நமது நாட்டின் மூன்று முதன்மையான தீமைகளாக சாதி பேதம், வர்க்க பேதம், மத பேதம் பரவியுள்ளதைக் காணலாம். இம்மூன்று தீமைகளும் இந்திய தேசம் முழுமைக்கும் குடிகொண்டிருக் கின்றன.
- சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர்.
சாதி என்கிற பிற்போக்கு நிறுவனம்
சாதி ஒரு பிற்போக்கான, ஜனநாயகமற்ற நிறுவனம். புனிதம், தீட்டு என்கிற எதிர்வுகளை மையமாகக்கொண்டு மேல் கீழ் என கட்டமைக்கப்பட்டுள்ள சாதியம் என்பது வெறும் கருத்துநிலையல்ல.இங்கு நிலவிய உற்பத்தி அமைப்பில் ஒருவரின் சாதி தான் அவர் எத்தகைய இடத்தில் இருக்கத்தக்கவர் என்பதை தீர்மானித்தது. இன்றும் அதன் மிச்சங்கள் நிறையவே தொடர்கின்றன.சாதி யும், தீண்டாமையும் பொருளாதாரஅடித் தளத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. அது மாற்றங்களுக்கு உள்ளாகும் போது சாதியின் கருத்துநிலை ஒடுக்கப்பட்டவரின் மீது சாதிய விதிகளை மீறியதாக வன்முறையை ஏவுகிறது. இறுக்கமான இந்த சாதியச் சட்டங்கள் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்து வதன் மூலமாகவே நிறைவேற்ற முடியும். மறு உற்பத்தி என்கிற மாபெரும் ஆற்றல் பெண்களி டமே இருக்கிறது. எனவே பெண்களே சாதி யின் கௌரவத்தைப் பாதுகாக்கக் கடமைப் பட்டவர்களாக நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். சாதியின் பொருளாதார, கலாச்சாரப் பண்பு களை புறமண இணையேற்புகள் நொடிப் பொழுதில் மீறுகின்றன. சாதியத்தின் ஜனநாயகமற்ற பண்புகளு டன் ஊர், உறவு என்று நிலைபெற்றுவிட்ட வாழ்க்கை முறை இந்த மீறல்களால் பதற்ற மடைகின்றன. ஒட்டுமொத்த சாதிக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்ட குற்றத்தை பெண்ணின் மீதும் அவளின் குடும்பத்தின் மீதும் சுமத்துகின்றன. பொருளியல் தளத்தில் வாழ்க்கைப்பாடு கள் தரும் அனுபவ அறிவைப் பெற்றவர்கள் இந்த புறமண இணையேற்பை சற்று கசப்பு டன் ஏற்றுக் கொள்ளும் வல்லமையைப் பெறு கிறார்கள். ஆனால் சாதியுடன் இறுக்கமாகப் பிணைக் கப்பட்டுள்ளதாக தங்களை உணர்கிற சிலருக்கு இருக்கிற ஒரே பரிகாரம் குற்றமிழைத் தவர் உயிர்ப்பலியாக வேண்டும் என்பதே. பெரும்பாலும் இணையரில் ஒருவர் அல்லது இருவரும், பெற்றோர், நண்பர்,சகோதரி, சகோ தரன் என எவர் உயிரையாவது காவு வாங்கி விட்டுத் தான் இயல்புக்கு திரும்புகிறது சாதி.
