தமிழ்நாட்டில் இருந்து நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உரோமப் பிரபுக்கள் அணிந்து மகிழ ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. பண்டைய தமிழக வாணிபத்தில் துணி முக்கியப் பொருளாய் இருந்துள்ளது. கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் சூதுபவள ஆபரணங்கள் தயாரித்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்ததற்கான ஆதாரங்கள் அதிகமாகவே கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1863 முதல் மேட்டுப்பாளையம் முதல் சென்னை வரை ரயில் இயக்கப்பட்டது மொத்த செல்வ, இயற்கை வளங்களை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கொண்டு செல்லப் பயன்பட்டது.
தமிழக ஜவுளித்துறையின் தற்போதைய நிலை
கோவை, திருப்பூர் பகுதியில் பருத்தி சாகுபடி அமோகமாய் விளைய மண்ணின் தன்மையும், தட்பவெப்ப நிலையும் பருத்தி உற்பத்திக்கு உறுதுணையாய் திகழ்ந்தன. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய தமிழகத்தின் மேற்குப் பகுதியில், பருத்தி/பாலியஸ்டர்/கலந்த நூல், ஓபன் எண்ட் நூல் மற்றும் பட்டு நூல் உற்பத்தி செய்யும் நூற்பாலைகள் அதிகம் உள்ளன. சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் நூல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கரூர் இந்தியாவின் முக்கிய வீட்டு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. ஈரோடு தென்னிந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த ஆயத்த தயாரிப்புகளுக்கான முக்கிய துணிச் சந்தையாகும். ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி யூனிட்டுகள் சென்னையில் நிறைய உள்ளன. மதுரை மற்றும் காஞ்சிபுரம் கைத்தறிப் புடவைகள் இந்தியா முழுவதும் ஏற்றுமதி/விற்பனை செய்யப் புகழ்பெற்றவை. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (LMW), உலகின் மூன்று பெரிய ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. பல ஜவுளி உதிரிபாக உற்பத்தியாளர்கள் கோயம்புத்தூரில் உள்ளனர், சிலர் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். ஒருகட்டத்தில் நூற்பாலைத் தொழில் பிரம்மாண்டமாக மாறி ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்ற பெயரை கோவைக்குப் பெற்றுத் தந்தது. திருப்பூர் நகரம் பின்னலாடை தொழில் மூலம் ரூ.50,000 கோடிக்கு மேல் வளர்ந்துள்ளது. ஈரோடு ஜவுளிச் சந்தை இந்தியாவில் 5-ஆம் இடத்தில் உள்ளது. கரூர் ரூ.6,000 கோடிக்கு மேலும், நாமக்கல், சேலம் டவல், சேலை உற்பத்தியில் முக்கியப் பங்கும் வகிக்கின்றன.
சார்புத் தொழில்களின் வளர்ச்சி
விவசாயம் பிரதான தொழிலாக இந்தப் பகுதிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை, திருப்பூரில் பருத்தி, தென்னை, இதர பயிர் சாகுபடி, நீலகிரியில் காப்பி, தேயிலை, நாமக்கல் கோழிப்பண்ணை, ஈரோட்டில் மஞ்சள், சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் கிழங்கு மற்றும் உணவு சார் பயிர்களும் முக்கியமானவை. குறிப்பாக கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, தென்னை நார், அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள், ஜவ்வரிசி அரவை ஆலைகள் என வேளாண் சார்ந்த தொழில்கள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து நாட்டின் சிறந்த பொறியியல் நிறுவனங்களும், வார்ப்படத் தொழிற்சாலைகளும், வேளாண் கருவிகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளும் வளர்ந்தன. மோட்டார் பம்புகளில் 40 சதவீதம், வெட்கிரைண்டர்களில் 80 சதவீதம் உற்பத்தி என ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி நேரடியாகவும், மறைமுகமாகவும் வருவாய் கிடைக்கும் அளவுக்குத் தொழில்கள் விரிவடைந்துள்ளன.
