கடந்த (ஜூலை) மாதம் இரண்டு பில்லியனர்கள் ‘விண்வெளிக்கு’ சென்று வந்ததை ஏகாதிபத்திய ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன. அதிலும் குறிப்பாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணப்பட்ட அந்த 11 நிமிடங்களை, அமெரிக்க ஊடகங்கள் வரலாற்றுநிகழ்வு போல நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டாடி மகிழ்ந்தன.
இது குறித்து தற்போது ஓர் ஒப்பீடு வெளிவந்துள்ளது. அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்களின் காலை நிகழ்ச்சிகளில் 2020 ஆண்டு முழுவதும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு(கிளைமேட் கிரைசிஸ்) செலவிட்டது 267 நிமிடங்கள்தான். ஆனால் ஜூலை 20 ஆம்தேதி ஒருநாள் மட்டும் பேசோஸ் விண்வெளி பயணம் நேரலையாக காட்டப்பட்ட நேரம் 212 நிமிடங்கள். இவர்கள் இருவர் தவிர மூன்றாவதாக பில்லியனர் ஈலான் மஸ்க் (டெஸ்லா மின் கார் உற்பத்தியாளர்) செப்டம்பர் மாதம் பயணிகளை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்பவுள்ளார். அதற்கு கிரிப்டோ கரன்சி மூலம் டிக்கெட் என்கிறார் மாய ‘பிட் காயினை’ பிரபல்யப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க ஊடகங்கள் இந்தளவிற்கு பூரிப்படைந்துள்ளன என்றால் அதில் வியாபார லாப நோக்குநிச்சயம் இருக்கும். அதை பின்பு விரிவாக பார்ப்போம்.இந்த முறையே பெசோஸ் உடன் பயணித்த 18 வயதுடச்சு வாலிபர் ஆலிவர், 28 மில்லியன் டாலர் கொடுத்து பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது தந்தை ஹெட்ஜ் பண்ட் தலைமை அதிகாரி. கடந்த காலங்களில், விண்வெளிப் பயணத்தை, அரசு நிறுவனங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக மேற்கொண்டன. மனித குல வளர்ச்சி என்பதே அதன்நோக்கமாக இருந்தது. இப்பொழுது பொழுது போக்குஎன்ற பெயரில் தனியார் துறை விண்வெளி பயணங்களை தாங்கள் அபகரிக்க திட்டமிடுகின்றன. இந்த அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொள்ள கடந்த காலங்களில் விண் வெளிப் பயணங்கள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து சிறு நினைவூட்டல்.
விஞ்ஞானத்தை உயர்த்திப் பிடித்த விண்வெளிப் பயணங்கள்
இந்த ஆண்டு(2021) ஏப்ரல் மாதம் 11 தேதியோடு யூரிககாரின் விண்ணில் பறந்து 60 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. பூமியின் ஈர்ப்பு விசைக்கு அப்பால் உள்ள வளிமண்டலத்தில் பயணித்த முதல் நபர் அவர். உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த மனித குலத்தின் வரலாற்றில் விண்ணிலும் காலடி பதித்த விஞ்ஞான சாதனை அது! யூரி ககாரின் பறந்த ஒரு மாத காலத்தில் அமெரிக்காவின் ஆலன் ஷெப்பர்டு விண்ணில் பறந்த முதல் அமெரிக்கரானார். அவர் நினைவாகவே ஜேஃப் பெசோஸ் தனது விண்கலத்திற்கு நியூ ஷெப்பர்டு என்று பெயரிட்டுள்ளார்.
அதன் பிறகு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்தது விஞ்ஞானத்தின் என்றென்றைக்கும் மறக்க முடியாத பிரம்மாண்ட சாதனை. மனிதன் நிலவில் கால்பதித்த அந்த நிகழ்வை அன்றைய தினம் நேரலையாக உலகின் பாதி மக்கள் தொகை பார்த்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் மற்றொரு வரலாற்று நிகழ்வு செவ்வாய்கிரகத்தில் களத்தை இறக்கியது, சோதனைகளை மேற்கொண்டது. இதைத்தவிர பயோனீர் செயற்கைக் கோளை நமது சூரிய குடும்பத்தை முழுமையாக கடக்கவைத்தது என ஏராளமான விஞ்ஞான சாதனைகள் விண்வெளி பயணத்தில் உண்டு.
