articles

img

அவுட்சோர்சிங்கால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு - பி.சம்பத் ,மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

2024 ஜனவரி 3 முதல் 5 முடிய விழுப்புரத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு இன்றைய இந்திய, தமிழக அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஆகும். கடந்த 5 மாதங்களாக தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் கிளைகள், இடைக்குழுக்கள், மாவட்டக் குழுக்கள் மாநாடுகள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளன. இம்மாநாடுகளின் நிறைவாக “கட்சி காங்கிரஸ்” என அழைக்கப்படும் 24ஆவது அகில இந்திய மாநாடு 2024 ஏப்ரல் 2 முதல் 6 முடிய தமிழகத்தின் மதுரை மாநகரில் நடைபெற உள்ளது. 

மாநாடுகள் - ஒரு பார்வை  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல இந்தியாவில் செயல்படும் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளும் கூட மாநாடுகள் நடத்துகின்றன. அம்மாநாடுகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுகளுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கட்சியாகும். முதலாளித்துவக் கட்சிகளின் மாநாடுகளில் அவற்றின் தலைவர்கள் “உரைவீச்சு” நடத்துவார்கள். மாநாடு அரங்கில் குழுவிலிருக்கும் அக்கட்சிகளுடைய ஊழியர்களின் ஒரே கடமை அவ்வப்போது கரகோசம் எழுப்புவதும் தலைவர்களுக்கு வாழ்த்து முழக்கங்கள் எழுப்புவதும்தான். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநாடுகள் அத்தகையது அல்ல. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் மாநாடுகளில் தலைமை தாங்கும் கட்சி குழுக்களின் பொறுப்பு 3 ஆண்டு கால அரசியல் ஸ்தாபன பணிகளை அறிக்கையாக தொகுத்து வழங்குவதாகும். 

விமர்சனமும் சுயவிமர்சனமும்  

அவ்வாறு வழங்கப்படும் அறிக்கையின் மீது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை மட்டுமல்ல, தலைமை தாங்கும் கட்சி குழுக்களின் மீது நிறை/குறை பற்றி தங்களது விமர்சனங்களையும் முன் வைப்பார்கள். அப்போது மேடையின் அமர்ந்திருக்கும் கட்சியின் தலைமை தோழர்கள் தன்னடக்கத்துடன் அவ்விமர்சனங்களை கேட்டுக் கொண்டு இருப்பது மட்டுமல்ல, கிரகித்துக் கொண்டும் இருப்பார்கள். தங்கள் மீதான விமர்சனத்தில் நியாயம் இருந்தால் பின்னர் தங்களது தொகுப்புரையில் சுயவிமர்சனமாக அதை ஏற்றுக் கொள்வார்கள். இது தொழிலாளி வர்க்க இயக்கம் என்ற முறையில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரித்தான ஸ்தாபனப் பண்பாகும். இந்த விவாதங்கள் - தொகுப்புரையில் விமர்சனம் – சுய விமர்சனம் என்ற கம்யூனிஸ்ட் ஸ்தாபனக் கோட்பாடு அடிநாதமாக விளங்கும். தனிநபர்களின் செல்வாக்கைச் சார்ந்து செயல்படும் முதலாளித்துவக் கட்சிகளில் இப்பண்பை மருந்துக்குக் கூட காண முடியாது. 

கொள்கையை உருவாக்குவதில் அணிகள் பங்கேற்பு  

இது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அதன் கொள்கைகளை தீர்மானிப்பதில் கட்சி அணிகள் தீர்மானகரமான பங்கு வகிக்கிறார்கள். மார்க்சிச–லெனினிச அடிப்படையில் சிபிஐ(எம்) இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்குவதே கம்யூனிஸ்ட்கள் நடத்தும் போராட்டத்தின் பிரதான லட்சியமாகும்.   மக்கள் ஜனநாயக திட்டமும்  அதன் குறிக்கோள்களும்  அதற்கு முன்னதாக இந்திய மக்கள் இன்று சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் (உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உட்பட) அனைத்திற்கும் உடனடி சாத்தியமான ஒரு தீர்வும் இத்திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்கள் ஜனநாயக திட்டம் என்று அழைக்கப்படுகிறது.  தற்போதைய அரசியல் சூழல்  நாடு விடுதலை அடைந்து கடந்த 77 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஏகபோக முதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ–நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமும் நாட்டின் வாழ்நிலையும் எவ்வாறு சீரழிந்துள்ளன என்பதை விவரித்து அதற்கு மாற்றான செயல் திட்டத்தை சிபிஐ(எம்) நாட்டு மக்கள் முன் வைத்துள்ளது. 

