ருஷ்யப் புரட்சியின் வண்ணச் சித்திர வரலாறு என்னும் வரலாறு – சித்திர நூலை மிக மிகச் சிறப்பாக தோழர் ஸ்ரீரசா மானுட சமூகத்திற்கு தயாரித்துத் தந்துள்ளார். உண்மையான யுகப்புரட்சியான சோவியத் சோசலிசப் புரட்சியின் வரலாறை “மானும் கண்ட மகத்தான புரட்சி” என்ற பெயரில் இளையோரும் முதியோரும் கற்றுணரும் வகையில் வண்ணச் சித்திர வரலாறாக மிக அற்புதமாக ஆக்கி அளித்திருக்கும் தோழர் ஸ்ரீரசா உருவாக்கிய இந்நூல் காலம் வெளியீட்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்’ என்ற நூலிலிருந்தும், தோழர் இஷ்மத் பாஷாவின் ‘சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்னும் நூலிலிருந்தும் மற்றும் பல நூல்களிலிருந்தும் ஆதாரங்களை எடுத்து, சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் மிகவும் எளியமுறையில் சோவியத் யூனியன் வரலாறையும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வரலாறையும் வண்ணப்படங்களாக வடித்திருக்கிறார்.
அவை தீக்கதிரில் வெளிவந்தபோதே அதனைப் படித்துப் பாராட்டிய தோழர் ப.முருகன் உள்ளிட்ட பல தோழர்களுக்கும், நூலை அருமையாக அச்சிட்டுத் தந்துள்ள நியூஸ்மேன் அச்சகத் தோழர்களுக்கும், காலம் வெளியீட்டிற்கும் தோழர் ஸ்ரீரசா நன்றி தெரிவித்து இந்நூலை வெளிக்கொண்டுவந்திருக்கிறார். பக்கத்திற்கு மூன்று படங்கள் வீதம் 270 படக்கதைகள் வாயிலாக சோவியத் யூனியன் புரட்சி வரலாற்றை அளித்திருக்கும் இந்த வண்ணப்புத்தகம் ஒவ்வொரு தோழரின் வீடுகளையும் அலங்கரித்திட வேண்டியது அவசியமாகும். தோழர் என்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதுபோல விதை நெல் போல எழுதி உருவாக்கி தோழர் ஸ்ரீரசா இந்நூலைத் தந்திருக்கிறார். இதனை நாம் ஒவ்வொருவரின் வீடுகளிலும் அலங்கரித்திடும் விதத்தில் கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாகும்.