இவை தவிர ஏராளமான செயற்கைக் கோள்களைஉலக நாடுகள் விண்ணில் ஏவின. ஆர்யபட்டா தொடங்கி இந்தியாவும், விண்வெளியில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக சாதனைகளை தொடங்கியது. இன்று நமது வாழ்வின் பல அம்சங்கள் விண்வெளியோடு, செயற்கைக் கோள்களோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. வணிகம், பணப் பரிவர்த்தனை, பொருளாதாரம், பொழுதுபோக்கு, தகவல்தொடர்பு, வரைபடங்கள் தயாரித்தல், பயணங்களுக்குவழிகாட்டும் மேப், வானிலை ஆய்வு, பிரம்மாண்ட இயற்கை பேரழிவுகள் போன்ற கணக்கிலடங்கா அம்சங்கள் செயற்கை கோள்களோடு இணைந்துள்ளன. இவை மட்டுமா? இந்த உலகம் தோன்றிய விதம்,நமது பால்வீதி பற்றி, நமது அண்டம் பற்றி, பேரண்டம்உருவானது பற்றி, நட்சத்திரங்கள் உருவாவது மற்றும்மறைவது குறித்து, கருப்புப் பள்ளங்கள் குறித்து என்றவிண்வெளி ஆராய்ச்சிகள் துல்லியமாக மாறியதில், விண்வெளி பயணங்களுக்கு பங்குண்டு. உதாரணம் ஹப்பிள் தொலைநோக்கி.முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும் மண்ணில் மட்டும் போட்டியில்லை! விண்ணிலும் இருந்தது. முன்னாள் சோவியத் யூனியன் அமெரிக்காவை விட 25 ஆண்டுகள் முன்னணியில் இருந்தது. விண்வெளியில் முதல் முதலில் நிரந்தர தங்குமிடம்(விண்வெளி நிலையம்) மீர் உருவாக்கியது. தொடர்ந்து அமெரிக்கா ஸ்கைலாப் அனுப்பியது.
சோவியத் யூனியன் தகர்ந்த பின், ரஷ்யாவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், கனடாவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தன. கடந்த 23 ஆண்டுகளாக அது செயல்பட்டு வருகிறது. இதுவரை242 பேர் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்குசென்று தங்கியிருந்து பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைமேற்கொண்டுள்ளனர். விண்ணில் நடப்பது(ஸ்பேஸ் வாக்), விண்கலத்திற்கு வெளியே வந்து பழுது நீக்குவதுபோன்ற பல சாகசங்களை இந்த நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் செய்துள்ளனர்.
கிரகங்களுக்கு இடையே மனிதன் பறக்க விரும்பும்போது, இந்த சர்வதேச விண்வெளிநிலையம் பயன்படும்என தெரிவிக்கப்படுகிறது. தற்போது சீனா தனது சொந்தவிண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. சுருக்கமாக இதுநாள் வரையிலான விண்பயணங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காகவும், மனித குல முன்னேற்றத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இந்த பில்லியனர்களின் பொழுது போக்கு பயணம் எந்த நோக்கமும் இன்றி சும்மா பொழுது போக்கிற்காக மேற்கொள்ளப்படுகிறது.
விண்வெளி எங்கு தொடங்குகிறது?
பூமியில் மலையின் உயரத்தை கணக்கிட கடல்மட்டம் என்ற பதம் பயன்படுத்தப்படுவதை அறிவோம். உதாரணமாக எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8848மீ உயரம் என கணக்கிடப்படுகிறது. அதே போல் விண்வெளி எந்த இடத்திலிருந்து தொடங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. விஞ்ஞான உலகம் விண்வெளி என்ற அண்டவெளி,கர்மன் கோடு என்பதிலிருந்து தொடங்குவதாக தெரிவிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 100கி.மீ.(62.5மைல்) உயரத்தில் கர்மான் கோடு ஆரம்பிக்கிறது.
இந்த இடம் வெற்றிடம் உள்ள இடமாகும். இந்த இடத்தில் நுண் ஈர்ப்பு விசைதான் இருக்கும். அதாவதுநமது உடல் எடையில்லா நிலைக்கு போய்விடும். நாம்அந்தரத்தில் மிதப்போம். இந்த இடத்தைதான் சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் சர்வதேச அமைப்பான எப்.ஏ.ஐ என்ற அமைப்பு பூமியின் எல்லை முடிந்துவிண்ணின் எல்லை ஆரம்பமாவதாக தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்க விண்வெளித் துறை நாசாவும், பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷனும் (எப்ஏஏ) 50மைல் தூரத்திற்கு மேல் (80கி.மீ.) யாராவது பயணம் செய்தாலே, அவர்கள் விண்வெளியில் பயணித்ததாய் அங்கீகரித்து அவர்களுக்கு விண்வெளி வீரர் சிறகுபதக்கம் (சீருடை பணியாளர்கள் மார்பில் குத்திக்கொள்வார்களே அதைப் போன்று வழங்குகிறது.
