட்சித் திட்டம் (Programme) ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் கட்சித் திட்டத்தை 1964இல் தன்னுடைய 7ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றி இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான போர்த்தந்திரம் (strategy) எப்படிப்பட்டதாக இருந்திட வேண்டும் என்பதில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே நடைபெற்று வந்த ஒரு நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகவே இந்தத் திட்டம் உருவாகி இருந்தது. எனினும், சர்வதேச அளவிலும் நம் நாட்டிற்குள்ளேயும் நடைபெற்ற இரு பெரிய நிகழ்ச்சிப்போக்குகள் நம் கட்சித் திட்டத்தை மேம்படுத்த வேண்டிய தேவையை நமக்கு அளித்திருந்தது. முதலாவதாக, சர்வதேச அளவில் சோவியத் யூனியன் சிதைந்து சின்னபின்னமான பின்னர் ஏகாதிபத்திய மேலாதிக்கம் வலுவடைந்ததைத் தொடர்ந்து வர்க்க சக்திகளுக்கிடையிலான தொடர்புகளில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டாவதாக, இந்தியாவில் நவீன தாராளமயக் கொள்கை தொடங்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. 

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு வரைவு கட்சித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக (a draft Programme) தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தைக் கன்வீனர் (convenor)-ஆகக் கொண்டு ஒரு கட்சித் திட்ட ஆணையம் (a Programme Commission) கட்சியால் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் சர்வதேச நிதி மூலதனமும், நவீன தாராளமய முதலாளித்துவமும் கேந்திரமான பாத்திரம் வகிப்பதை சீத்தாராம் மிகத் தெளிவாக முன்வைத்தார். இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழுவில் நடைபெற்ற விவாதங்களிலும், பின்னர் அதனைத் தொடர்ந்து மத்தியக் குழுவில் நடைபெற்ற விவாதங்களிலும் சீத்தாராம் மிக முக்கியமான பங்கு வகித்தார். ஒரு கட்டத்தில், 1964 கட்சித் திட்டத்தில் இந்திய அரசின் குணாம்சம் (character of the Indian State) குறித்த வரையறையை (formulation) மேம்படுத்திய பதிப்பில் தக்கவைக்க நானும் சீத்தாராமும் உறுதியான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்திய அரசியலில் வலதுசாரி மாற்றமும், 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி அரசாங்கம் அமைந்ததும் புதிய அரசியல் சவால்களையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் இவற்றை எதிர்கொள்வதற்கான கட்சியின் அரசியல் நடைமுறை உத்திகளை (political-tactical line) வகுப்பதில் சீத்தாராம் முக்கிய பங்கு வகித்தார்.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவையில் பாஜக-வின் எண்ணிக்கை பெரும்பான்மைக்குக் குறைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் எதேச்சாதிகார-இந்துத்துவா சக்திகளிடமிருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடைமுறை உத்தியை வகுப்பதில் சீத்தாராம் ஈடுபட்டார்.

சீத்தாராமின் முன்முயற்சியின் பேரில் அரசியல் தலைமைக்குழு எடுத்த கடைசி முடிவானது, அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு இட்டுச்செல்லும் விதத்தில் கட்சியின் மாநாடுகள் மற்றும் ஆவணங்களின் தயாரிப்புப் பணிகள் என்பதாகும்.

அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தன்னுடைய நோயின் தன்மை கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்புப் பணிகளை எந்த அளவிற்குப் பாதிக்கக்கூடும் என்று தன் கவலையைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் எல்லாம் சுமுகமாக நடந்துகொண்டிருக்கிறது என்றும் நீங்கள் விரைவில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளிவருவீர்கள் என்றும் அவருக்கு உறுதி அளித்துவந்தேன். ஐயகோ!  அவ்வாறு நடக்காமல் போய்விட்டது.

சீத்தாராமின் பங்களிப்புகள் குறித்து விரிவான முறையில் மதிப்பிடுவது என்பது இப்போதைய சூழ்நிலையில் மிகவும் சிரமம். சீத்தாராம் யெச்சூரி, தோழர் லெனின் பயன்படுத்திவந்த ஒரு சொற்றொடரை மிகவும் விரும்பித் திரும்பத்திரும்பக் கூறிவந்தார். அதாவது, “துல்லியமான நிலைமைகளின் துல்லியமான பகுப்பாய்வு” (“concrete analysis of the concrete situation”) என்னும் சொற்றொடரை அவர் திரும்பத்திரும்பக் கூறிவந்தார். அந்த அடிப்படையில் மார்க்சிச-லெனினிசத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பினைப் பெற்று தன் வாழ்க்கையை முழுமையாகக் கட்சிக்கு அர்ப்பணித்திருந்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சுரண்டலற்ற சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக அவர் கொண்டிருந்த பார்வையை நாமும் உறுதியாகப் பற்றி நின்று செயல்பட்டு, கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்காளர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்திடுவோம்.