மறு உற்பத்தி என்கிற ஆற்றல்
முதலாளித்துவ ஜனநாயகச் சமூகம் வழங்கியிருக்கிற கல்வியும், பணியிடமும், பயணங்களும் பெண்களின் சுயதேர்வுகளுக் கான வாய்ப்புகளை அதிகரித்து வந்து கொண்டி ருக்கிற நிலையில் ஜனநாயகப் பண்புகளற்ற சாதி அதற்கு எதிர்த் திசையில் இயங்குகிறது. சாதி ஆணவக்குற்றங்கள் குடும்பத்தின ரால், நெருங்கிய உறவுகளால், சொந்தம் என் கிற சாதிக்காரர்களால் நிகழ்த்தப்படுகின்றன.அதோடு கொடுமை என்னவென்றால் இக்குற்றங்கள் பாசத்தின் வெளிப்பாடாகவும் சித்தரிக்கப்படுகிறது. குற்றவாளிகள் குடும்பத்திற்குள்ளேயே இருப்பதால், குற்றத்திற்கு எதிரான நீதி பெறும் நடவடிக்கைகள் பெரும் சவால் நிறைந்ததா கிறது. குற்றவாளிகளுக்கு எதிராக மட்டுமல்ல சாதி என்கிற ஒட்டு மொத்த நிறுவனத்திற்கு எதிராகவும் நீதிக்கான இப்போராட்டம் நடத்தப்படுகிறது. அறிவியல், புவியியல், பொருளியல், வான வியல், சுற்றுச்சூழலியல் குறித்த எந்த அறிவும் சாதிய மனநிலையுடன் தோற்றுத் தான் நிற்கிறது. இயற்கைக்கு நேர் எதிரான ஒன்றை மக்கள் இயற்கையாக நம்புகிற,பின்தொடர்கிற ஒன்றாக சாதி இருக்கிறது. எனவே தான் மனித மனங்களை பண்படுத்துகிற கல்வி, அரசியல், பண்பாட்டுச் செயல்பாடுகளோடு சட்டமும் அவசியத் தேவையாக இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சுயதேர்விற்கான உரிமைகளை வழங்குகிறது.அதனை உறுதிப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
நீதிமன்றங்கள்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றம் ரிட் மனு 26734 / 2014 மீது 23.02.2015 அன்று நீதிபதி கே. கண்ணன் அளித்துள்ள தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர், உறவினர்கள், அதிகாரப்பூர்வ மற்ற சமூகப் பஞ்சாயத்துகள் மூலம், தங்களின் உயிருக்கு அபாயம் இருப்பதாக அச்சத்துடன் தம்பதியர்களிடமிருந்து வருகிற புகார்களைப் பெற்றுக் கொள்வதற்கு, ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் தனிப்பிரிவு இருக்க வேண்டும். தம்பதியரில் எவரொருவர் தங்களுக்கு அபாயம் உள்ளதெனக் கருதும்பட்சத்தில் வயது வந்த தம்பதியரைப் பெற்றோரிடம் திருப்பி அனுப்ப காவல்துறை எந்த முயற்சியை யும் எடுக்கக்கூடாது. முழுமையான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தல் செய்கிறது. உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து திலீப்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில், • சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்பதற்கு பின்வரும் வழிகாட்டுதல் களை வழங்கியிருக்கிறது. • சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கிட சிறப்புப் பிரிவுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும். • 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தொலை பேசி இணைப்பை உருவாக்க வேண்டும். • சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எந்த காவல் எல்லையில் வருகிறார்களோ அவர்களுக்குப் பாதுகாப்பு தருவது அந்தக் காவல் நிலையத்தின் கடமை. • சாதி ஆணவப் படுகொலை என்ற தீமையை ஒழிக்கத் தேவையான நிதியை அரசு ஒதுக்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்புப் பிரிவுகளின் வசம் போதுமான நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். • தம்பதிகளுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்கவும், தேவையான இடங்களில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இந்த நிதியை சிறப்புப் பிரிவுகள் பயன்படுத்தப் படலாம் என்கிறது. இதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்ட தாக நீதிமன்றத்தில் அரசின் தரப்பில் தெரி விக்கப்பட்டது. ஆனால் அதன் செயல்பாடுகள் பெயரளவிற்கு கூட இல்லை. இப்படி ஒரு சிறப்புப் பிரிவு செயல்படுவது என்பது இரகசியமாகவே இருக்கிறது என்பதைத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற சாதி ஆணவப்படுகொலைகள் நிரூபிக்கின்றன.
இடது சாரிகளின் கோரிக்கை
இந்நிலையில் தான் சாதி ஆணவப்படு கொலைக்கு எதிரான தனிச்சட்டம் என்பது ஜனநாயகத்தை நேசிக்கிறவர்களின் குரலாக ஒலிக்கிறது. சாதி குறித்த கோட்பாடு ரீதியி லான புரிதலும், அதனை எதிர்த்த போரில் அறிவியல் அணுகுமுறையும் கொண்டு இயங்குகிற இடதுசாரிக் கட்சிகள் சாதியத்தின் கொடூர விளைவுகளுக்கு எதிராக வீரச்சமர் புரிந்து வருகின்றன.29.9.2015 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அப்போ தைய சட்டமன்றக் குழுவின் தலைவர் அ.சவுந்த ரராசன் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123 கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம்,கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” என்ற பெயரில் பேரவைச் செயலகத்தில் வழங்கியதும் இந்நேரத்தில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இத்தனை கோரிக்கைகளுக்கும், கள நிர்ப்பந்தங்களுக்கு பிறகும் சாதி ஆணவப்படு கொலைகளைத் தடுத்து நிறுத்தும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை நிராகரிப்பது சற்றும் பொருத்தமற்றது என்பதோடு பொறுப்பைத் தட்டிக்கழிப்பது என்பதாகவே பொருள்படும். நிலப்பரப்பில் விரிந்திருக்கிற வடபகுதி பகுத்தறிவில் குறுகி இருக்கிறது, நிலப்பரப்பில் குறுகியிருக்கிற தென்பகுதியோ பகுத்தறிவில் விசாலமானதாக இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் பெருமையுடன் குறிப்பிட்ட தென்பகுதியின் ஒரு மாநிலமான தமிழ்நாடு இன்று வட மாநிலங்களுக்குச் சற்றும் குறையாத அளவுக்கு சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறும் மாநிலமாக இருப்பது துயரமானது.