விண்ணில் பறந்த பில்லியனர்கள்
ஜூலை 11 தேதி பிரிட்டனின் பில்லியனர் சர்.ரிச்சர்ட்பிரான்சன் தனது வெர்ஜின் காலக்டிக் என்ற விமானத்தில் 5 பேருடன் விண்வெளிக்கு ஜாலிடிரிப் அடித்தமுதல் தனியார் நபராவார். இவரின் வெர்ஜின் காலக்டிக்என்ற விமானம், ராக்கெட் என்பது தொழில்நுட்ப ரீதியாக விண்ணிற்கு சென்றதாக கொள்ளலாம் என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.பிரான்சன் சென்ற வெர்ஜின் காலக்டிக் சாதாரணவிமானம் போன்று விண்ணில் 50000 அடிவரை சென்று அங்கிருந்து ராக்கெட் என்ஜின் விண்கலத்தை உந்தித் தள்ள, விண்கலம் விண்ணில் (86 கிமீ வரை)பாய்ந்து சென்றது. அங்கு 4 நிமிட நேரம் அவர்கள் எடையற்ற தன்மையில் மிதந்தனர். அதன் பிறகு அது பூமியை நோக்கி சரிந்து தரையிறங்கத் தொடங்கியது. அமெரிக்காவின் விண்வெளி வரையறையான 80 கி.மீ. என்பதை சற்று கடந்து 86 கி.மீ வரையில்சென்று விட்டு திரும்பியுள்ளது. இதனை விண்வெளியின் கீழ் சுற்றுப் பாதை (சப் ஆர்பிட்டல் ஸ்பேஸ்) என்கின்றனர். மற்றொரு பில்லியனரான ஜெஃப் பெசோஸ் தனதுவிண்கலமான நியூ ஷெப்பர்டு என்ற ராக்கெட் விண்கலத்தில், விண்ணில் 66.5 மைல் தூரம்வரை பறந்துசென்று திரும்பியுள்ளார். அதாவது சர்வதேச விண்வெளிப் பயணத்திற்கான வரையறையைவிட சற்று அதிகமாகப் பறந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் பயணித்ததை 60 வருடங்களுக்கு முன் யூரிககாரின் பறந்ததோடு ஒப்பிடுங்கள். யூரி ககாரின் விண்ணில் பூமியை வலம் வந்தவர்.அவர் பறந்த விண்கலம் அதிகபட்ச உயரமாக 327 கி.மீ.தூரத்திலும், குறைந்தபட்சமாக 181 கி.மீ. தூரத்திலும் பறந்தது. அதாவது பிரான்சன் பறந்த உயரத்தைக் காட்டிலும் 4 மடங்கு அதிக தூரம் விண்ணில் பயணித்துள்ளார். மேலும் அவர் விண்ணில் அந்த சுற்றுப்பாதையில் 108 நிமிடங்கள் உலகையே வலம் வந்துள்ளார்.
ஜெஃப் பெசோஸ் தனது விண்கலத்திற்கு நியூ ஷெப்பர்டு என்று பெயரிட்டாரே அந்த ஆலன் ஷெப்பர்டு60 வருடங்களுக்கு முன் 187கி.மீ. உயரத்திற்கு விண்ணில் பறந்துள்ளார். 60 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சாதனைகளையும் இன்று இந்த பில்லியனர்களின் கேலிக்கூத்தையும் ஒப்பிட்டால் வேதனையான சிரிப்புதான் வரும். சிரிப்புக்கு விளக்கம் தேவையில்லை. வேதனையின் காரணம், இவ்வளவு செலவு செய்து ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் பூமிப் பந்தை மேலும் சூடாக்குகிறார்களே என்பதுதான்.