நெருக்கடியின் காரணங்கள்
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஜவுளித்துறையில் 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பும், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.16.7 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதியின் பங்கு ரூ.3.33 லட்சம் கோடியாகவும் உள்ளது. ஆனால் தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருளான பருத்தியை கார்ப்பரேட் ஊக வணிக ஏற்றுமதிக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதித்ததால், ஜவுளி உற்பத்தியில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது. குறிப்பாக, இந்தியாவின் போட்டி நாடுகளின் உற்பத்தித் திறன் அதிகரிப்பும், விலைக்குறைப்பும், தங்குதடையில்லாமல் இந்திய உள்நாட்டுச் சந்தைக்குள் இறக்குமதியாவதும் மேற்கு மாவட்டங்களின் ஜவுளி உற்பத்தித் துறையில் பெரும் ஆட்டம் காண வைத்துள்ளது. மாநில அரசின் மின் கட்டண உயர்வும், சொத்து வரி உயர்வும் கடும் பாதிப்பை உற்பத்தி நிறுவனங்களின் மீது உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசின் உயர் பணமதிப்பு நீக்கல் நடவடிக்கை, ஜிஎஸ்டி, திட்டமிடாத கொரோனா ஊரடங்கு, ஒன்றிய அரசின் ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கையின் தவறான நடவடிக்கைகளால் நெருக்கடியைச் சந்தித்த தொழில்துறை மேலும் கடும் பாதிப்பை நோக்கிச் சென்றுள்ளது.
தொழில் பாதுகாப்பில் கம்யூனிஸ்டுகளின் பங்கு
இந்த மாவட்டங்களில் இன்று வரை அரசின் கொள்கைகளால் பல தருணங்களில் தொழிலும், தொழிலாளர்களும் வஞ்சிக்கப்பட்டு நிலைகுலைந்தபோது, ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் மட்டுமே இத்தொழில் பாதுகாக்கப்பட்டு இன்றைய நிலைக்கு உயர்ந்துள்ளது. 1990களுக்குப் பின்பு புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கமும், சுங்கவரிப் பிரச்சினை, சி-பாரம் பிரச்சினை, சென்வாட் வரி வந்த போது மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூரில் 1995ல் பனியன் தொழில் பாதுகாப்பு மாநாட்டையும், சோமனூரில் விசைத்தறி பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தியது. குறிப்பாக 2000-2001ம் ஆண்டுகளில் கோழிப்பண்ணை பாதுகாப்பு மாநாடு, தென்னை மர விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக விசைத்தறி தொழில் பாதுகாப்பு மாநாடு, டிராபேக் குறைப்புக்கு எதிராக கண்டன பந்த் என அனைத்து வகையிலும் ஜவுளித் தொழில்களைப் பாதுகாக்கப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் பாரா 6.6ல், “தொழில் மற்றும் தொழிலாளர் துறையில் விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தியால் மட்டுமின்றி ஏகபோக நிறுவனங்களின் இறுக்கமான பிடி, அன்னிய மூலதன ஊடுருவல் அதிகரிப்பு, கிட்டத்தட்ட உற்பத்தியின் அனைத்து வடிவிலான ஆதிக்கம் ஆகியவற்றாலும் நமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஏகபோகங்களின் கையில் சொத்து குவிவதால், பொருளாதார வளர்ச்சி குலைக்கப்படுவதோடு, பரந்த அளவில் ஏற்றத்தாழ்வுகளும் வளர்கிறது” என்கிறது.
இதற்கு மாற்றாக
- கடன், கச்சாப்பொருள், நியாயமான விலை போன்றவற்றை அளிப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்யப்படும் - சந்தைவசதி செய்து தருவதிலும் உதவப்படும் - முன்னேறிய தொழில்நுட்பம் பெறவும், உற்பத்தித் திறன்களை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு நிதி மூலதனத்தின் தடையற்ற வருகை கட்டுப்படுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சொல்கிறது. அந்தப் பாதையில் உறுதியாக செல்வோம்.
அரசுகள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
1. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க
- பஞ்சு விலை மற்றும் பருத்தி நூல் விலையைச் சீராக வைத்திருப்பதற்கு நடவடிக்கை
- அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மீண்டும் பருத்தியை இணைத்தல்
- முன்பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து பஞ்சை நீக்குதல்
- தமிழ்நாடு பருத்தி கழகம் (டி.சி.ஐ) உருவாக்குதல்
2. தொழிலாளர் நலனுக்காக
- கேரளாவைப் போல் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை உறுதியாக அமல்படுத்துதல்
- குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 வழங்குதல்
- சம வேலைக்குச் சம ஊதியம் வழங்குதல்
- முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உறுதியாக அமல்படுத்துதல்
- அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஈ.எஸ்.ஐ., பி.எப்., கிடைப்பதை உத்திரவாதம் செய்தல்
இத்தகைய கோரிக்கைகளை முன்னெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது
மாநில மாநாடு விழுப்புரத்தில் சங்கமிக்கிறது.