தனிச் சட்டம்
சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச் சட்டம் இல்லாததால் இக் குற்றங்கள் பதிவு செய்யப்படும் போதே நீர்த்துப் போய் விடுகின்றன. தேசிய குற்ற ஆணைய பதிவு விவரங்களில் “கௌரவக் கொலைகள்” என்று தரப்படும் எண்ணிக்கை களத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாததாக மிகக் குறை வாக இருக்கிறது. ஏற்கனவே தேசிய சட்ட ஆணையமும் தனிச்சட்டம் தேவை என்கிற பரிந்துரையை அளித்துள்ளது. ராஜஸ்தானில் சுய தேர்வு திருமண தம்பதிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தில் கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துக்கள், சாதி அடிப்படையிலான திரட்டல்கள், நிர்பந்தங்கள் ஆகியனவெல்லாம் தண்டனைக்கு உட்பட்டவை என்கிற வலுவான சட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை மட்டும் போதாது. சக்தி வாகினி (எ) ஒன்றிய அரசின் தீர்ப்பில் இன்னும் விரிவான வழிகாட்டல்கள் இடம் பெற்றுள்ளன. சாதி ஆணவக் கொலை களை நிகழ்த்துவதற்கான சூழலை ஏற்படுத்து பவர்கள் மீது சிறைத் தண்டனை, தண்டத் தொகை விதிப்பதற்கு வகை செய்வது, குற்ற வாளிகளில் கொலை செய்தவர்களை இ.பி.கோ 302-இன் படி தண்டிக்கப்படுவது, அதே போல் கொலை மற்றும் குற்றங்கள் திட்டமிடுகிற போது உடன் இருப்பவர்களும் கொலைக் குற்றவாளி யாகவே கருதப்படுவது. கொலைக்குப் பிறகு அல்லது துன்புறுத்த லுக்கு பிறகு வன்முறைகளுக்கு பிறகு அதனை புகழ்கிற அல்லது பொதுவெளியில் பகிரங்க மாக ஆதரிக்கிற நடவடிக்கைகளும் குற்றமாக கருதப்படுவது என்பதெல்லாம் அந்த தனி சட்டத்தின் வரையறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.அதோடு பாதிக்கப்பட்டவரின் மறுவாழ்வையும்,நிவாரணத்தையும் சிறப்புச் சட்டங்களே நிறைவேற்ற முடியும்.குற்றம் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய முன்தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்புச் சட்டங்களே வலியுறுத்த முடியும். இத்தகைய மறுக்க இயலாத காரணங் களால் தான் ஆணவப்படுகொலைகளுக்கு எதி ரான தனிச்சட்டத்தின் தேவையை எமது மாநில மாநாட்டின் போதும் எதிரொலிக்கிறோம். சாதி என்கிற பிற்போக்கு நிறுவனத்தோடு போரிடுவதற்கு ஒரு கருவியாக இச்சட்டம் பயன்பட வேண்டும்.சுயமரியாதை திருமணம் என்பதை சட்டமாக்கிய மாநிலத்தில் சுயதேர்வு திருமணத்தை பாதுகாத்திட சட்டம் இயற்றுவதற்கு ஏன் இந்த தயக்கம்.சமூக மாற்றம் ஒரு போதும் தேங்கி நிற்காது. அது களப்பலிகள் பலவற்றைக் கடந்து நிகழ்ந்தே தீரும் என்பதே இதுவரையிலுமான வரலாறு. சாதிய ஆணவப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட தமிழக அரசு இத்தகைய தன்மைகளுடன் கூடிய சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.