ஏதோ ஒரு தெருமுனையில்
ஏதாவது ஒரு போராட்டத்தில்
கம்பீரமாக முழக்கமிடும்
அவர்களை நீங்கள் கண்டிருக்கலாம்.
அல்லது காணாதது போல் சென்றிருக்கலாம்...
குடியரசு நாட்டில் குடியிருக்க வீடில்லை ...
வீடிருந்தால் பட்டாஇல்லை....
வறுமையின் உருவங்களாய்
வாழும் ஏழைகளோடு
வட்டாட்சியர் அலுவலகத்தில்
காத்திருக்கும் போராட்டம்.,
அவர்களை நீங்கள் கண்டிருக்கலாம்.
அல்லது காணாதது போல் சென்றிருக்கலாம்.
குடிநீருக்கே திண்டாட்டம்...!
அதற்கு ஒருநாள்முழுதும் உண்ணாவிரதப் போராட்டம்...
அங்கே அவர்களை நீங்கள் கண்டிருக்கலாம்.
சீரழிந்து வரும் சமூக அமைப்பு.
நித்தமும் அரங்கேறும் சிறுமிகளுக்கெதிரான
பாலியல் வன்கொடுமைகள் ....
வேடிக்கை பார்க்காதீர் பெரியோரே...
பேருந்து நிலையத்தில் முற்றுகைப் போராட்டம்..
அங்கே நீங்கள் அவர்களை கண்டிருக்கலாம்
அல்லது பேருந்தில் அமர்ந்திருக்கலாம்
பாலுக்கும் ஜிஎஸ்டி பாப்கார்னுக்கும் ஜிஎஸ்டி
வரி உயர்வு விலை உயர்வு
கண்டித்த போராட்டங்கள்
இரயில்நிலையத்தின் முன்பாக..
நீங்கள் கண்டிருக்கலாம்.
விவசாயிகள், தொழிலாளர்கள்
உரிமைகளுக்கான போராட்டங்களில்
அவர்களை நீங்கள் கண்டிருக்கலாம்.
அல்லது போராட்டத்தின் அருகில் சென்றிருக்கலாம்.
சாதிமதவெறிக் கலவரங்களுக்கெதிராக
கருத்தியல் போராட்டங்களை முன்னெடுக்கும் அவர்களை
நீங்கள் அவதானித்திருக்கலாம்.
தடியடி சிறை தலைமறைவு
அடக்குமுறை ஒடுக்குமுறை அனைத்திற்கும்
அடங்கிப் போகாத வரலாறு கொண்டவர்கள் அவர்கள். நீங்கள்அறிந்திருக்கலாம்.
அல்லது அறியாமலும் போயிருக்கலாம்.
ஆனால் அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வேர்கள்...
புரட்சியின் விதைகள்...
சோஷலிசத்தின் எதிர்காலங்கள்...
அவர்களே கம்யூனிஸ்ட்டுகள்.!