articles

img

1920 அக்டோபர் 17

1920 அக்டோபர் 17 அன்று, சோவியத் யூனியனின் துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகராக அப்போதிருந்த தாஷ்கண்ட் நகரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதை அறிவிப்பதற்காக ஒரு கூட்டம் நடந்தது.  இந்தக் கூட்டத்தில் எம்.என். ராய், எவ்லின் டிரெண்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிட்டிங்கோவ், முகமது அலி, முகமது சஃபீக், மண்டயம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சார்யா (எம்பிபிடி ஆச்சார்யா) ஆகியோர் கலந்து கொண்டார்கள். கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார். துவக்க நிகழ்வு கூட்டத்தில், கம்யூனிஸ்ட் அகிலத்தால் பிரகடனம் செய்யப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுவது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் ‘இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருந்தக்கூடிய’  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தை வகுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது. எம்.என். ராய், 1920இல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாகப் பங்கேற்றிருந்தார்.  அபானி முகர்ஜியும், ஆச்சார்யாவும் கூட ஆலோசகர்கள்  என்னும் தகுதியுடன் காங்கிரசில் பங்கேற்றிருந்தார்கள்.  முகமது சஃபீக் பார்வையாளராகப் பங்கேற்றிருந்தார்.   

எவ்லின் ஓர் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் மற்றும்  எம்.என்.ராய் மனைவியுமாவார்.  ரோசா பிட்டிங்கோவ் ஒரு ரஷ்யக் கம்யூனிஸ்ட். இவர் அபானி முகர்ஜியைத் திருமணம் செய்திருந்தார். இக்குழுவில் இருந்த இந்தியர்கள் அனைவரும் இளைஞர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிந்திட, ஒரு புரட்சிகர இயக்கத்தை அல்லது ஆயுதப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான வழிவகைகளைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்தவர்கள். எம்.என். ராய், அபானி முகர்ஜி மண்டயம் பிரதிவாதி பயங்கரம் ஆச்சார்யா (எம்பிபிடி ஆச்சார்யா) ஆகிய அனைவரும் இந்த வகையினர்தான். முகமது சஃபீக் மற்றும்  முகமது அலி ஆகியோர் ‘முஹாஜிர்கள்’ (Muhajirs) ஆவார்கள். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட உதவி கோரும் குறிக்கோளுடன் தாஷ்கண்ட் சென்றிருந்தார்கள். மிகவும் துணிச்சல் மிகுந்த புரட்சியாளர்களான இவர்களின் பயணங்களும், வீரதீரச் செயல்களும் மற்றொரு சமயத்தில் சொல்லப்படும். தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதன் பின்னணியில், உலகத் தொழிலாளர் வர்க்கப் புரட்சி மற்றும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் குணாம்சங்களும் பிரிக்கமுடியாத விதத்தில் பின்னிப் பிணைந்துள்ளன. 1917இல் ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி, உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி நடைபெற்ற விதம் குறித்ததான செய்திகள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பே, வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியப் புரட்சியாளர்கள் மத்தியில், சகாப்தம் படைத்த சமூகப் புரட்சி, மிகவும் ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.

பெர்லினில் செயல்பட்டுவந்த சில புரட்சிக் குழுக்கள், மாஸ்கோவில் இருந்த போல்ஷ்விக்குகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தார்கள். வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (குழுவின் தலைவர்), பூபேந்திரநாத் தத், முகமது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் இக்குழுக்களில் இருந்தார்கள். அமெரிக்காவில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட கதார் கட்சியின் தலைவர்களும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். (ரஷ்யப் புரட்சியாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முயன்ற காமகட்ட மாரு நிகழ்வுக்குப் பின்னர், இவர்கள் மேற்கொண்ட கலகம் நசுக்கப்பட்டது) இந்தியாவிலிருந்து, 1920-21இல் ஒத்துழையாமை-கிலாபத் இயக்கம் நடைபெற்ற சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர விரும்பிய,  கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த எண்ணற்றவர்கள், ஆப்கானிஸ்தானத்திற்குச் சென்றார்கள். அங்கிருந்த பலர், தாஷ்கண்டிற்குச்  சென்றார்கள். இவ்வாறு சென்ற ‘முஹாஜிர்கள்’ சோவியத்  அதிகாரிகளால் நன்கு வரவேற்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர்கள் நடத்துகின்ற போராட்டத்திற்கு உதவி அளித்திடவும் தயாராக இருந்தார்கள்.   கம்யூனிஸ்ட் கட்சியுடனும், போல்ஷ்விக் புரட்சியாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டபின்னர், முஹாஜிர்களில் சிலர் கம்யூனிசத்தைத் தழுவினார்கள். இவர்களில் 25க்கும் மேற்பட்டவர்கள் மாஸ்கோவில் இருந்த கிழக்கின் உழைப்பாளர்களின் கம்யூனிஸ்ட் பல்கலைக் கழகம் (Communist University of the Toilers of the East), 1921இல் தொடங்கப்பட்டபோது, அதற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

