articles

img

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட்டுகள் - எஸ். கண்ணன் ,மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இன்போசிஸ் நாராயண மூர்த்தி, வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என பேசியதை, மோடி துபாயில் வலியுறுத்திப் பேசியிருக்கிறார். தொழிலாளர்கள் பல மணிநேரம் உழைக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். அண்மையில் துபாய் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மோடிக்கு துபாய் மன்னர் விருது வழங்குவதும், மோடி துபாய் நாட்டில் பேசிய வேலை நேரம் குறித்த கருத்தும், சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியது அல்ல. மூலதனத்துடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்துள்ளது.

லாப வேட்டையின் புதிய முகம்

துபாய் நாட்டில் உள்ள இந்தியத் தொழிலாளர் முகாமிற்குச் சென்ற மோடி, “நீங்கள் மிகக் கடுமையாக உழைத்து இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறீர்கள். நீங்கள் 10 மணி நேரம் வேலை செய்தால், நான் 11 மணி நேரம் வேலை செய்வேன். நீங்கள் 11 மணி நேரம் வேலை செய்தால், நான் 12 மணி நேரம் வேலை செய்வேன்” என்று பேசியுள்ளார். இதைத்தான் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவம் விரும்புகிறது. மார்க்ஸ் தனது மூலதனம் நூலில், “மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும். அது உயிருள்ள உழைப்பை உறிஞ்சி வாழ்கிறது. எவ்வளவு அதிகமாக உறிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக வாழ்கிறது. தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது, முதலாளி அவரிடம் இருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்” என்று குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் தொழிலாளர் உரிமைப் போராட்டம்

தமிழ்நாட்டில், கடந்த 2022 ஏப்ரலில், சட்டமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டம், பிரிவு 65-ல் திருத்தத்தை மாநில திமுக அரசு முன்வைத்தது. இதன் மூலம் வேலை நேர வரம்பைத் தளர்த்தும் நடவடிக்கை உருவாக்கப்பட்டது. இதைத் தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. மார்க்சிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுக நிலையிலேயே எதிர்த்து, சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.  இறுதியில் தமிழ்நாடு அரசு, மேற்படி சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் கட்டாயம் உருவானது. இன்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வேலை நேர வரம்பு, தொழிற்சங்கம் இல்லாத நிறுவனங்களில், பின்பற்றப்படுவதில்லை. அதன் காரணமாகவே தொழிற்சங்கம் அமைவதை நிறுவனங்கள் விரும்புவதில்லை. தொழிற்சங்கப் பதிவு நடவடிக்கைகள் தாமதம் செய்வதை, இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தைவான் நாட்டு நிறுவனம் பி.ஒய்.டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் செயல்பட்டு வந்தது. 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். இங்கு தொழிற்சங்கம் அமைந்தபோது, தாங்கள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவதாகக் கூறினர். 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும், மிகைப் பணியாகக் கருதப்பட வேண்டும். அதற்கு இரட்டிப்புக் கூலி வழங்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்த்தே தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தை நாடி வந்தனர்.

காலனி ஆதிக்கத்திலிருந்து நவ காலனியாதிக்கம் வரை

ஏங்கெல்ஸ், இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் குறித்து எழுதுகையில், “காலனிச் சந்தைகள், இங்கிலாந்தின் சரக்கு உற்பத்தியை வாங்கிக்கொள்கிற சக்தியை வளர்த்துக் கொண்டன. இந்தியாவில், லட்சக்கணக்கான கைத்தறித் தொழிலாளர்கள் லங்காஷயரின் இயந்திரத் தறியினால் நசுக்கப்பட்டார்கள்” என்கிறார். முதலில் சரக்கு, அடுத்து நேரடி உற்பத்தி என காலனியாதிக்க இந்தியாவின் நிலைமை இருந்தது. இன்று நவீன தாராளமயக் கொள்கை, நவ காலனியாதிக்கத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு நிபந்தனை அற்ற அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகள் உதவுகின்றன. இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும், முதலாளித்துவத்தின் நவீன தாராளமயம் மேலாதிக்கம் செலுத்துகிறது. இது வகுப்புவாத அரசியலுக்கும் உதவி செய்வதைக் காணமுடிகிறது. தாராளமயம் உருவாக்கும் கூலிக் கட்டுப்பாடு, நிரந்தரமற்ற காண்ட்ராக்ட் போன்ற வேலை நிலைகளை எதிர்க்கும் தொழிலாளர்கள், வகுப்புவாதத்தை எதிர்ப்பதில்லை. வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருக்கும் முதலாளித்துவக் கட்சிகள், தாராளமயக் கொள்கைகளை எதிர்ப்பதில் பலவீனமாக உள்ளன. இந்த இரு எதிர்ப்புகளையும் கூர்மையாக முன்வைத்துப் போராடுவது கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே.

மார்க்சிஸ்ட் கட்சியின் வழிகாட்டல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில், தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் கட்டுப்படுத்தப்பட வேலை நேரம் 6 மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்கிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல மூலதனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திட அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். எப்போதெல்லாம் தொழிற்சங்கங்களும், இடதுசாரிகளும் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து செயல்படுகிறார்களோ, அப்போதெல்லாம் தொழிலாளர்களுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எப்போதெல்லாம் இடதுசாரிகளின் செல்வாக்குக் கட்டுப்படுத்தப் பட்டதோ அப்போது, சட்டங்கள் முதலாளித்துவத்திற்குச் சாதகமாக வடிவம் எடுத்துள்ளது.

களப்போராட்டத்தின் அவசியம்

எழுத்தளவில் மட்டும் அல்ல, களத்திலும் வேலை நேர வரம்பு உயர்த்தப்பட்டபோது மட்டுமல்ல, வேலைத்தளத்தில் பல அடுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் எதிர்த்து வருகிறது. நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொழிற்சங்கம் அமைப்பது ஆகியவற்றின் மூலம், உரிமைகள் கோரப்படுவதன் மூலம் உழைப்புச் சுரண்டல் கட்டுப்படுத்தப்படுகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, தொழிலாளர்களின் சுரண்டலில் இருந்து விடுதலை பெற இந்தியாவில், முதலாளித்துவ தாராளமயக் கொள்கை மற்றும் வகுப்புவாத எதிர்ப்பை வலுவாக முன்னெடுப்போம் என அறைகூவல் விடுக்கிறது.