மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டது மொழிபேரினவாதத் திற்கு வழிவகுத்துவிட்டது என்று தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல உளறிக் கொட்டி யிருக்கிறார். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடிய மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் பேசும் போது, ஆளுநர் இப்படி கூறியதுதான் உச்சக்கட்ட கொடுமையாகும். தமிழ்நாடு என்று கூற மறுத்து, தமிழகம் என்றுதான் கூற வேண்டுமென அடம் பிடித்தவர் இந்த ஆளுநர். மனோன்மணியம் சுந்தர னார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த...’ என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கண மும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற வரிகள் இவர் பங்கேற்ற விழாவில் தவிர்த்து விட்டு பாடப்பட்டது. ஆர்.என்.ரவி அக்மார்க் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. அகண்ட பாரதம் என்று கூறி அவ்வப்போது அண் டாவை உருட்டும் திருக்கோஷ்டியை சேர்ந்தவர். மொழிவழி மாநிலங்கள் என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைச்சல். இதுகுறித்த வரலாறு எதுவும் தெரியாதவர் இவர். நாடு விடுதலையடைந்த பிறகு, மாநிலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டால்தான் இந்தியாவின் பன்முகப் பண்பாடும், ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும் என்று முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். விடுதலைப் போராட்ட காலத்திலேயே இந்த முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தது பொதுவுடமை இயக்கம். ஆனால், மொழிவழி மாநிலங்கள் கூடாது. இன்னும் சொல்லப் போனால், மாநிலங்கள் என்ற கட்டமைப்பே தேவையில்லை. அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட வேண்டும். ஜனபாத அமைப்புகளை உருவாக்கினால் போதும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தோட்டம். இதோ அவர்களது குருஜி கோல்வால்கர் கூறுவதைக் கேளுங்கள். “மொழி வழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாயகரமான பிரிவுக்கு வழிவகுத்துவிடும். இதற்கு பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய அளவிலான ஜனநா யக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து ஜனபாத அமைப்பு களை உருவாக்க வேண்டும்” என்றார் அவர்.
அதாவது, மொழிவழி மாநிலங்கள் கூடாது. அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மற்றும் இந்தி மேலாதிக்கத்திற்கு பாதம் தாங்குகிற ஜனபாத அமைப்புகள் இருந்தால் போதும் என்பது தான் அவர்கள் நிலைப்பாடு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மொழிவழி மாநிலங்களை ஆதரித்த காங்கிரஸ் கட்சி, நாடு விடுதலை பெற்ற பிறகு அதை முழுமையாக ஏற்கவில்லை. கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டியது போல, அந்தக் கட்சிக்குள் இருந்த ராஜாஜி போன்ற வர்கள் தட்சிணப் பிரதேசம் அமைக்கலாம் என்று பேசத் துவங்கினார்கள். இந்த பின்னணியில், மொழிவழி மாநிலங்கள் நவீன-மதச்சார்பற்ற குடியரசின் ஒரு பகுதி என்று உரத்து முழங்கியவர் மார்க்சிய மாமேதை இ.எம்.எஸ். நம்பூதிரிபாத். இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மொழி பேசுகிற, பல்வேறு தேசிய இனங் களை மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மொழிவழி மாநிலங்களே சிறந்த தீர்வாக அமையும் என்பதுதான் பொதுவுடமை இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை. 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி 63 இடங்களை பெற்றது. நியாயமாக, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால் ராஜாஜி கொல்லைப்புற வழியாக உள்ளே நுழைந்து கட்சித் தாவிகளில் துணை யோடு, ஆட்சி அமைத்தார். அன்றைய சென்னை மாகா ணத்தின் கேரளத்தின் ஒரு பகுதி, ஆந்திராவின் ஒரு பகுதி, கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந் திருந்தது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவ ராக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி மொழிவழி மாநி லங்கள் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தார். அப்போது, சென்னை மாகாண சட்டமன்றத்திலிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் கள் தமிழிலும், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மலை யாளத்திலும், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் தெலுங்கிலும் இதே கோரிக்கையை முழங்கி னர். இத்தகைய தொடர் போராட்டத்தின் விளை வாகவே, இந்தியாவின் முதல் மொழிவழி மாநில மாக ஆந்திர மாநிலம் அமைந்தது. இதற்கான போராட்டத்தில் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்த் தியாகம் செய்தார்.
