articles

img

தொழில்நுட்பப் புரட்சியை சமூகப் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றுவோம் - சுதீப் தத்தா ,அகில இந்திய செயலாளர், சிஐடியு

“உற்பத்திக் கருவிகளையும், அக்கருவி கள் மூலம் உற்பத்தி உறவுகளையும், உற்பத்தி உறவுகளின் மூலம் சமூகத்தின் முழு உறவுகளையும் தொடர்ந்து புரட்சிகரமாக மாற்றாமல்  முதலாளித்துவத்தால் இருக்க முடியாது”  

- கம்யூனிஸ்ட் அறிக்கை,

1848  21-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியின் மையப்பகுதியில் மிகவும் பிரபலமான, அதே நேரத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI)  தொழில்நுட்பம் நமது சமூகத்தில் மீண்டும் பல கேள்விகளை உருவாக்கி யுள்ளது.

1 தொழிற்புரட்சி

முதலாளித்துவம் என்பது வரம்பற்ற இலாபத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட அமைப்பாகும். அதாவது, போதிய ஊதியத்தைக் கொடுக்காமல் முதலாளிகளால் விழுங்கப்படும் தொழிலாளர்களின் ஊதியமற்ற உழைப்பின் மாபெரும் பங்கு. மேலும் மேலும் அதிக லாபம் வேண்டும் என்ற பேராசையில், மூலதனம் சந்தையை விரிவுபடுத்துகிறது; உற்பத்தியின் அளவை கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு அதிகரிக்கிறது.  தொழிற்சாலைகளில் கொண்டுவரப்பட்ட புதிய நவீன இயந்திரங்கள்தான் தொழிற்புரட்சிக்கு துவக்கமாக இருந்தன. இதுதான் தற்போதைய இந்த மாபெரும் புதிய தொழிற்புரட்சி உருவாகும் வகையில் உற்பத்தியை உயர்த்தியுள்ளது. மூலதனமும் தொழிலாளர் உழைப்பும் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ளன. இதனை எப்படிப் புரிந்து கொள்ளலாம் என்றால், மூலதனத்தையும் லாபத்தையும் மேலும் மேலும் அதிகப்படுத்துவதற்கான ஒரே வழி தொழிலாளர்களின் உழைப்பு சக்தி மட்டும்தான். இன்னொரு பக்கம், மூலதனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகளவு உபரி மதிப்பை அள்ளிக் குவிப்பதற்கு தொழிலாளர் சங்கம் தடையாக உள்ளது. எனவே மூலதனம் மனித உழைப்பிலிருந்து விடுபட விரும்புகிறது. இது தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை அதிகரித்து எதிர்ப்பை உருவாக்கும். அதே சமயம், தொழிலாளி வர்க்கம் உயிர் வாழ்வதற்கும், செழித்து வளர்வதற்கும் அதன் தேவையில் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவத்தில் மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையே மறக்க முடியாத நண்பன், ஏற்றுக்கொள்ளவே முடியாத எதிரி என இருவேறு விசித்திரமான உறவு வெளிப்படுகிறது.

 தானியங்கி முறை (ஆட்டோமேசன்)

முறை முதலாளித்துவத்துக்கு மூன்று வழிகளில் சேவை செய்கிறது: 1. மொத்த நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக் கிறது. இதன் மூலம் பொருள் உற்பத்தியாகும் அளவும், லாபமும் அதிகரிக்கிறது. 2. ஏகபோக நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தங்கள் உற்பத்தித் திறன் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவை குறைக்கிறது. இது அந்நிறுவனத்திற்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தருகிறது. 3. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கிய பிறகு நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகின்றன. இது வேலையற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். நிறுவனங்கள் தனது தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டி அழுத்தம் கொடுக்கும். எனவே, பொதுவான உற்பத்தித்திறன், தொழில்நுட்பத் தின் மூலமான உற்பத்தித்திறன் மற்றும் சுரண்டல் முறை ஆகியவை ஒட்டுமொத்தமாக வேலையின்மையை அதி கரிப்பதன் மூலம் லாபம் ஈட்டுகிறது. இதுதான் தானியங்கி உற்பத்தித் திறனின் மூன்று முக்கிய வெளிப்பாடுகளாகும்

