articles

img

வரிவிதிப்பில் சமூக, பொருளாதார நீதி - என்.குணசேகரன் ,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் முதலா ளித்துவ வீழ்ச்சிக்கு பாட்டாளி வர்க்கத்தை களரீதியாகவும் கருத்துரீதியாகவும் அணிதிரட்டும் கடமையை வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்க நலன் காக்கும் உடனடி கோரிக்கைகளை முன் வைத்திட அவர்கள் தவறியதில்லை. முதலாளிகளின் மூலதனம் மற்றும் வருமானம் ஆகிய இரண்டின் மீதும் வரிகளை தொடர்ச்சியாக அதிகரிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். மறைமுக வரிவிதிப்பை விட நேரடி வரிவிதிப்பு மற்றும் பரம்பரை சொத்து மீதான வரி விதிப்புக்கு அவர்கள் அதிக அழுத்தம் அளித்தனர்.  உலகில் தற்போதுள்ள வரிவசூல், வரி விதிப்புக் கொள்கைகளை ஆய்வு செய்கிறவர்கள், மார்க்சிய ஆசான்களின் கருத்துக்கள் இன்றும் பொருத்தப்பாடு கொண்டன என்பதனை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆசியாவில் வரிவிகிதம்

ஆசியாவில் உள்ள பெரும்பாலான முதலா ளித்துவ நாடுகள் தற்போது கடுமையான நிதி நெருக்க டியிலும், நிதிப் பற்றாக்குறையிலும் திணறிக் கொண்டிருக்கின்றன. நிதி நிலைமையை காரணம் காட்டி, ஏழைகளை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட  சமூக நல திட்டங்களை அரசாங்கங்கள் கை விடுகின்றன அல்லது அவற்றுக்கான அரசு செலவினங்களைக் குறைக்கின்றன.  அதே சமயத்தில், பெரும் கார்ப்பரேட் நிறுவ னங்கள் பல வழிகளில், பயனடைய அரசாங்கங்கள் துணை நிற்கின்றன. குறிப்பாக, பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அதிக அளவில் வரிச் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.  இதற்கு, இந்தியா ‘சிறந்த’ எடுத்துக்காட்டு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கிற அதே சமயத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  ஆசியாவில் சராசரி கார்ப்பரேட் வரி விகிதம் 19.80 சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறை வானது. இதனால்தான் ஆளும் வர்க்க ஆதரவோடு உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது லாபத்தையும் மூலதனத்தையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இவ்வாறு, ஆளும் வர்க்கங்களின் துணையோடு தங்களை வலுப்படுத்திக் கொண்டு வருகிற பெரு நிறுவனங்கள், தொழிலாளர்களோடு தங்களது லாபத்தை எப்போதும் பகிர்ந்து கொள்வதில்லை என்பது கடந்த கால வரலாறு மட்டுமல்ல; இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிற அநீதி. அவர்கள் தொழிலா ளர் சுரண்டலை தீவிரப்படுத்துவதில் எப்போதும் தளர்வ டைவதில்லை.

வரிக்குறைப்பு  வளர்ச்சி ஏற்படுத்துமா?