மொழிவழி மாநிலங்களாக சென்னை மாகாணம் பிரிக்கப்பட்ட போதும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார். உண்ணாவிரதப் பந்தலுக்கே வந்து கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார் தோழர் பி.ராமமூர்த்தி. சங்கரலிங்கனார் கட்சியைச் சேர்ந்தவர்களே உண்ணாவிரதப் பந்தலைப் பிரித்து எறிந்த போது, அவரது போராட்டத்திற்கு காவலுக்கு நின்றவர்கள் கம்யூனிஸ்ட்கள். 77 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதம் இருந்த சங்கரலிங்கனார் உயிர்த் தியாகம் செய்தார். தனது உடலை கம்யூனிஸ்ட்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவரது இறுதிக் கோரிக்கையாக இருந்தது. அதன்படி, அவரது உடலைப் பெற்று கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி நிகழ்ச்சிகளை நடத்தினர். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்தத் தலைவர் களின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. அதேபோல, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்து டன் இணைப்பதற்கான போராட்டத்தில் முன்னி ன்றவர்கள் மும்மணிகள் என்ற அழைக்கப்பட்ட னர். காங்கிரஸ் தலைவர் மார்ஷல் நேசமணி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஜி. மணி, டி.மணி ஆகியோரே அந்தத் தலைவர்கள். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் கொண்டுவந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி. அந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் அவையில் இருக்க முடியாத சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தோழர் பூபேஷ் குப்தா தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரும் தீர்மானத்தை கட்சியின் சார்பில் முன்மொழிந்து பேசினார். அவையிலிருந்த அண்ணா உள்ளிட்டவர்கள் ஆதரித்துப் பேசினார்கள். அதன்பின், அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மாகாணம் என்ற பெயர் மாற்றப்பட்டு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வரலாறு எதுவும் தெரியாத ஆளுநர் ரவி, கிண்டி மாளிகையில் அமர்ந்து கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக பஞ்சா பிலும், அசாமிலும் ரத்த சிந்திப் போராடியவர்கள் கம்யூனிஸ்ட்கள். இன்றைக்கும் கூட, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் உரிமைக்காக போராடி கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தாரிகாமியின் உயிருக்கு பிரிவினைவாதிகள் குறி வைக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணை யில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட மொழி களை ஒன்றிய அலுவல் மொழியாக்க வேண்டும் என குரல் கொடுத்து கொண்டிருப்பவர்கள் கம்யூ னிஸ்ட்கள். நாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் தடையின்றி பேசவும், அதை உடனுக்குடன் மொழிபெயர்க்கவும் வேண்டும் என்பதும் கம்யூனிஸ்ட்கள் கோரிக்கையாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல் என்றெல்லாம் பாஜக பரிவாரம் படை யெடுப்பது இந்தியாவை ஒற்றுமைப்படுத்து வதற்காக அல்ல. மதமாகவும், சாதியாகவும் பிரித்து வைத்து அதிகாரத்தையும் ஆதிக்கத்தை யும் நிலைநிறுத்துவதற்காகவே ஆகும். ஆனால் மொழிவழி மாநிலத்திற்கான போரை முன் னெடுத்த கம்யூனிஸ்ட் இயக்கம் மாநிலங்களின் உரிமைகளுக்காக போர்க்களத்தில் முன்முனை யில் நின்று, தொடர்ந்து போராடும். இது, இந்தியா வின் ஒற்றுமை வேருக்கு நீர் வார்க்கும் போராட்ட மாகும்.