மனித உழைப்பை துண்டிக்கும் முதலாளித்துவம் 

தானியங்கி உற்பத்தி முறை முதலாளித்துவத்திற்கு மிகவும் பிடித்தமானது. மனித உழைப்புடனான போட்டியில் இயந்திரம் வெற்றி பெற வேண்டும் என்பதே முதலாளித்துவத்தின் ஒரே இலக்காக இருந்தது. மனித உழைப்பின் மீது இயந்திரங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, இந்த மூலதனம் உற்பத்திக்காக மனிதனைப் பயன்படுத்திய இடங்களில் குதிரை, காற்று, நீர் மற்றும் நீராவி இயந்திரங்கள் அல்லது மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தத் துவங்கியது.  உயிரற்ற உந்துதல் சக்தி எனப்படும் இயந்திரங்கள் மனிதனின் உதவியுடனோ அல்லது மனிதனின் உதவி இல்லாமலோ செயல்படத் துவங்கின. ஆனால் உற்பத்தியைத் திட்டமிடுவதற்கும், பராமரிப்பு செய்யவும், உற்பத்தியான பொருட்களைச் சந்தைப்படுத்தவும், அதேபோல அனைத்து முடிவெடுக்கும் நடைமுறை களிலும் இருந்த மனித அறிவை மூலதனத்தால் அகற்ற முடியவில்லை. 

நெருக்கடியும் முதலாளித்துவமும்

 முதலாளித்துவத்திற்கே உரித்தான கட்டமைப்பு மனித உழைப்பு சக்தியை அவ்வப்போது நெருக்கடியில் தள்ளுகிறது. 2008-இல் உருவான உலக மந்தநிலை தற்போதைய நெருக்கடியின் அமைப்பு ரீதியான தன்மையை முக்கியமாக உருவாக்கியுள்ளது. பொதுவாக உலகளவில் பொருளாதார நெருக்கடி உருவாகும்போது முதலாளித்துவம் போர்களை உருவாக்கும். இது அனைவரும் அறிந்த உண்மை. இது போன்ற எந்தவொரு நெருக்கடியிலிருந்தும் வெளிவர முதலாளித்துவம் மூன்று வழிகளைக் கையாளுகிறது:  1. நெருக்கடி உருவாகும் காலகட்டத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் மற்றும் பொருளாதாரத்தின் புதிய கிளைகளை உருவாக்குவது. இந்த மாற்றத்தின்போது போட்டி உற்பத்தித்திறனை வேகப்படுத்துவது.  2. உற்பத்தித் திறனை வேகப்படுத்துவதன் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் மீதும் அவற்றின் தொழிலாளர்கள் மீதும் நெருக்கடியைத் தள்ளுவது.  3. மிக அதிகமான எண்ணிக்கையில் வேலையின்மையை உருவாக்குவது, ஊதியத்தை வெட்டுவது என தொழிலா ளர் வர்க்கத்தின் மீது அந்தச் சுமையைத் திணிப்பது.  முதலாளித்துவத்தின் இந்த மூன்று வழிகளையும் செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு இணைந்த ரோபோட்டிக்ஸ் துறையில் காணலாம். 

2 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உற்பத்தித் திறனை புதிய கோணத்திலும் அளவிலும் அதிகரிப்ப தற்கான கருவியாக இருந்தாலும், பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பைக் குறைப்பதாகவும் உள்ளது.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் இயந்திரங்கள் போன்ற சொத்துக்கள் மீது மேலும் பணத்தை முதலீடு செய்யாமலேயே உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து பணிநீக்கம், ஊதிய வெட்டு போன்ற நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஒரு பிரிவில் குறைந்த தொழிலாளர்கள் பணி செய்தாலும் நிறு வனத்தின் லாபம் உயரும் என்பது ஒரு சாதாரண கணிப்பு. 