வகுப்புவாத சக்திகளின் எழுச்சி  

இதோடு இடதுசாரிக் கட்சிகள் நாடுதழுவிய அளவில் பலமடையாத நிலையைப் பயன்படுத்தி மிக பிற்போக்கான பாசிசத் தன்மை வாய்ந்த வகுப்புவாத சக்திகள் (சங் பரிவார் கும்பல்) வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த சங்பரிவாரக் கும்பல் கடந்த பத்தரை ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அதிகாரத்தை தங்கள் கரங்களில் வைத்துள்ளது.   அரசியலமைப்பின்  மீதான தாக்குதல்  இந்திய ஆளும் வர்க்கத்தின் (முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்) கணிசமான பகுதியினர் தங்கள் அரசியல் விசுவாசத்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிஜேபிக்கு மாற்றிக் கொண்டுள்ளதையும் காணமுடிகிறது. இந்த பாசிசப் போக்குடைய வகுப்புவாதக் கும்பல் இந்துராஷ்டிரம் என்ற குறிக்கோளை அடைவதற்காகவும் கார்ப்பரேட், பெருமுதலாளிகளின் நலனை காக்கவும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாச்சித் தத்துவங்களைச் சிதைக்கிறது. இதற்காக மாமேதை அம்பேத்கர் மகத்தான பங்களிப்புடன் உருவான இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் பணியை அரங்கேற்றி வருகிறது. 

தற்போதைய செயல்திட்டம் 

சிபிஐ(எம்) திட்டத்தின் அடிப்படையில் பிரதான அபாயமாக உருவாகியுள்ள வகுப்புவாத சக்திகளை முறியடிக்கும் நோக்கத்துடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள் நடத்தி அவ்வப்போது நிலைகளுக்கு ஏற்ப நடைமுறை உத்திகளை உருவாக்குகின்றன. இந்த நடைமுறைக் கொள்கையை உருவாக்குவதற்கும் கட்சியின் அணிகளின் பங்கு பிரதானமானதாகும். 

மாநாட்டின் முக்கியத்துவம் 

ஆம், கட்சியின் மத்தியக்குழு உருவாக்கும் அரசியல் தீர்மானத்தை கட்சி அணிகளின் விவாதத்திற்காக சுற்றுக்கு விடும் ஒரே அரசியல் அமைப்பு கம்யூனிஸ்ட் இயக்கமே. அதுமட்டுமல்ல 24ஆவது அகில இந்திய மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் 23ஆவது அகில இந்திய மாநாடு தீர்மானத்தின் அமலாக்கம் குறித்த மத்தியக்குழுவின் அறிக்கையும் கட்சி அணிகளின் விவாதத்திற்கு வர உள்ளது. இந்த இரு ஆவணங்களும் கட்சி அணிகளின் கருத்தையும் திருத்தங்களையும் கணக்கில் எடுத்து 24ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும். அடுத்த 3 ஆண்டுகால அரசியல் செயல்பாடுகள் இந்த ஆவணங்களின் அடிப்படையாக அமையும். இத்தகு கொள்கை உருவாக்கத்தில் கட்சி அணிகள் பங்கேற்பது அவர்களின் கடமை சார்ந்த அம்சம் மட்டுமல்ல, அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். 

வரலாற்று அனுபவங்கள் 

இந்தியாவில் பாசிச வகுப்புவாத சக்திகளை முறியடிக்க நடத்தும் போராட்டத்தின் வெற்றி என்பது ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளுக்கு மாற்றாக இடதுசாரிகளால் முன்வைக்கப்படும் மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்துடன் இணைந்த ஒன்று என்பதை ஆழமாக நம் மனதில் பதிவு செய்ய வேண்டும். 1947இல் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் ஆளும் வர்க்கங்களின் சுரண்டல் கொள்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் இடதுசாரி இயக்கம் தேசம் தழுவிய அளவில் வலுவாக இல்லாத நிலையில் வகுப்புவாத சக்திகள் திசைதிருப்பி அணிதிரட்டினார்கள் என்பது வரலாறு. 

