தஞ்சாவூர், ஜன. 23- இலங்கையில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசியல் மாற்றத்தை இலங்கைத் தமிழர்கள் உணர்ந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ் எழுத்தாளர் ஷோபாசக்தியின் கருங்குயில் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா தஞ்சையில் பெசண்ட் அரங்கத்தில் புதன் அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் தஞ்சை மாநகரக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிம்பம் சாகுல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா. விஜயகுமார் தொடக்கவுரையாற்றினார். மக்கள் அதிகாரம் காளியப்பன், நூலை வெளியிட முனைவர் சாமி. சத்தியமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
புதிய சாதகமான அரசியல் சூழல்
விழாவில் சிறப்புரையாற்றிய ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஷோபாசக்தியின் கதைகள் சமகால அரசியல் சூழலை உணர்த்துபவை. இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கதையில், ஜேவிபியின் தலைவர்களில் ஒருவரை ராணுவத்தினருள் இருந்த ஒரு ஜேவிபி ஆதரவாளர் கொல்லும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இந்தக் கதையை அவர் 2022-இல் எழுதியிருந்தாலும், இன்று அந்த ஜேவிபி இயக்கம் இலங்கையின் ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசு, தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் இலங்கையின் முக்கிய தமிழ் பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தமிழன், ஈழநாடு போன்றவற்றில் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில், ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழ்க்கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் சமீபத்திய தேர்தலில், வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இன, மத, மொழி பேதமின்றி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அந்தக் கட்சி ஆட்சியினைப் பிடிக்கச் செய்தனர். ஜேவிபி இயக்கம் 1971இல் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது, இலங்கை ராணுவம் அவர்களை கடுமையாகத் தாக்கியது. அப்போது சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இன்று அந்த இயக்கம் இலங்கையின் ஆளும் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஜேவிபியின் அனுர திசாநாயக்க, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, “நாங்கள் அனைவருக்கும் சமமான, உள்ளடக்கிய அரசு (inclusive government) கொடுப்போம்; தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்போம்” என்று உறுதி அளித்தார். இத்தகைய புதிய அரசியல் சூழலை, இலங்கைத் தமிழர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இலக்கியத்தின் சக்தி மேலும், இலக்கியத்தின் சமூக-அரசியல் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், அமெரிக்காவின் கருப்பின அடிமைகளின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொணர்ந்த ‘Uncle Tom’s Cabin’ (அங்கிள் டாம்’ஸ் கேபின்) என்ற நூலுடன், ஷோபாசக்தியின் படைப்புகளை ஒப்பிட்டார். “இலக்கியம் மக்களை எழுச்சி கொள்ளச் செய்யும் சக்தி கொண்டது. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட வலிகளை, ஒடுக்குமுறைகளை மறந்துவிட முடியாது. இன்றும், யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தொகையை விட, கனடா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்கள் இனியாவது தங்கள் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு காணப் போகிறார்களா என்ற ஏக்கத்தில் வாழ்கின்றனர். இதனை உணர்ந்து, தமிழர்கள் ஒற்றுமையாக, புதிய அரசியல் சூழலைச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்,”என்றார் ஜி.ராமகிருஷ்ணன். நிகழ்ச்சி நிறைவாக, எழுத்தாளர் ஷோபாசக்தி உரையாற்றினார். தஞ்சை லாவணி கலைக்குழுவைச் சேர்ந்த கோ. ராஜேந்திரன் நன்றி கூறினார்.