தொழிற்துறை ரோபோக்களும் பயன்பாடுகளும் 

இந்தத் தொழில்நுட்பம் உற்பத்திக் கருவிகளில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?  ரோபோக்கள் என்பவை மனித உழைப்பை மாற்றக் கூடிய மற்றும் கணினி நிரல்களின் அறிவுறுத்தலின் கீழ் நேரடியாக இயங்கக்கூடிய இயந்திரங்கள் ஆகும். மனித உதவி இல்லாமல் உற்பத்திப் பணிகளைச் செய்ய ஒரு இயந்திரம் பயன்படுத்தப்பட்டால் அது ஒரு தொழில்துறை ரோபோ ஆகும்.  தொழில்துறை ரோபோக்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன:  1. உற்பத்தித் துறையில்: பொருட்களை ஒன்று சேர்த்தல் (அசெம்பிள்); பொருள் விநியோகம்;  பொருட்களைக் கையாளுதல்; வெல்டிங் போன்ற பணிகள்;  2. விவசாயத்தில்:  பயிர் அறுவடை; பராமரிப்புப் பணிகள் 3. உட்கட்டமைப்புத் துறையில்:  மின் உற்பத்தி நிலையங்கள்; மின் பகிர்மானம்; பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள்; கட்டமைப்புகளின் ஆய்வு; உபகர ணங்கள் பராமரிப்பு - என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள முடியும். இணையத்தின் வளர்ச்சியுடன், “பொருள்களின் இணையம்” (Internet of Things) என்ற புதிய தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. இதன் மூலம் இயந்திரங்களும் உப கரணங்களும் இணையத்துடன் இணைக்கப்படுகின்றன. இதனால் முழுச் செயல்முறையையும் தொலைவில் இருந்தே கட்டுப்படுத்த முடிகிறது. 

செயற்கை நுண்ணறிவும் இயந்திரமும் 

இங்கேதான் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழிமுறைகளில் மட்டும் செயல்படாமல், புதிய சூழ்நிலைகளில் அனுபவங்கள் மூலம் மேலும் புதிய திட்டங்கள் மற்றும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளும் இயந்திரமாக உள்ளது. இது ஒரு தனித்துவமான அமைப்பை உருவாக்குகிறது - அங்கு முன்-திட்டமிடப்பட்ட வழிமுறைகளில் மட்டுமல்லாமல், தானாகவே எடுக்கப்படும் முடிவுகளும் இருக்கும். 

3செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தொழிலாளர் வாழ்வும் 

செயற்கை நுண்ணறிவு எனும் - அனைத்தையும் கற்றுக் கொண்ட இயந்திரமயத்தின்  வரவு தொழில்துறை யில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெரிய அளவு உழைப்பைச் செலுத்தாமலே தானியங்கி  முறைகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்  ளது. மனிதர்களை விட பல மடங்கு வேகமாக தவறு- திருத்த முறையில் கற்றுக்கொள்ளும் இந்த தொழில் நுட்பம், உழைப்புச் செயல்முறையில் வரிசைக்கிரமமாக கற்றுக் கொண்டு, புரிந்துகொண்டு செயல்படுதலின் தேவையையே குறைத்துள்ளது.  மென்பொருள் உருவாக்கத் துறையில், தரவு அறி வியல் பணிகள் பல சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தானியங்கி இயந்திரக் கற்றல் கருவிகளால் செயல்படுத்தப் படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், தொழிலாளர்களே தங்கள் வேலையை தானியக்கமயமாக்கிக் கொள்கின்ற னர். இது தொழில்துறையில் ஒரு முக்கியமான திருப்பு முனையாகும். 

ரோபோக்கள் சோர்வடையவில்லை

உற்பத்தித் துறையில் ஏற்கெனவே இரண்டு ரோபோக்களுக்கு இடையே ஒரு மனிதன் வேலை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ரோபோக்களுக்கு ஓய்வு தேவையில்லை, சோர்வடைவதில்லை, தொடர்ந்து வேலை  செய்ய முடியும் என்பதால் வேலைச்சூழல் மிகவும் தீவிர மடைந்துள்ளது. இது தொழிலாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.  செயற்கை நுண்ணறிவு சுரங்கத் தொழிலிலும், மின்சாரத் துறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கங்களில் தொலைதூர ரோபோக்கள் ஆபத்தான பணிகளை மேற்கொள்கின்றன. மின்சார துறையில் ட்ரோன்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெறுகிறது. துணை மின் நிலையங்கள் மனித உதவியின்றி இயங்குகின்றன.  அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் துறையின் கணிப்புகளின்படி, வரும் காலங்களில் வேகமாக வளரும் துறைகளில் பெரும்பாலானவை சுகாதாரம் சார்ந்த வையாக இருக்கும். குறிப்பாக வீட்டு சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால் அலுவலகம் மற்றும் நிர்வாகத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையும்.  இருப்பினும், மனிதர்கள் செய்யும் எளிய கூட்டுப் பணிகளைக்கூட செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை. உதாரணமாக, iRobot நிறுவனத்தின் Packbot வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய பயன் படுத்தப்படுகிறது. ஆனால் இது மிக விலையுயர்ந்தது, தானாக இயங்க முடியாதது, தொலைதூரத்திலிருந்து இயக்கப்பட வேண்டியது.  மனித உழைப்பின் மீதான தாக்கம் உற்பத்தித் திறனில் மனித உழைப்பின் மேன்மையை பல எடுத்துக்காட்டுகள் நிரூபிக்கின்றன. சாம்சங் இந்தியாவில் மனிதர்கள் 11 நொடிகளில் ஒரு குளிர்சாதனப் பெட்டியை தயாரிக்கும்போது, ரோபோக்கள் 20 வினாடிக்கும் மேல் எடுத்துக் கொள்கின்றன. மஹிந்திரா பொலிரோ தயாரிப்பில் மனிதர்கள் ரோபோக்களுடன் இணைந்து பணியாற்றும்போது வெறும் இரண்டு நிமிடங்களில் உற்பத்தி முடிகிறது.  ஆனால் தானியக்கவியலின் விரைவான வளர்ச்சி தொழிலாளர்களின் திறன்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுபவமுள்ள தொழிலாளர்களின் திறன்கள் தேவையற்றதாக்கப்படுகின்றன. புதிய தொழிலாளர்கள் முழு உற்பத்தி செயல்முறையையும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத் திட்டங்களும் தொழிலாளர் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன. 

