articles

img

மதச்சார்பின்மையின் இதயம் மகாத்மா - எஸ்.குமார்

வகுப்புவாதம் நாட்டைப் பிரித்தது மட்டு மல்ல, மக்களின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. அது குணமடைய நீண்ட காலம் எடுக்கும். மேலும் அது தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலைக்கும் காரணமாக அமைந்தது. காந்திஜியின் படுகொலை முன்கூட்டியே திட்ட மிடப்பட்ட ஒன்றாகும். 1947 நவம்பரில், பீகாரைச் சேர்ந்த விவசாயிகளின் தலைவரான காரியானந்த் சர்மா, “இந்து ராஜ்ஜியத்திற்கான கோரிக்கை மிகவும் மோசமானது, அதன் பின்னால் காந்திஜி மற்றும் பண்டிட்ஜியைக் கொல்ல ஒரு சதி இருந்தது” என்று எச்சரித்திருந்தார். 1948 ஜனவரி 20 அன்று நடத்தப்பட்ட கொலை முயற்சியின் தன்மையை காந்தியே புரிந்து கொண்டார். குண்டுவெடிப்பு தற்செயலானதா என்று ஒரு சக ஊழியர் யோசித்தபோது, அவர் பதிலளித்தார்: “முட்டாள்; உனக்குப் புரியவில்லையா, பின்னால் ஒரு பயங்கரமான மற்றும் பரவலான சதி இருக்கிறது.”

இரு தேசக் கோட்பாடு மற்றும் மதச்சார்பின்மை

இரு தேசக் கோட்பாட்டை (இந்தியா, பாகிஸ்தான்) முதலில் முன்வைத்தவர் சாவர்க்கர். அதன் பின்னரே ஜின்னா அதனைக் கையிலெடுத்தார்.  கடவுள் அனைவருக்கும் சமமானவர். அவர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.  ஏப்ரல் 4, 1946 அன்று தில்லியில் உள்ள பிர்லா மாளி கையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி கூறியது: “ராமர் அல்லது ராம நாமம் உச்சரிப்பது இந்துக்களுக்கு மட்டுமே என்றும், முஸ்லிம்கள் அதில் எப்படி பங்குகொள்வார்கள் என்றும் ஒருவர் கூறும்போது எனக்குள்ளேயே நான் சிரித்துக் கொள்கி றேன். முஸ்லிம்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறாரா? இந்துக்களா, பார்சிகளா, கிறித்தவர்களா? இல்லை, சர்வ வல்லமையுள்ள, எங்கும் நிறைந்த கடவுள் ஒருவரே. அவருக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டு, நமக்குப் பரிச்சயமான பெயராலேயே அவரை நினைவு கூருகிறோம்.” [மேலும் அவர் கூறினார்:] “என் ராமர், நமது பிரார்த்த னைகளின் ராமர், சரித்திர ராமர் அல்ல, அயோத்தி யின் மன்னன் தசரதனின் மகன். அவன் நித்தியமான வன், பிறக்காதவன், ஒரு வினாடி இல்லாதவன். அவனையே நான் வணங்குகிறேன், அவனுடைய உத வியையே நான் தேடுகிறேன், நீங்களும் அப்படித் தான். அவர் அனைவருக்கும் சமமானவர்.” [மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 83, ப.364]

கலவர பூமியில் இந்து - முஸ்லிம் ஒற்றுமை வளர்த்த காந்தி

நவகாளியும் பீகாரும் மதக் கலவரங்களால் ரத்த  பூமியானது. நவகாளியில் இந்துக்கள் கொல்லப் பட்டனர், அதற்குப் பதிலடியாகப் பீகாரில் முஸ்லிம் கள் கொல்லப்பட்டனர். நேரு பீகாரில் முகாமிட்டார். காந்தி நவகாளி நோக்கிச் சென்றார்.  நவகாளி சென்ற காந்தி டிசம்பர் 5-ஆம் தேதி ஓர் அறிக்கையில் கூறினார்: “நான் எந்த முடிவுக்கும் தயாராக இருக்கிறேன். ‘செய்’ அல்லது ‘செத்து மடி’ என்பது பரிசோதிக்கப்பட வேண்டிய இடம் இங்கே. ‘செய்’ என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்க மாகவும் அமைதியாகவும் வாழக் கற்பது. இது நடக்காவிட்டால் அந்த முயற்சியில் நான் செத்தும் போகலாம்.” காந்தி நவகாளி யாத்திரையின் போது 49 கிராமங்க ளில் தங்கினார். காலை 4-மணிக்கு எழுந்து 3 அல்லது 4 மைல் தூரம் வெறுங்காலில் கிராமங்க ளில் நடப்பார், ஆங்காங்கே ஒன்றிரண்டு நாட்கள் தங்குவார், கிராமத்தாரோடு பேசுவார், விடாது ஜெபிப்பார். பிறகு அடுத்த கிராமத்துக்குச் செல்வார். ஒவ்வோர் இடத்திலும் ஏழைக் குடிசை ஒன்றின் முன் நின்று, பொதுவாக முஸ்லிம்களின் குடிசை, தங்கு வதற்கு அனுமதி கேட்பார். அனுமதி கிடைக்கா விட்டால் அடுத்த குடிசைக்குச் செல்வார். நவம்பர் 7, 1946 முதல் மார்ச் 2, 1947 வரை இது தான் அவரது வழக்கம். அப்போது அவருக்கு வயது 77.