உலகளாவிய போக்குகள் 

1990களில் ஏற்பட்ட சோவியத் யூனியன் சிதைவு மற்றும் சோசலிச முகாமின் சரிவுக்குப் பிறகு உலகில் பல்வேறு முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய போக்கு ஏற்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளால் அதிருப்தி அடைந்த மக்களை திரட்டி தீவிர வலதுசாரிக் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளன என்பதை தற்போது பல்வேறு நாடுகளில் காணமுடிகிறது. 

இடதுசாரி வெற்றிகள் 

ஆனால் எங்கெல்லாம் இடதுசாரிகள் தீவிர முன் முயற்சிகள் மேற்கொண்டு முற்போக்கு ஜனநாயக சக்திகள் பலவற்றையும் அணி திரட்டி இடதுசாரி ஜனநாயக அணியாகப் போராடுகிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரிகள் செல்வாக்கு பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற முடிகிறது என்பதையும் காண முடிகிறது.  இலங்கை அனுபவம்  தென் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள இலங்கையும் இதற்கு உதாரணம். இலங்கையில் அனுர குமார திசாநாயக தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா என்ற இடதுசாரிக் கட்சி இதர இடதுசாரி மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணி திரட்டி “தேசிய மக்கள் சக்தி” என்ற பரந்த இடதுசாரி அணியை உருவாக்கியது. இந்த அணி கடந்த பல ஆண்டுகளாக ஆளும் வர்க்கங்களின் தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து வீரியமிக்க போராட்டங்களை நடத்தியது. மக்களின் அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாற்றுத் திட்டத்தையும் முன் வைத்தது. இதன் பலனாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் 3 1/2 சதவீதம் வாக்குகளை பெற்ற இந்த அணி இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 42 சதமான வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது. இதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதனினும் அதிகமாக வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்தில் மிக பெரும்பான்மையை பெற்றது. இந்தியாவில் உள்ள இடதுசாரி இயக்கங்களுக்கு இலங்கை, தென் அமெரிக்க அனுபவங்கள் உத்வேகம் ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. 

தமிழக சூழல் 

இந்திய அரசியல் சூழலை பிரதிபலிப்பதாகவே தமிழக அரசியல் சூழலும் உள்ளது. இம்மாநிலத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வந்துள்ள திமுக, அதிமுக கட்சிகள் அமலாக்கிய தாராளமய பொருளாதாரக் கொள்கை உருவாக்கியுள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி மக்களிடையே வகுப்புவாத, இனவெறி சக்திகள் ஊடுருவி வளர முயல்வதையும் இதில் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதையும் காண்கிறோம். திமுகவை பொறுத்தவரை வகுப்புவாத பாஜகவை உறுதிபட தற்போது எதிர்த்து வருவது வரவேற்கத்தக்கதே. இம்மாநிலத்தில் வகுப்பு வாதத்திற்கு எதிராக திமுகவுடன் இணைந்து சிபிஐ(எம்)மும் - இந்தியா என்ற பரந்த மதச்சார்பற்ற மேடையில் அங்கம் பெற்று ஒருங்கிணைந்த செயல்பாட்டை உத்தரவாதப்படுத்தியுள்ளது. ஆயினும் தமிழக அரசின் தாராளமயக் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இதோடு சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பலத்தை அதிகரிக்க வலுவான மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும். 

இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவோம்

இப்பின்னணியில் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தை மேற்கோள் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்:  “நமது முக்கிய கடமை பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதே ஆகும். இதற்கு வர்க்க வெகுஜன போராட்டங்களை வலுவாகவும் தீவிரமாகவும் நடக்குமளவில் மக்களை அணி திரட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேச்சையான வலிமையின் வளர்ச்சி தேவைப்படுகிறது”.  மேற்கண்ட கடமையை நெஞ்சில் நிறுத்தி செயலாற்றுவோம். சிபிஐ(எம்)-ஐ பலப்படுத்துவோம். இதர இடதுசாரி சக்திகளையும் வலுப்படுத்துவோம்.