30 கோடிப் பேரின் வேலை பறிபோகும்

உலகளவில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் கணிப்பின்படி, முப்பது கோடி முழுநேர தொழிலாளர்கள் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படுவர். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, உலகளவில் 40 சதவீத வேலைகள் தானியக்கமயமாக்கப்படும் ஆபத்தில் உள்ளன. வளர்ந்த நாடுகளில் இது 60 சதவீதமாக இருக்கும். மேலாண்மையிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துள்ளது. இது தொழிலாளர்களை மிக நுணுக்கமாக கண்காணிக்கும் அதிகாரத்தை முதலாளி களுக்கு வழங்கியுள்ளது. தொழிலாளர்களின் பேரம்பேசும் சக்தியும் குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் முன்னணி முதலாளித்துவ நாடுகளில் ரோபோக்களின் பயன்பாடு இரட்டிப்பாகியுள்ளது.  அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் ஒரு லட்சம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து, ஏழரை  லட்சத்துக்கும் மேற்பட்ட ரோபோக்களை பயன்படுத்து கின்றன. இந்த போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் வேலையிழப்பு, நிரந்தரமற்ற வேலை நிலை, சமத்துவ மின்மை, வேலைப்பளு மற்றும் ஊதிய வெட்டு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் தானியக்கம் காரணமாக தொழிலாளர்களின் வருமானம் 1.6% வரை குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பெறாத, கல்வி அல்லது தொழில் பயிற்சியில் ஈடுபடாத இளைஞர்களின் எண்ணிக்கை 20% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் வருமான சமத்துவ மின்மை கணிசமாக அதிகரித்துள்ளது.  4 செயற்கை நுண்ணறிவும் லாபமும்  மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டேரன் அசெமோக்ளு, தானியங்கு முறை உற்பத்தித்திறனை குறைந்த அளவிலேயே அதிகரிக்கிறது என்று விளக்குகிறார். இது பல துறைகளில் மனித உழைப்பை தேவையற்றதாக்கி, தொழிலாளர்கள் வேலை இழப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வைக்கிறது. இந்த வேலை இழப்புக்கு போதுமான இழப்பீடு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.  முன்னணி நிறுவனங்கள் தானியங்கு முறையில் இருந்து அதிக லாபம் பெறும் நோக்கத்தில், பொதுவான உற்பத்தித்திறன் வளர்ச்சியைக் குறைக்கின்றன. பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தைப் படுத்தல், கணக்கியல் அல்லது புதைபடிவ எரிபொருள் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மட்டுமே செயற்கை  நுண்ணறிவை பயன்படுத்துகின்றன. சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உற்பத்தியை அதி கரிப்பதற்காக அல்ல.  அசெமோக்ளு மேலும் கூறுகையில், அமெரிக்க அல்லது உலகளாவிய தொழில்நுட்பம் என்பது குறைந்த தொழிலாளர்களைக் கொண்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முடிவுகளால் வடிவமைக்கப்படுகிறது என்கிறார். இது முற்றிலும் வணிக நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கங் களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முதலீடுகள் குறைந் துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பன்னாட்டு நிறு வனங்களின் லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவும்  செலவு விவரங்களும்