அமைதிப் படை வீரர்

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கலவரங்கள் வெடிக்க, நாடு விடுதலை நாளை நோக்கி நகர்ந்தது. எல்லோர் மனதிலும் பெரும் அச்சம் விளை வித்தது ஒரேயொரு கேள்வி - மேற்கு வங்கத்தில் கலவரம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தான். ஆகஸ்டு 16, 1946-இல் ஜின்னாவின் ‘நேரடிச் செயல் தினம்’ அறைகூவலின் விளைவாக நடந்த கல வரத்தில் பெருமளவு இந்துக்கள் கொல்லப்பட்டனர். இப்போது முஸ்லிம்களின் முறையாக இருக்கும் என்று எல்லோரும் அஞ்சினர். கலவரத்தை அடக்கப் போதுமான அளவு ராணுவம் இல்லை. ஆகஸ்டு 9, 1947 அன்று காந்தி கல்கத்தா வந்தடைந்து ஒரு முஸ்லிம் வீட்டில் சுராவர்தியோடு தங்கினார். ஆகஸ்டு 31-ஆம் தேதி அவர் தங்கிய வீட்டை ஒரு கலவரக் கும்பல் முற்றுகை இட்டது. காந்தியை தாக்க வந்த ஒரு ரவுடியை காந்தியே நேரடியாக எதிர்கொண்டு வணக்கம் சொல்ல, அந்தச் சமயம் வீசப்பட்ட செங்கல் காந்தியருகே நின்றிருந்த இன் னொருவரைத் தாக்கியது. அடுத்த நாள் காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 78. செப்டம்பர் 4-ஆம் தேதி காந்தி  உண்ணாவிரதத்தை முடித்த போது கல்கத்தா பெருமளவு அமைதிக்குத் திரும்பியது. கலவரக் கும்பல் கள் காந்தியின் காலடியில் தங்கள் ஆயுதங்களை ஒப்புவித்து அமைதி அறிக்கையில் கையெழுத் திட்டனர். இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயும் புதிய கவர்னர் ஜெனரலுமான மவுண்ட்பேட்டன் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலை தனியொரு மனி தனான காந்திஜி என்னும் ஒரு அமைதிப் படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார்.”

காந்தியின் முக்கியமான நிலைப்பாடுகள் இன்றும் வழிகாட்டுகின்றன

1. மதச்சார்பின்மைகாந்தி மதச்சார்பின்மையை அரசின் அடிப்படைக் கொள்கையாகக் கண்டார். அரசின் செயல்பாடுகள் எந்த ஒரு மதத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருக்கக்கூடாது என்றார்.
2. மதத்தை அரசியலுடன் கலக்க வேண்டாம்காந்தியின் கருத்துப்படி, மதம் ஒரு தனிப்பட்ட நபரின்ஆன்மீகத் தேடலின் பிரிவு. அரசு அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும்.
3. மதகுரு அல்ல அரசாங்கம்“அரசாங்கம் ஒரு மதகுருவாக செயல்படக்கூடாது.” கோவில்கள் போன்ற மதம் சார்ந்த கட்டிடங்கள் சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் தன்மை கொண்டவை.
4. சமூக நலனுக்கான பணிகள் முன்னிலைப்படுத்தல்காந்தி தனது வாழ்நாளில், சமூகவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.இந்தியாவின் இதயம் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை (இந்து-முஸ்லிம்). மதச்சார்பின்மையின் இதயம் மகாத்மா காந்தி.அரசியல் அமைப்பு சட்ட விழுமியங்களையும், மதச்சார்பற்ற இந்தியாவையும் பாதுகாக்க ஒன்றிணைவோம்.