சமூகத்தில் மற்ற பிரிவுகளை விட அதிக வரி செலுத்த வேண்டிய கடமை பெரும் கார்ப்பரேட் நிறுவன கூட்டத்திற்கு உள்ளது. ஆனால் அவர்கள் மீது கை வைத்தால் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கும் என்பது ஒரு சித்தாந்தமாகவே பிரச்சாரம் செய்யப்படுகிறது. அமெரிக்காவில், முதலாளித்துவ பெருநிறுவன வரி  விகிதங்களை மேலும் மேலும் குறைப்பது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று டொனால்டு டிரம்ப் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்த வலது சாரி பொருளாதார சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்துகிற வகையில் கார்ப்பரேட் வரி விகிதம் அதி கரிக்காமல் இருப்பதற்கு 2017-இல் ஒரு சட்டத்தையே கொண்டு வந்தவர் அவர். டிரம்ப்பின் கருத்துக்கள் முற்றிலும் பொய்யா னவை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தி யுள்ளன; கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட வங்க தேசத்தில் பெரு நிறுவன வரி மிகவும் குறைவு. 2022 ஆம் ஆண்டில் வங்க தேசத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் 30% இருந்தது.2023 ஆம் ஆண்டில் அது 27.5% ஆக குறைக்கப்பட்டது. இதனால் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடிந்ததா? அவ்வாறு வளர்ச்சி அடைந்திருந்தால் ஏன்  மக்கள் போராட்டம் வெடித்தது? முதலாளிகளின் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டதால் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரித்ததா? வங்க தேசத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சி வேலையின்மையை எதிர்த்த குமுற லாகவும் வெளிப்பட்டது என்பதை யாரும் மறைக்க முடியாது. சிங்கப்பூரில் கார்ப்பரேட் நிறுவன விகிதம் வெறும் 17 சதவீதம்தான். சிங்கப்பூரின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 4.1%. ஆனால் அது இரண்டாவது காலாண்டில் 2.9% ஆனது.

பல தெற்காசிய நாடுகள் கடுமையான நிதி சவால் களை எதிர்கொள்கின்றன. அவை 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 86% கடன் சுமை கொண்ட நாடுகள். பூடான், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில், வளர்ச்சி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது.கடுமையான காலநிலை மாற்றம் இந்த நாடுகளை மேலும் பாதித்துள்ளது. இப்பகுதி இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் போது அவர்கள் தங்கள் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு நிதி சவால்கள் நிறைந்த இந்த நாடுகளாவது பெரு நிறுவனங்களின் வரி விகிதத்தை அதிகரித்து உள்ளார்களா? அவ்வாறு அதிகரிக்க கார்ப்பரேட் அதி காரக் கூட்டம் அனுமதிப்பதில்லை. பெரும்பாலான தெற்காசிய நாடுகளில், பெரு நிறுவன வரி விகிதங்கள் பொதுவாக 23.1 சதவீதத்திற் குள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால், ஏழை ஆசிய பொருளாதாரங்கள் பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதாரக் கொள்ளையால் திணறி வருகின்றன என்பதுதான். எனவே, பெரு நிறுவனங்கள் மீதான வரிக் குறைப்புகள் முதலீட்டை அதிகரிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. எதிர்கால லாபங்களின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருப்பதாக பெருநிறுவனங்கள் நம்பினால், அவர்கள் புதிய முத லீடுகளுக்கு முன்வர மாட்டார்கள். அத்துடன், வரிக் குறைப்பும் வரிச்சலுகைகளும் பெரு நிறுவனங்களின் லாபங்களை அதிகரிக்க செய்கிறது. கார்ப்பரேட் வரிச்சலுகைகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய அதிகரிப்பு எதுவும் நிகழ்ந்திடவில்லை. பெரு நிறுவன வரிக் குறைப்புகளால் தொழிலாளர்கள் ஒருபோதும் பயனடைய மாட்டார்கள் என்பது தெளி வானது.

ஏழை மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிற நிலையில், நாட்டின் நிதி நெருக்கடி சுமையை ஏழைகள் மீது சுமத்திட அரசாங் கங்கள் தயங்குவதில்லை. பல ஆசிய நாடுகளில், நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்தும், குறைந்த வரு மானம் பெறும் மக்களிடமும் பல வகைகளில் வரித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கேற்ப மறை முக வரிகள் உயர்த்தப்படுகின்றன. உதாரணமாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நுகர்வு வரி அண்மையில் உயர்த்தப்பட்டது. சிங்கப்பூர் தனது சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 8% இலிருந்து 9% ஆக உயர்த்தியது. மலேசியா தனது விற்பனை மற்றும் சேவை வரியை 2% அதிகரித்து 8% ஆக உயர்த்தியது.

‘நிழல் பொருளாதாரம்’!