செயற்கை நுண்ணறிவை இயக்கும் கணினிக்குத் தேவையான வன்பொருள் அமைப்புகளுக்கான செலவு, தரவு சேமிப்பு மற்றும் வலையமைப்பு போன்ற பிற  செலவுகளைச் சேர்க்காமலேயே மிக அதிகமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு அறிமுகம் நிலையான சொத்துக்களின் விலை குறைவுக்கு வழிவகுக்காது என்பது உறுதி. நிலையான சொத்துக்களின் காரணமாக பொதுவாக லாபம் தானாகவே உயராது. முதலாளித்துவமும் அதன் நெருக்கடிகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து உற்பத்தித்திறன் அதிகரிக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஏகபோக நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இதை உறுதிப்படுத்த வேலையின்மை அதிகரிக்கும் நிலையில் தொழிலாளர்கள் மீது மேலும் அதிக அழுத்தம் ஏற்படும். தொழிலாளர்கள் மீது தொடர்ந்து அதிக கட்டாய வேலைச்சுமை திணிக்கப்படும். முதலாளித்துவ அமைப்பால் அதிக உற்பத்தி, குறைந்த நுகர்வு, வாங்கும் சக்தி வீழ்ச்சி, லாப விகித குறைவு, இனப்பெருக்க நெருக்கடி உள்ளிட்ட அதன் அடிப்படை நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது. (தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முதல் குழந்தை வளர்ப்பு வரை) இவை அனைத்தும் மோசமடையும்.

தொழிலாளர்களின் முக்கியத்துவம்

முதலாளிகள் லாபம் ஈட்டுவதற்கு தொழிலாளர்களே முக்கிய ஆதாரமாகவும், முதலாளித்துவ அமைப்பில் உற்பத்திக்கான ஒரே உந்து சக்தியாகவும் இருக்கிறார்கள். இயந்திரங்களுடன் தொழிலாளர்களுக்கு இருக்கும் நீண்ட கால போட்டியானது, மனித சமுதாயத்தின் தற்போதைய மிகச் சிறந்த உற்பத்திப் பொருளான செயற்கை நுண்ண றிவுடன் போட்டியிடும்போது உச்சநிலையை அடையும்.

அனைவருக்குமான  தொழில்நுட்ப வளர்ச்சி

தனியார் சொத்துரிமை இல்லாத அல்லது உற்பத்தி அனைவருக்கும் பொதுவாக உள்ள சமூகத்தில் (சோசலிச சமூகம்) செயற்கை நுண்ணறிவு ஒரு பிரச்சனையல்ல. செயற்கை நுண்ணறிவுப் புரட்சி, மனித உழைப்பு மிக வேகமாக இயந்திரங்களால் மாற்றப்படும் காலகட்டத் திற்குள் நாம் நுழைந்து வருவதைக் காட்டுகிறது. மனிதகுலத்தின் படைப்பாற்றல் திறன் விரிவடையக் கூடிய காலமும், தொழிலாளர்களுக்கு அதிக ஓய்வு மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகளுடன் கூடிய சமத்துவ உலகமும் முதலாளித்துவ சமூகம் களையப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

சோசலிசமே மாற்று

தற்போதைய உற்பத்தித்திறன் வளர்ச்சி, பழமையான முதலாளித்துவ அமைப்புடன் இனி பொருந்தாது. இந்த தொழில்நுட்பப் புரட்சிக்கு சோசலிசமே பொருத்த மானது. அங்குதான் இந்த தொழில்நுட்பம் அனைவருக்கு மானதாக இருக்கும். இதனால் சோசலிசமே மாற்று என்பது  மீண்டும் வலுவான குரலாக எழுகிறது. வரவிருக்கும் நாட்கள் மிகவும் சவாலானவையாக இருக்கும். தொழி லாளி வர்க்கம் புதிய பாதைகளைக் கடக்க வேண்டும். இந்தச் சூழலில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவது ஒழுங்கமைக்கப் பட்ட தொழிலாளர் இயக்கத்தின் பொறுப்பாகும். கற்பனையான மாற்றம் அல்ல, அறிவியல் அடிப்படையிலான உண்மையான மாற்றம் தேவை. 

நன்றி :  தி வொர்க்கிங் கிளாஸ் தமிழில் : சேது சிவன்