எம்.என். ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தில் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தாஷ்கண்டில் இருந்த மத்திய ஆசிய பீரோவிற்குத் தங்களின் பிரதிநிதியாக கம்யூனிஸ்ட் அகிலம் அவரை அனுப்பி வைத்தது.  இந்த தகுதியின் அடிப்படையில்தான் எம்.என்.ராய், முஹாஜிர்கள் மத்தியில் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டார். இவர்களில் பலர், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள். உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆரம்பத்தில் சிறு குழுக்களாகச் செயல்பட்ட புரட்சியாளர்களால்தான் அமைக்கப்பட்டன. சீனாவில், 1921இல் ஷாங்காயில் 13 பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டத்தில் அமைக்கப்பட்டது. பிரான்சில் வாழ்ந்து வந்த இந்தோ-சைனாவைச் சேர்ந்தவர்களால் (அப்போது இந்தோ-சைனா எனப்பட்ட இன்றைய வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் பகுதிகள் பிரான்சின் காலனியாட்சியின் கீழ் இருந்தது) ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மார்க்சியத்தை முழுமையாகத் தழுவிக்கொண்டிருந்தார்கள். தாஷ்கண்டில் கம்யூனிஸ்ட் குழுக்களின் பதிவேடுகள், அங்கே இரு கூட்டங்கள் நடந்ததாகக் காட்டுகின்றன. 1920 டிசம்பர் 15 அன்று நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பேடு, கட்சிக்குள் மூன்று பேர் பரீட்சார்த்த உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று காட்டுகிறது. அப்துல் ஆதர் சேஹ்ராஜ், மசூத் அலி ஷா மற்றும் அக்பர் ஷா (சலீம்) ஆகியோரே இம்மூவருமாவார்கள். ஒரு பரீட்சார்த்த உறுப்பினர் என்பவர் கட்சியில் முழு உறுப்பினராவதற்காக மூன்று மாத காலத்திற்கு தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்.

அந்த சமயத்தில், தாஷ்கண்டில் இயங்கிவந்த இந்தியப் புரட்சிக் குழுவில் பிரதானமாக முஹாஜிர்களும், வெளிநாட்டிலிருந்து செயல்பட்ட இந்தியப் புரட்சியாளர்களுமே இருந்தார்கள். இவர்களிலிருந்துதான் மாஸ்கோவில் இருந்த கிழக்கின் உழைப்பாளர்களின் கம்யூனிஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட நபர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். பெர்லினில் செயல்பட்டுவந்த வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா தலைமையிலான புரட்சிக் குழுவினர், கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையைச் சந்தித்திட,  1921இல் மாஸ்கோ போய்ச் சேர்ந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடவேண்டிய ஒரு விஷயமாகும். அவர்களின் சிந்தனையோட்டம் எப்படியிருந்தது என்றால், இந்தியா முதலில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதன்பின்னர் அங்கே கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும். அவர்கள், நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியை விரும்பினார்கள். எம்.என்.ராய் மற்றும் அவருடைய குழுவினைச் சேர்ந்தவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக அங்கீகரிப்பதை அவர்கள் விரும்பவில்லை. கம்யூனிஸ்ட் அகிலத்தால் அமைக்கப்பட்ட ஓர் ஆணையம், அனைத்துக் கருத்துக்களையும் கேட்டறிந்தபின்னர், தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட கட்சியை, இந்தியக் கம்யூனிஸ்ட் குழுவாக அங்கீகரித்திடத் தீர்மானித்தது. தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு கட்சித் திட்டத்தை இறுதிப்படுத்த முடியவில்லை. கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைப்பினை (affiliation) ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமானால் இது அவசியமாகும்.