பன்னாட்டு நிறுவனங்களை குறைந்தபட்சம் 15% விகிதத்தில் வரி செலுத்துவதை உறுதி செய்வ தற்காக 140 க்கும் மேற்பட்ட நாடுகள் உலகளாவிய வரி ஒப்பந்தத்தை உருவாக்கி கையெழுத்திட்டுள் ளனர்.  ஆனால் ஆளும் அரசுகளின் மீது  பெரு முத லாளித்துவ வர்க்கங்கள் கொண்டுள்ள அதிகாரத்தை யும் செல்வாக்கையும் கருத்தில் கொண்டு பார்த்தால், மேற்கண்ட ஒப்பந்தம்  உரிய பலனை அளித்தி டுமா என்பது கேள்விக்குறியே! இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தி ஆசிய நாடுகளின் வரி வருவாயை அதிகரிக்கும் என்கின்றனர்.இந்த நாடுகள் பின்பற்றும் நவ தாராள மயக் கொள்கைகள் இயல்பாகவே பெருநிறுவனங்க ளுக்கு சாதகமாகவும் அவர்கள் நலனை பாதுகாப்ப தாகவும் அமைந்துள்ளன. பெரு நிறுவனங்களின் வரி ஏய்ப்பு ஆசிய பிராந்தி யத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள முறை கேடுகளாகும்.இந்தோனேசியாவில், ‘நிழல் பொரு ளாதாரம்’ என்று அழைக்கப்படும் சட்ட விரோதப் பொரு ளாதாரம் வரிகளை சரியாக வசூலிக்கத் தவறியதால் வலுவடைந்து வருகிறது. இந்த சட்டவிரோதப் பொரு ளாதாரம் இந்தோனேசியாவின் மொத்த பொருளாதாரத்தில் சுமார் 26 சதவீதம்; சுமார் 336 பில்லி யன் டாலராக வளர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வரி

நோபல் பரிசு பெற்ற தாமஸ் பிக்கெட்டி தலைமை யிலான பொருளாதார வல்லுநர்கள் குழு செல்வ வரியை 1.5 முதல் 3 சதவீதம் வரை சென்டிமில்லிய னர்களுக்கு (குறைந்தபட்சம் 100 மில்லியன் டாலர் நிகர மதிப்புள்ள பெரும் பணக்காரர்கள்) ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தால் 295 பில்லியன் டாலர்களை உருவாக்க பயன்படும் என்று அறிவுறுத்தினர்.  ஆசியாவில் இது 91 பில்லியன் டாலர்களை ஈட்டும். இத்தகைய செல்வ வரி விகிதத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த பயன்படும்; அது மட்டுமல்லாது காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நிதிக்கும் அது பயன்படும் என்று தாமஸ் பிக்கெட்டி குழுவினர் பரிந்துரை செய்தனர். ஆனால் இந்த ஆலோசனைக்கு எவரும் செவி சாய்க்கவில்லை. நவ தாராளமய சகாப்தத்தில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி விரிவடைந்து வருகிறது. அதிகமாக விளம்பரப்படுத்துகிற ‘பொருளாதார வளர்ச்சி’ யால் மக்களில் பெரும்பாலோர் பயனடையவில்லை. வரி விதிப்புக் கொள்கை சமத்துவமின்மையை தீவிரப் படுத்தி வருகிறது.  மூலதனத்தையும் லாபத்தையும் அதிகரித்து மூலதன சாம்ராஜ்யம் கொண்டிருக்கிற வர்க்கங்க ளின் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டுமென்ற சமூக நியாயத்தை, பரவலாக அறியப்பட்ட சமூக சிந்தனையாளர்கள் யாரும் விவாதிப்பதில்லை. பலவற்றை விவாதிக்கிற ஊடகங்கள் இதற்கு துளி அளவிற்கு கூட முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுத்தளத்தில் இப்பிரச்சனை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. நவதாராளமயத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவித்து வரிவிதிப்பு மற்றும் வரிக்கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்த மக்கள் இயக்கங்களால் மட்டுமே சாத்தியம்.  அரசுகள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நியாயமான வரிகளை விதிப்பதற்கான கோரிக்கைகளை முன் வைப்பது, சமூக, பொருளாதார நீதிக்கான போராட்டமாகும்.