சுற்றுச் சூழல் பாதிப்பு
இவர்களின் விண்கலங்கள் வெவ்வேறு வகையான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக ஈலான் மஸ்க் பயன்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்வகை விண்கலம், மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்துமாம். இது ஒரு முறை விண்ணிற்கு சென்று வந்தால் 300 டன் வரை கரியமில வாயுவை விண்ணில்சேர்த்துவிடும் என கார்டியன் பத்திரிகை கவலை தெரிவிக்கிறது. பிரான்சன் பயன்படுத்திய ராக்கெட், நைட்ரஜன் ஆக்சைடுகளை-பசுங்கூட வாயுக்களை- விண்ணில் செலுத்தி விடும் என்கின்றனர். இதில் மற்றொரு பிரச்சனையும் உள்ளது. இவர்கள் ஏற்படுத்தும் மாசு நேரிடையாக வளிமண்டலத்திலேயே வெளியிடப்படுவதால், அங்கு அது தங்கி பல வருடங்களுக்கு ஓசோன்படலத்தை பாதிக்கும் என்கின்றனர். ஏற்கனவே, இந்த ஆண்டு கடுங்குளிர் பிரதேசமானதூந்திரப்பிரதேசத்தில் உள்ள சைபீரியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி அடிப்பதால், அங்கு காடுகள் பற்றி எரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பநிலை நிலவுகிறது. உலகம் வெப்பமயமாகிவருவதன் விளைவே இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொழுது போக்கிற்காக விண்வெளிக்கு செல்வது அதன் காரணமாக பூமி வெப்பமாவதை மேலும் அதிகப்படுத்தி, பூமியை வாழ தகுதியற்றதாக்குவதை எப்படிஏற்க முடியும்?
சர்ச்சைக்குள்ளான பெசோஸ் பேட்டி
விண்வெளிக்கு சென்று திரும்பிய பின் ஜெஃப் பெசோஸ் கொடுத்த பேட்டி, எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் தான் சென்று வந்ததற்கு காரணம், அமேசான் நிறுவன ஊழியர்களும், அமேசான்பொருட்களை வாங்கியவர்களும்தான் என்று தெரிவித்தார். இந்த பேட்டிக்கு டுவிட்டரில் பதிலடித்த வாஷிங்டன்காங்கிரஸ் உறுப்பினர் பிரமீளா ஜெயகோபால், “நீங்கள் அமேசான் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கியிருந்தால், அவர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை தடுக்காமலிருந்தால், தொழிலாளர்கள் பில்லியனர்களின் டாம்பீகமான பொழுதுபோக்கிற்கு உதவியிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை காத்துக் கொண்டு, கவுரவத்தோடு தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.” என காட்டமாக கருத்து தெரிவித்தார்.டெய்லி ஷோ டிரவர் நோவா, பெசோஸ் 5 நிமிடம்விண்ணில் இருந்ததை, “ஒரு அமேசான் கிட்டங்கியில்16 மணி நேரம் வேலை பார்க்கும் தொழிலாளி, பாத்ரூம்செல்ல அனுமதிக்கப்படும் நேரம் பெசோஸ் விண்ணில்இருந்தார்” என கிண்டலடித்தார்.
வியாபார நோக்கம்
நவீன தாராளமய காலத்தில் விண்வெளி பயணங்களையும், தனியார் கைப்பற்றவே இந்த முயற்சிகள் என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக லாக்கீட், போயிங் போன்ற நிறுவனங்களின் ஏகபோகங்களை முறியடிக்க பெசோஸ் முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் இந்த பொழுது போக்கு விண்வெளிப் பயணத்திற்கு பில்லியனர்களிடையே விருப்பம் உள்ளதாம். உதாரணமாக ரிச்சர்ட் பிரான்சன் நிறுவனமான வெர்ஜின் காலக்டிக் நிறுவனத்திற்கு 600பேர் ஏற்கனவே பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் தற்போதைய விலை கிட்டத்தட்ட2 கோடி ரூபாய். அதே போன்று இதர நிறுவனங்களிலும் காத்திருப்போர் பட்டியல் பல ஆயிரம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொழுது போக்குபயண தொழில் ஆண்டுக்கு ஆண்டு 17.5 சதவீதம்உயரும் என்பதால் இவர்களுக்குள் போட்டியிருக்கிறது என்கின்றனர். இந்தியாவிலும், இஸ்ரோவை தனியார்மயமாக்க மோடி அரசு முயல்கிறது என்பதை நாமறிவோம்.
வறுத்தெடுத்த சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களில் பெரும்பாலானோர், இப்படிபெருந்தொற்று காலத்தில், மக்கள் மருத்துவ செலவிற்கு தவிர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் போது,அருவருக்கத்தக்க விதத்தில், பில்லியனர்களின் பொழுதுபோக்கு இருக்கிறது என கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், இப்படிப்பட்ட டாம்பீகமான பொழுது போக்கு வைத்திருக்கும் பில்லியனர்கள் வரியே கட்டுவதில்லை என்பதால், அவர்கள் பூமிக்கு திரும்புவதற்கு நுழைவு வரியாக சில பில்லியன் டாலர்கள் வசூலிக்கலாம் என்கின்றனர்.
சமூக வளைத்தளத்தில் கோபம் கொண்ட பலர், ஒரு ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்தனர். அது “அப்படியே போய்விடுங்கள் திரும்ப வராதீர்கள்”
கட்டுரையாளர் : க.ஆனந்தன்