எனினும், இந்தியாவில் பல்வேறு மையங்களில் இயங்கிவந்த பல கம்யூனிஸ்ட் குழுக்களின் மத்தியில் கம்யூனிசக் கருத்துக்களைக் கொண்டு செல்வதில் இக்குழுவைச்சேர்ந்தவர்கள், குறிப்பாக எம்.என்.ராய், முக்கிய பங்கு வகித்தார்கள். எம்.என். ராயும், அபானி முகர்ஜியும் 1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரசின்  அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் அமர்விற்கு ஒரு திறந்த மடல் எழுதினார்கள். அதில், காங்கிரஸ் கட்சி, தொழிற்சங்கங்கள் முன்வைத்திடும் குறைந்தபட்சக் கோரிக்கைகளை, தன்னுடைய கோரிக்கைகளாக மாற்றிட வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தார்கள். மேலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் முன்வைத்திடும் கோரிக்கைகளையும், தன்னுடைய கோரிக்கைகளாக மாற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்கள். இவ்வாறு செய்தோமானால் காங்கிரஸ் கட்சியை எந்த சக்தியாலும் தடுத்துநிறுத்த முடியாது என்றும், ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் அது வலுப்படுத்தப்படும் என்றும், ஏனெனில் இது ஒன்றுதான் நம்முடைய நலன்களுக்காகப் போராடக்கூடிய அமைப்பு என்று உளப்பூர்வமாகக் கருதத்தொடங்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் அது உருவான காலத்திலிருந்தே, வேறு எந்தக் கட்சியோ அல்லது குழுவோ கூறுவதற்கு முன்பே, இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தது.  எம்.என். ராயும், அபானி முகர்ஜியும், தங்களுடைய திறந்த மடலை காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பிய அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, ஹஸ்ரத் மொஹானி அந்நிய ஆட்சியரிடமிருந்து முழுச் சுதந்திரம் என்கிற ஸ்வராஜ்யம் வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஹஸ்ரத் மொஹானி, கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருந்தார்.  பின்னர் கட்சியின் உறுப்பினராகவும் மாறினார். இவ்வாறு கோருவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று கூறி காந்தி இதனை எதிர்த்தார். எம்.என்.ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியுடன், இந்தியாவில் இயங்கிவந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அவர், பம்பாயில் இயங்கி வந்த எஸ்.ஏ. டாங்கே, கல்கத்தாவில் இயங்கி வந்த முசாபர் அகமது, சென்னையில் இயங்கிவந்த சிங்கார வேலர், மற்றும் பலருக்கும் கடிதங்கள் எழுதி கட்சியை எப்படிக் கட்டுவது என்றும் செயல்பாடுகளை எப்படி மேற்கொள்வது என்றும் ஆலோசனைகளை அளித்தார்.

1922, 1923களில் இந்திய சுதந்திரத்தின் முன்னணி (Vanguard of Indian Independence) என்ற பெயரில் பெர்லினிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, அதிகாரப்பூர்வமான முறையில் ஓர் இதழ் வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பரப்பிட உதவியது. இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாகத் தங்களுக்கு வரவிருக்கும் அச்சுறுத்தலை பிரிட்டிஷ் அரசாங்கம் புரிந்துகொண்டது.  எனவே இவ்விதழ் இந்தியாவிற்குள் வருவதைத் தடை செய்தது. 1920ஆம் ஆண்டு மேலும் ஒருவிதத்தில் முக்கியத்துவம் உள்ள ஓராண்டாகும். இந்த ஆண்டில்தான் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீர்திருத்தவாதச் சிந்தனைகளுடன் இது துவக்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புடன் ஒருசில ஆண்டுகளிலேயே இது உழைக்கும் வர்க்கத்தின் உருக்கு போன்ற தொழிற்சங்க மையமாக வீறுகொண்டு எழுந்தது. எனவே, 1920இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்டில் அமைக்கப்பட்டது என்பதை, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுவதற்கான முதல் அடி எனப் பார்க்க வேண்டும்.   

- தமிழில்: ச. வீரமணி