articles

img

பள்ளிப் பருவத்திலிருந்தே சமர் புரிந்த சமர் முகர்ஜி

பள்ளிப் பருவத்திலிருந்தே  சமர் புரிந்த சமர் முகர்ஜி

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த தோழர் சமர் முகர்ஜி 1913ஆம் ஆண்டு நவம்பர் 7இல் பிறந்தார். 1928ஆம் ஆண்டு சைமன் கமிஷன் வருகை கடும் எதிர்ப்பை சந்தித்த பொழுது 8ஆவது வகுப்பு படித்து கொண்டிருந்த சமர் முகர்ஜி அந்த போராட்டத்தில் குதித்தார். 1930ஆம் ஆண்டு காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்து ழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு தான் படித்த பள்ளி யில் சுமார் 100 நாட்கள் மாணவர்களின் வேலை நிறுத்தத்தை நடத்தினார். அதனால் பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டார். தனது 17ஆவது வயதிலேயே 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காந்தி-இர்வின் ஒப்பந்தம் அடிப்படையில்தான் விடுதலை செய்யப்பட்டார்.  

ஓடும் ரயிலிலிருந்து குதித்து...

ஹவுரா மாவட்டத்தில் இளம் வயதிலேயே பல்வேறு காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்த அவர் 1940ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். விரைவில் கட்சியின் முழுநேர ஊழியராகவும் ஆனார். டம் டம் பகுதியில் கட்சியை உருவாக்கிய அவர் 1943ஆம் ஆண்டு நடந்த ஒன்றுபட்ட கட்சியின் முதல் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் ரயிலில் பயணித்து கொண்டிருந்த அவரை காவல்துறையினர்  கைது செய்ய வந்த பொழுது ஓடும் ரயிலிலிருந்து குதித்து தப்பினார்.  அகதிகளிடையே கட்சி... 1953ஆம் ஆண்டு அவர் ஒன்றுபட்ட கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் இருந்த அகதிகளிடையே பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர்களின் நலன் பலவற்றை வென்றெடுத்த அதே சமயத்தில் அவர்களிடையே கட்சியையும் உருவாக்கினார். 1957ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வடக்கு ஹவுரா சட்டமன்ற தொகுதியில் அப்போதைய சபாநாயகரை தோற்கடித்தார்.  தோழர் சமர் முகர்ஜி சிறந்த எழுத்தாளர். திருத்தல்வாதத்துக்கு எதிராகவும் இடது சீர்குலைவுவாதத்துக்கு எதிராகவும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். விடுதலைக்கு முன்பும் பின்பும் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் அவர் சிறை அல்லது தலைமறைவு வாழ்வை எதிர்கொண்டார்.  

நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஒரு முறை சட்டமன்றத்துக்கும் மூன்று முறை நாடாளுமன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செயல்பட்டார்.  1966ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் 1978ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1992ஆம் ஆண்டு மத்திய கட்டுப்பாடுக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இறுதிவரை கட்சியின் மத்தியக் குழு சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.  சிஐடியு பொதுச்செயலாளர் 1983ஆம்முதல் 1991 வரை சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாகச் செயல்பட்டார். 1974ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் அவரது பங்கு அளப்பரியது. தனது வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையாகவும் கட்சிக்காக அர்ப்பணிப்புத் தன்மையுடனும்  வாழ்ந்தவர் தோழர் சமர் முகர்ஜி. அவர் வாழ்நாளில் பெரும்பான்மை காலம் கட்சி அலுவலகம் அல்லது கட்சியின் கம்யூனில்தான் வாழ்ந்தார். தனது 100ஆவது வயதில் 18.07.2013 அன்று காலமானார்.